காயல்பட்டினத்தில் புற்றுநோயாளிகள் குறித்த தகவல்களைச் சேகரிக்கும் பொருட்டு, சஊதி அரபிய்யாவிலுள்ள ரியாத், ஜித்தா, தம்மாம் காயல் நற்பணி மன்றங்கள் இக்ராஃ கல்விச் சங்கத்துடன் இணைந்து செயல்திட்டம் வகுத்து வருகின்றனர்.
இதுகுறித்து இக்ராஃ நிர்வாகியும், செயல்திட்ட இயக்குனருமான ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
நமதூரில் சமீப காலமாக கேன்சர் - புற்றுநோய் எனும் கொடிய உயிர்க்கொல்லி நோய் பரவி, அனைவரையும் அச்சுறுத்தி வருவது நாமறிந்ததே! இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இதற்கான காரணங்களைக் கண்டறியவும் நகரின் பல்வேறு நல அமைப்புகள் பல வழிகளிலும் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
டாக்டர் மாசிலாமணியுடன் கலந்தாலோசனை:
அதன் ஒரு பகுதியாக, சஊதி அரபிய்யாவிலுள்ள ரியாத், தம்மாம், ஜித்தா காயல் நல மன்றங்களைச் சார்ந்த மருத்துவர்கள் மற்றும் நிர்வாகிகள், ரியாதிலுள்ள மன்னர் ஸஊத் பல்கலைக் கழகத்தின் பேராசிரியரும், புற்றுநோய் நிபுணரும், விஞ்ஞானியுமான டாக்டர் மாசிலாமணி அவர்களைச் சந்தித்து இதுகுறித்து நீண்ட நேரம் கலந்தாலோசனை செய்தனர்.
இக்ராஃ மூலம் புற்றுநோயாளிகள் கணக்கெடுப்பு:
அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, முதற்கட்டப் பணியாக நகரில் பரவி வரும் புற்றுநோய் பாதிப்பு குறித்த முழுமையான புள்ளிவிபரங்களை சேகரிக்குமாறு டாக்டர் அறிவுறுத்தியதன் பேரில், ரியாத் காஹிர் பைத்துல்மால், தம்மாம் காயல் நற்பணி மன்றம், ஜித்தா காயல் நற்பணி மன்றம் ஆகிய சஊதி அரபிய்யா நாட்டின் மூன்று காயல் நல மன்றங்களும் இணைந்து, இந்த சர்வேயை உடனடியாக மேற்கொள்வதெனவும், சர்வேயை நடத்திட இக்ராஃ கல்விச் சங்கத்தைக் கேட்டுக்கொள்வதெனவும் முடிவு செய்து, இக்ராஃவிற்கு கோரிக்கைக் கடிதத்தை அனுப்பின.
இக்ராஃ நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை:
அக்கடிதத்தைப் பெற்றுக்கொண்ட இக்ராஃ நிர்வாகி, இக்ராஃவின் பதிவு செய்யப்பட்ட செயல்திட்டத்தில் இத்திட்டம் குறிப்பிடப்படாததால், இதுகுறித்து இக்ராஃவின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு அக்கடிதத்தை அவசரச் செய்தியாக அனுப்பி வைத்து, அவர்களனைவரின் கருத்துக்களையும் கேட்டிருந்தார்.
இத்திட்டம் இக்ராஃவின் செயல்திட்டத்தில் இல்லையெனினும், இதன் முக்கியத்துவம், அவசரம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், இன்று வாழ்ந்துகொண்டிருப்போரையும், நமது வருங்கால சந்ததியினரையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நமக்குள்ளது என்பதாலும், இது கடினமான பணியாக இருந்தாலும் இக்ராஃ சிரமேற்று இந்த கேன்சர் சர்வேயை மேற்கொள்ளலாம் என ஒட்டுமொத்தமாக கருத்து தெரிவித்தனர்.
