நாட்டின் தனிநபர் வருமானம் 2009-10ம் நிதி ஆண்டில் 14.5 சதவீதம் அதிகரித்ததாக மத்திய அரசின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. மத்திய புள்ளியியல் அமைப்பின் (சிஎஸ்ஓ) அறிக்கையில் கூறியதாவது:
2008-09ம் நிதி ஆண்டில் நாட்டின் தனிநபர் ஆண்டு வருமானம் ரூபாய் 40,605 ஆக இருந்தது. அதற்கு அடுத்த நிதி ஆண்டான 2009-10ல் அது
ரூபாய் 44,345 ஆக அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டு இருந்தது. ஆனால், கணிப்பை மீறி தனி நபர் வருமானம் ரூபாய் 46,492 ஆக உயர்ந்தது. அரசின் கணிப்பை விட ரூபாய் 2,000க்கு மேல் அதிகம்.
எனினும், 2004-05ம் நிதி ஆண்டில் இருந்த பொருட்களின் விலைவாசியுடன் ஒப்பிடுகையில் தனிநபர் வருமான உயர்வு 6 சதவீதம் மட்டுமே. பணவீக்கத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது 14.5 சதவீத வருமான உயர்வு 6 சதவீதமாக குறைந்து விடுகிறது. 2004-05ல் நாட்டின் தனிநபர் வருமானம் ரூபாய் 33,731 ஆக இருந்தது. முந்தைய ஆண்டில் அது ரூபாய் 31,801.
2004-05ம் நிதி ஆண்டின் விலை நிலவர அடிப்படையில் இந்தியப் பொருளாதாரம் 2010 மார்ச்சுடன் முடிந்த நிதி ஆண்டில் 8 சதவீதம் வளர்ந்துள்ளது. இது 2008-09ம் நிதி ஆண்டின் 6.8 சதவீத வளர்ச்சியை விட அதிகம் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நாட்டின் ஓராண்டு மொத்த வருமானத்தை மக்கள்தொகையால் வகுத்தால் சமமாக வரும் தொகையை தனிநபர் வருமானம் என்கின்றனர்.
தகவல்:
தினகரன்
|