இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை காயல் நல மன்றம் (காவாலங்கா), காயல்பட்டினம் அய்க்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்புகளின் சார்பில் நிதியுதவியளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, காவாலங்கா சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
இலங்கையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சார்பில் நிதி திரட்டப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் நிதியளிப்பு நிகழ்ச்சி இலங்கை கொழும்பு நகரிலுள்ள சம்மாங்கோட் பள்ளியில் 25.01.2011 அன்று மாலை அஸ்ர் தொழுகைக்குப் பின் நடைபெற்றது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தலைவர் அஷ்ஷெய்க் எம்.அய்.எம்.ரிஸ்வீ முஃப்தீ சிறப்புரையாற்றினார். சம்மாங்கோட் பள்ளி சார்பில், கடந்த காலங்களில் ஏற்பட்ட ஆழிப்பேரலை - சுனாமி, மூதூர் அனர்த்தங்களுக்கு உதவிகள் செய்யப்பட்டதை அவர் தனதுரையில் புகழ்ந்துரைத்தார்.
சம்மாங்கோட் பள்ளியின் விரிவாக்க கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சமயத்திலும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வேண்டுகோளுக்கிணங்க, இலங்கை காயல் நல மன்றம் (காவாலங்கா) அமைப்புடன் இணைந்து பள்ளி ஜமாஅத்தார் வழங்கிய நன்கொடை குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இணைச் செயலாளர் அஷ்ஷெய்க் தாஸிம் மவ்லவீ சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில், முஸ்லிம் கலாச்சார அமைச்சின் இயக்குனர் அல்ஹாஜ் நவவீ முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்வில், சம்மாங்கோட் பள்ளிவாசல் ஜமாஅத்தார் சார்பில் பதினான்கு லட்சத்து, முப்பத்தாறாயிரத்து, முன்னூற்றென்பது ரூபாயை பள்ளி அறங்காவலர்களான ஃபைவ் ஸ்டார் அமீர் சுல்தான் ஹாஜி, ஈஸ்டர்ன் அன்வர் ஹாஜி ஆகியோர் ரிஸ்வீ முஃப்தீயிடம் கையளித்தனர்.
காவாலங்கா உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட்ட நான்கு லட்சத்து அய்ம்பத்தொன்பதாயிரம் ரூபாயையும், காயல்பட்டினம் அய்க்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் ஒரு லட்சத்து அய்ம்பதாயிரம் ரூபாயையும் சேர்த்து மொத்தம் ஆறு லட்சத்து ஒன்பதாயிரம் ரூபாயை, காவாலங்கா துணைச் செயலாளர் ஹாஜி பி.எம்.ரஃபீக், பொருளாளர் ஹாஜி எஸ்.எம்.பி.இஸ்மாஈல், துணைப் பொருளாளர் ஹாஜி ஏ.எஸ்.புகாரீ, செயற்குழு உறுப்பினர்கள் ஹாஜி எம்.என்.மக்கீ, எஸ்.ஷாஹுல் ஹமீத், ஓ.எல்.எம்.ஆரிஃப், பி.எம்.நஜ்முத்தீன் ஆகியோர் முன்னிலையில், காவாலங்கா தலைவர் ஹாஜி எம்.எஸ்.ஷாஜஹான், துணைத்தலைவர் ஹாஜி டில்லி முஹ்யித்தீன் ஆகியோர் கையளித்தனர்.
முன்னதாக, காவாலங்கா தலைவர் ஹாஜி எம்.எஸ்.ஷாஜஹான் அவர்கள் அனைத்துலக காயல் நல மன்றங்களுக்கும் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதை ஏற்று, காயல்பட்டினம் அய்க்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் தலைவர் அப்துல் அஜீஸ் அவர்களின் முயற்சியில் துவக்கமாக நிதியுதவியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிவாரண நிதிக்காக உதவியளித்த அனைத்து காயலர்களுக்கும், காயல்பட்டினம் அய்க்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பிற்கும் காவலங்கா தனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
A.S.புகாரீ,
துணைப் பொருளாளர்,
இலங்கை காயல் நல மன்றம் (காவாலங்கா),
கொழும்பு, இலங்கை. |