காயல்பட்டினம் நகரின் அனைத்துப் பள்ளிகளைச் சார்ந்த 50 மாணவ-மாணவியருக்கு பள்ளிச்சீருடை மற்றும் பாடக்குறிப்பேடுகளை, இக்ராஃவின் ஒருங்கிணைந்த இலவச வினியோகத் திட்டத்தின் கீழ் வழங்கிட ஜெய்ப்பூர் காயல் நல மன்றம் (ஜக்வா) அமைப்பின் பொதுக்குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
பொதுக்குழுக் கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
எமது ஜெய்ப்பூர் காயல் நல மன்றம் - ஜக்வா அமைப்பின் பொதுக்குழுக் கூட்டம் 30.01.2011 அன்று, மன்றத் தலைவர் ஹாஜி எஸ்.ஏ.முஸ்தஃபா கமால் தலைமையில், ஹாஜி எம்.எம்.ஜஹாங்கீர் இல்லத்தில் நடைபெற்றது. ஹாஜி எஸ்.ஏ.உவைஸ், மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.அப்துல் வதூத் ஃபாஸீ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தலைமையுரை:
மன்ற ஒருங்கிணைப்பாளர் ஹாஃபிழ் எம்.ஏ.செய்யித் முஹம்மத் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். கூட்டத்தின் நோக்கம் குறித்து தலைவர் விளக்கிப் பேசினார்.
செயலர் உரை:
பின்னர் மன்றச் செயலாளர் எம்.ஏ.எஸ்.செய்யித் அபூதாஹிர் உரையாற்றினார். அவர் தனதுரையில், இதுவரை சந்தா செலுத்தாத மன்ற உறுப்பினர்கள் விரைந்து செலுத்தி, நகர்நலப் பணிகளில் ஜக்வா அமைப்பும் சிறப்புற களமிறங்க முழு ஒத்துழைப்பளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
கல்வி உதவித்தொகை குறித்த விழிப்புணர்வு தேவை...
அத்துடன், மத்திய - மாநில அரசுகள் வழங்கும் சிறுபான்மையினருக்கான கல்வி உதவித் தொகையை நமதூர் மாணவ-மாணவியர் நன்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டதுடன், வந்திருந்த உறுப்பினர்களுக்கு அதுகுறித்து ஆர்வமூட்டினார். இதற்காக நமதூர் மாணவ-மாணவியரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் ஹாஜி எஸ்.அய்.புகாரீ அவர்களை இக்கூட்டம் மனதாரப் பாரட்டுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இக்ராஃவின் திட்டங்களில் ஜக்வாவும் பங்கேற்பு:
நிறைவாக, மன்ற ஒருங்கிணைப்பாளர் ஹாஃபிழ் எம்.ஏ.செய்யித் முஹம்மத் உரையாற்றினார். உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம் செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்த அவர், ஜக்வாவும் அதில் முழுமையாகப் பங்கேற்க வேண்டுமென வலியுறுத்தினார். அவரது இக்கருத்தை கூட்டம் மனதார ஏற்றுக்கொண்டது.
ஜக்வா அமைப்பின் சார்பில் இதுவரையிலும் இக்ராஃவில் உறுப்பினர்களான அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்ட அவர், இன்னும் இக்ராஃவில் உறுப்பினராகாதவர்கள் விரைந்து உறுப்பினர்களாகிடுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, மவ்லவீ ஹாஃபிழ் அப்துல் வதூத் ஃபாஸீ துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது, அல்ஹம்துலில்லாஹ்!
தீர்மானம் 1 - இக்ராஃ மூலம் நகர மாணவ-மாணவியருக்கு இலவச வினியோகம்:
நமதூர் மாணவ-மாணவியருக்கு இவ்வாண்டு முதல் இக்ராஃ மூலம் ஒருங்கிணைந்த முறையில் பள்ளிச் சீருடைகள், பாடக் குறிப்பேடுகளை இலவசமாக வழங்கும் திட்டத்தில் ஜக்வா இணைய கூட்டம் ஒப்புதலளிக்கிறது.
இன்ஷாஅல்லாஹ் இவ்வாண்டு நமதமைப்பின் சார்பில் 25 மாணவ-மாணவியருக்கு சீருடைகளும், 25 மாணவ-மாணவியருக்கு பாடக்குறிப்பேடுகளும் வழங்க இக்கூட்டம் அனுமதிக்கிறது.
தீர்மானம் 2 - புற்றுநோய் விழிப்புணர்வுக்கான ஜித்தாவின் குறும்படத்திற்கு வாழ்த்து:
ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் முயற்சியால் எடுக்கப்படும் புற்றுநோய் விழிப்புணர்வு குறும்படம் (documentary) வெற்றி பெற வாழ்த்துவதுடன், இன்ஷாஅல்லாஹ் தன்னாலியன்ற ஒத்துழைப்பை வழங்க கூட்டம் ஒப்புதலளிக்கிறது.
தீர்மானம் 3 - புற்றுநோயாளிகள் கணக்கெடுப்புக்கு நகர மக்கள் ஒத்துழைக்க கோரிக்கை:
சஊதி அரபிய்ய காயல் நல மன்றங்களான ரியாத் காஹிர் பைத்துல்மால், தம்மாம் காயல் நற்பணி மன்றம், ஜித்தா காயல் நற்பணி மன்றம் ஆகிய அமைப்புகளிணைந்து, இக்ராஃ மூலம் நகரில் மேற்கொள்ளும் புற்றுநோயாளிகள் கணக்கெடுப்பிற்காக வீடு வீடாக செல்லவிருக்கும் வாவு வஜிஹா வனிதையர் கல்லூரியின் முன்னாள் மாணவியரடங்கிய தன்னார்வலர்களுக்கு நமதூர் மக்கள் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமென இக்கூட்டம் வேண்டுகோள் விடுக்கிறது.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
ஹாஜி எஸ்.ஏ.முஸ்தஃபா கமால்,
தலைவர்,
ஜெய்ப்பூர் காயல் நல மன்றம் - ஜக்வா,
ஜெய்ப்பூர், ராஜஸ்தான் மாநிலம். |