அதனடிப்படையில் இக்ராஃ நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மத், இந்த கேன்சர் சர்வேயை மேற்கொள்வதற்கான ஆயத்தமாக, இதற்குப் பொருத்தமான சிலரைத் தேர்ந்தெடுத்து, ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
ஆலோசனைக் கூட்டம்:
அதனடிப்படையில், 01.02.2011 செவ்வாய்க்கிழமை இரவு 08.30 மணிக்கு, தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதியும், இக்ராஃ செயற்குழு உறுப்பினருமான ஹாஜி ஏ.ஆர்.தாஹா அவர்களின் தலைமையில், இக்ராஃ கூட்ட அரங்கில் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ஹாஜி வாவு எஸ்.ஏ.ஆர்.அஹ்மத் இஸ்ஹாக் அஸ்ஹரீ கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். பின்னர், கூட்டத்தின் நோக்கம் குறித்தும், கல்விக்கான அமைப்பான இக்ராஃவின் பதிவு செய்யப்பட்ட செயல்திட்டத்தில் இந்த அம்சம் இல்லையெனினும், வயது வேறுபாடின்றி உயிர்களைப் பலி வாங்கிக் கொண்டிருக்கும் இக்கொடிய புற்றுநோயை இறையருளால் களையெடுக்க வேண்டியதன் அவசியத்தை மனதிற்கொண்டே - கடினமான பணியென்றாலும் இந்த கேன்சர் சர்வேயை மேற்கொள்ள இக்ராஃ பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது எனவும்,
இதில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு, இந்த சர்வேயை முழுமையாகப் பெற வேண்டும் என்றும், இதற்காக ஆகும் செலவுகளை மூன்று காயல் நல மன்றங்களும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், இந்த சர்வே இக்ராஃவின் நேரடி கண்காணிப்பில் நடைபெறும் என்றும், இதற்காக பின்வருமாறு கமிட்டி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்:-
சர்வே செயல்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள்:
ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத்
ஆசிரியர் எஸ்.எம்.அஹ்மத் சுலைமான்
செயல்திட்டக் குழுவினர்:
ஹாஜி ஏ.ஆர்.தாஹா
ஹாஜி ஏ.எம்.இஸ்மாஈல் நஜீப்
சோனா எஸ்.எம்.டி.ஷாஹுல் ஹமீத்
கே.எம்.டி.சுலைமான்
ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ்
எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ்
எஸ்.அப்துல் வாஹித்
கே.ஜே.ஷாஹுல் ஹமீத்
ஹாஜி வாவு எஸ்.ஏ.ஆர்.அஹ்மத் இஸ்ஹாக்
ஹாஜி எஸ்.அய்.புகாரீ
ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ
எஸ்.எச்.அமீர் சுல்தான்
கோமான் மீரான்
ஹாஜி எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர்
ஹாஜி என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன்
இவ்வாறு சர்வே கமிட்டி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக ஏ.தர்வேஷ் முஹம்மத் தெரிவித்தார். பின்னர், மருத்துவர்களால் அங்கீகரிக்கப்பட்ட - கேன்சர் சர்வேக்கான கேள்வி மாதிரிப் படிவத்தை அவர் அனைவருக்கும் வாசித்துக் காண்பித்தார்.
அதனைத் தொடர்ந்து, இந்த சர்வேயை மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள், சர்வே செய்கையில் எதிர்பார்க்கப்பட வேண்டிய சாதக-பாதகங்கள், சிரமங்கள், கிடைக்கப் பெறும் தகவல்களை மிகுந்த ரகசியத்துடன் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து நீண்ட நேரம் ஆழமான கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது. இறுதியில் பின்வருமாறு செய்வதென முடிவெடுக்கப்பட்டது:-
(1) சர்வேயின் நோக்கம், அவசியம் குறித்த விளக்கப் பிரசுரம் 15,000 அச்சிட்டு, அவற்றை தன்னார்வலர்கள் மூலம் கதவு கதவாகச் சென்று நகரின் அனைத்து வீடுகளிலும் கிடைக்கச் செய்யவும்,
(2) சர்வேக்கான கேள்விப்படிவம் 1,000 அச்சிடவும்,
(3) சர்வேக்கான தன்னார்வலர்களை (Volunteers) ஆயத்தம் செய்யும் பொறுப்பாளர்களாக ஹாஜி வாவு எஸ்.ஏ.ஆர்.அஹ்மத் இஸ்ஹாக், ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோரை நியமிக்கவும்,
(4) சர்வே பணிக்கு அந்தந்த பகுதிகளைச் சார்ந்த - பொதுநல ஆர்வமுள்ள மூத்த பெண்களின் ஒத்துழைப்பைக் கேட்டுப் பெறல்... அவ்வாறான பெண்களையும், தன்னார்வப் பணியாளர்களாக எதிர்பார்க்கப்படும் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் முன்னாள் மாணவியரையும் பகுதி வாரியாக இனங்கண்டு, அவர்களின் பட்டியலை 04.02.2011 அன்று இக்ராஃ அலுவலகத்தில் செயல்திட்ட ஒருங்கிணைப்பாளரிடம் சர்வே செயல்திட்டக் குழுவிலுள்ள உறுப்பினர்கள் ஒப்படைக்கவும்,
(5) 06.02.2011 அன்று மாலை 04.30 மணிக்கு காயல்பட்டினம் சென்ட்ரல் மெட்ரிக் மேனிலைப்பள்ளியில், மேற்படி அனைத்துப் பகுதிகளைச் சார்ந்த மூத்த பெண்கள் மற்றும் தன்னார்வப் பணியாளர்களை இணைந்தமர்த்தி, சர்வே குறித்த முழு விளக்கங்களையும் அவர்களுக்கு விரிவாக எடுத்துக் கூறவும்,
(6) நகரின் உள்ளூர் தொலைக்காட்சி அலைவரிசைகளில், இந்த சர்வேக்கு ஒத்துழைப்பு கோரும் வாசகங்களை தொடர்ந்து ஓடச்செய்யவும்,
(7) 11.02.2011 வெள்ளிக்கிழமையன்று நடைபெறும் நகரின் இரண்டு ஜும்ஆ உரைகளிலும் இந்த சர்வேயின் முக்கியத்துவம், அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பளிக்க வேண்டியதன் அவசியம் குறித்து முழு உரை நிகழ்த்த இரு பள்ளிகளின் கத்தீப்களையும் கேட்டுக்கொள்வதெனவும் முடிவு செய்யப்பட்டது.
கே.எம்.டி.சுலைமான் நன்றி கூற, வாவு எஸ்.ஏ.ஆர்.அஹ்மத் இஸ்ஹாக் அஸ்ஹரீயின் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |