தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற மார்ச் 1-ந்தேதி முதல் மின் கட்டண கணக்கெடுப்பு, வசூல் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தூத்துக்குடி மின் பகிர்மான மேற்பார்வை செயற்பொறியாளர் (பொறுப்பு) ப.தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
குறைந்த மின் அழுத்த இணைப்புகளுக்கு மின் கட்டண கணக்கிடும் பணி மற்றும் வசூல் செய்வதில் தற்போதுள்ள நடைமுறையில் மாற்றம் செய்ய மின்சார வாரியம் உத்தேசித்து உள்ளது. அதன்படி மாதம் முழுவதும் வேலை நாட்களில் பணம் செலுத்தும் வகையில் புதிய திட்டத்தை தூத்துக்குடி மின் பகிர்மான வட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் அமல்படுத்தப்பட உள்ளது. தற்போது மாதந்தோறும் 16-ந்தேதி முதல் மின்சாரம் கணக்கெடுக்கும் பணியும், மாதந்தோறும் 1-ந் தேதி முதல் வசூல் செய்யும் முறை நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த நடைமுறை அடுத்த மாதம் (மார்ச்) 1-ந் தேதி முதல் மாதம் கடைசி வரை மின்சாரம் கணக்கெடுக்கும் பணி நடத்தப்படும்.
மின் கணக்கெடுக்கும் பணி முடிந்த 2-வது நாளில் இருந்து மாதம் முழுவதும் உள்ள வேலை நாட்களில் பணம் கட்டும் முறை அமல்படுத்தப்பட உள்ளது. மின் கட்டணம் கணக்கெடுத்த நாளில் இருந்து 20 நாட்களுக்குள் பணம் செலுத்த பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதன் மூலம் நீண்டநேரம் காத்திருப்பது தவிர்க்கப்பட்டு எளிதாக மின்சார கட்டணம் செலுத்த ஏதுவாகும்.
எனவே மின் நுகர்வோர்கள் தங்களது மின் கட்டணத்தை கணக்கீடு செய்த நாளில் இருந்து 20 நாட்களுக்குள் செலுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். உதாரணமாக ஒரு வீட்டில் 7-ந் தேதி மìன்சாரம் கணக்கெடுக்கப்பட்டால், மின் கட்டணத்தை அதே மாதம் 26-ந் தேதிக்குள் கட்ட வேண்டும். அதுபோல கட்ட தவறினால் அடுத்த நாள் மின்சப்ளை துண்டிக்கப்படுவதோடு, அபராத தொகையும் வசூலிக்கப்படும். முன்பிருந்தது போலவே இரு மாதத்திற்கு ஒரு முறை கணக்கீடு செய்யும் முறைதான் இந்த முறையிலும் பின்பற்றப்படும்.
ஆனால் கணக்கெடுப்பு 16-ந் தேதிக்கு பதிலாக 1-ந் தேதி தொடங்கும். எனவே மின் நுகர்வோர்கள் தங்களது மின் அளவு அட்டையை மீட்டர் அருகிலே வைத்திட வேண்டும். எனவே மாதம் முழுவதும் வேலை நாட்களில் பணம் செலுத்தும் வசதியினை பயன்படுத்தி, இந்த புதிய திட்டத்திற்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு மின் நுகர்வோர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross