நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் ஏற்கனவே கணக்கெடுக்கும் பணி முடிந்து விட்ட நிலையில், 2வது கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி 9ம் தேதி துவங்கி 28ம் தேதி வரை நடக்கிறது. கணக்கெடுக்கும் பணியில் நாடு முழுவதும் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். கணக்கெடுக்கும் ஊழியர்களுக்கான அடையாள சின்னம் (லோகோ) நேற்று வெளியிடப்பட்டது. இதை மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் திறந்து வைத்தார்.
பின்னர், நிருபர்களிடம், மக்கள் தொகை கணக்கெடுப்பு துறை கமிஷனர் சந்திர மவுலி கூறியதாவது:
மக்கள் தொகை கணக்கெடுப்புடன் முதல் முறையாக தேசிய மக்கள் தொகை பேரேடும் தயாரிக்கப்படுகிறது. ஒவ்வொரு குடிமகனை பற்றிய விவரங்களையும் இதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும். கைரேகை, விழித்திரை அமைப்பு போன்ற விவரங்களும் சேகரிக்கப்படுகிறது. பின்னர், மக்களுக்கு அடையாள அட்டை வழங்க இது உதவியாக இருக்கும்.
சட்ட விரோதமாக இந்தியாவில் குடியேறிய வங்கதேசத்தவரையும் கணக்கெடுப்பில் சேர்த்துக் கொள்ளப்படும். இடம் பெயர்ந்து செல்வோரின் மக்கள் தொகையும் பிப்ரவரி 28ம் தேதி இரவு விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், துறைமுகங்கள், பஸ் நிலையங்களில் கணக்கெடுக்கப்படும்.
இவ்வாறு சந்திர மவுலி கூறினார்.
தகவல்:
தினகரன் |