தமிழக அரசின் இலவச எரிவாயு இணைப்பு மற்றும் அடுப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் காயல்பட்டினத்திலுள்ள 760 பயனாளிகளுக்கு எரிவாயு அடுப்புகளை, திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் நேற்று வழங்கினார்.
இதற்கான விழா நேற்று காலை 11.00 மணிக்கு, காயல்பட்டினம் இளைஞர் அய்க்கிய முன்னணி அருகில் நடைபெற்றது. காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர் எஸ்.அய்.ரஃபீக் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் குருவித்துறைப் பள்ளி ஜமாஅத் நிர்வாகி ஹாஜி எஸ்.எம்.கபீர், இளைஞர் அய்க்கிய முன்னணி நிறுவனர்களில் ஒருவரான எஸ்.இ.முஹம்மத் அலீ ஸாஹிப் (டி.எம்.), நகர்மன்ற துணைத்தலைவர் கஸ்ஸாலி மரைக்கார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
ஜாவியா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஸலாஹுத்தீன் மளாஹிரீ கிராஅத் ஓதி விழாவைத் துவக்கி வைத்தார். நகர தி.மு.க. செயலர் மு.த.ஜெய்னுத்தீன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். வட்ட வழங்கல் அலுவலர் நம்பிராயன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்கள் எம்.என்.சொளுக்கு, திருத்துவராஜ், இளைஞர் அய்க்கிய முன்னணி செயலர் ஹாஜி எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர், நகர்மன்ற உறுப்பினர் எஸ்.அய்.ரஃபீக் ஆகியோர் உரையாற்றினர்.
விழாவில், திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றியதுடன், காயல்பட்டினம் நகரைச் சார்ந்த 760 பயனாளிகளுக்கு தமிழக அரசின் இலவச எரிவாயு அடுப்புகளை வழங்கினார்.
விழாவில், நகரின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் திரளான பெண்களும், ஆண்களும் கலந்துகொண்டனர்.
மேடையில் 40 பயனாளிகளுக்கு இலவச எரிவாயு அடுப்பு வழங்கப்பட்டது. பின்னர், எஞ்சிய பயனாளிகளுக்கு அருகிலுள்ள பெரிய முத்துவாப்பா தைக்காவில் வினியோகிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அனைத்துப் பகுதிகளைச் சார்ந்த பயனாளிகளும் அங்கு பெருந்திரளாகக் கூடிவிட்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் முறையான முன்னேற்பாடுகள் செய்யப்படாதிருந்த நிலையில், பயனாளிகளிடையே கடும் தள்ளுமுள்ளு நிலவியது. இதனைக் கண்ணுற்ற எம்.எஸ்.பி.முஹம்மத் இஸ்மாஈல் தலைமையிலான தைக்கா நிர்வாகிகள், வட்ட வழங்கல் அலுவலர் நம்பிராயனுடன் கலந்தாலோசனை செய்து தேவையான வசதிகளை செய்துகொடுத்ததால் பிரச்சினை முடிவுக்கு வந்து, அதன்பின் மாலை 05.00 மணி வரை அமைதியான முறையில் வினியோகம் நடைபெற்றது. |