தமிழக உள்ளாட்சித்துறை முதன்மை செயலாளர் கே.அலாவுதீன் மகள் டாக்டர் முஸ்பிரா, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் எம்.இதாயத்துல்லா மகன் டாக்டர் ரஷீத் அராபத் திருமணம், சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நேற்று நடந்தது.
திருமண விழாவில் மணமக்களை வாழ்த்தி, முதல்வர் கருணாநிதி பேசியதாவது:
இதாயத்துல்லா, அலாவுதீன் ஆகியோர் என்னை மணவிழாவுக்கு வருக வருக என்று அழைத்தார்கள். இங்கே வந்தால், இதாயத்துல்லா பேச்சை கேட்ட போது அழைத்தது மணவிழாவுக்கா அல்லது மாநாட்டுக்கா என்றே எனக்கு புரியவில்லை. இருந்தாலும், அவருடைய உரிமையுடன் கூடிய கோரிக்கை (இஸ்லாமியர்களுக்கான 3.5 சதவீத இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்த வேண்டும்) கைகழுவப்படாமல் நிச்சயமாக பரிசீலிக்கப்படும்
அதற்கான மகிழ்ச்சியை அவர்கள் தெரிவிக்கின்ற நாள் விரைவிலே வரும் என்பதை இந்த விழாவிலே நான் எடுத்துக்காட்ட கடமைப்பட்டு இருக்கிறேன். குறிப்பாக, இஸ்லாமிய பெருமக்களுடைய இல்லத்து விழாக்களில், இன்று நேற்றல்ல; நீண்ட நெடுநாட்களாக கலந்து கொள்கிற அரிய வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன். அந்த வாய்ப்புகளில் ஒன்றாக இந்த வாய்ப்பும், இன்றைக்கு அமைந்திருப்பதை எண்ணி மகிழ்கிறேன்...
நம்முடைய இதாயத்துல்லா சில கோரிக்கைகளை இங்கே வைத்து அதை நிறைவேற்ற வேண்டும் என்று மேடையில் பேசும்போது சொன்னது மாத்திரமல்ல, என் அருகே வந்து உட்கார்ந்தும் சொன்னார். நீங்கள் இவைகளை எல்லாம் நிறைவேற்ற வேண்டும் என்றார். நான் சொன்னேன், நீங்கள் பகிரங்கமாக கேட்டு விட்டீர்கள்; வெளிப்படையாக கேட்டு விட்டீர்கள். நான் வெளிப்படையாக சொல்வதற்கு முன்பு எனக்கென்று ஒரு அரசு இருக்கிறது, அந்த அரசிலே சில அமைச்சர்கள் இருக்கிறோம். எல்லோரும் கலந்து பேசி அதற்கு பிறகுதான் இதை வெளியிட முடியும். எனவே, அதுவரையிலே பொறுமையாக இருங்கள் என்று நான் சொன்னேன். அறிவிப்பு விரைவில் இருக்கும்; நினைத்தது நடக்கும். நினைத்தது நடக்கின்ற அளவுக்கு இங்கே வீற்றிருக்கின்ற மக்கள் எல்லாம், எங்களுடைய கரங்களை பலப்படுத்த வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.
இவ்வாறு கருணாநிதி பேசினார்.
தகவல்:
தினகரன் |