வாழ்வில் முன்னேற வேண்டுமானால் ஒவ்வொரு மாணவரும் தனக்கென தனி இலட்சியம் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம் என்று, நேற்று நடைபெற்ற எல்.கே. மேனிலைப்பள்ளி ஆண்டுவிழாவில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சி.நா.மகேஷ்வரன் மாணவர்களுக்கு அறிவுரை கூறினார்.
விழா நிகழ்வுகள் பின்வருமாறு:-
காயல்பட்டினம் எல்.கே. மேனிலைப்பள்ளியின் ஆண்டு விழா 28.01.2011 அன்று மாலை 05.00 மணிக்கு பள்ளி வளாகத்திலுள்ள மர்ஹூம் எஸ்.ஏ.மீராஸாஹிப் கலையரங்கத்தில் நடைபெற்றது.
பள்ளியின் ஆட்சிக்குழு தலைவர் டாக்டர் எம்.எஸ்.அஷ்ரஃப் விழாவிற்குத் தலைமை தாங்கினார். பள்ளியின் துணைத்தலைவர் ஹாஜி எஸ்.எம்.உஸைர், பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் ஹாஜி எஸ்.ஏ.அஹ்மத் முஸ்தஃபா, காயல்பட்டினம் -ஆறுமுகநேரி (கே.ஏ.) மேனிலைப்பள்ளியின் ஆட்சிக்குழு தலைவர் நாவலர் ஹாஜி எல்.எஸ்.இப்றாஹீம், நிர்வாகி எல்.கே.லெப்பைத்தம்பி, எல்.கே.துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் என்.பீர் முஹம்மத், பொதுநல ஆர்வலர்கள் ஏ.எஸ்.ஜமால் முஹம்மத் என்ற ஜமால் மாமா, திருச்சி நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் உவைஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சி.நா.மகேஷ்வரன் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
பள்ளியின் முதுகலை ஆசிரியர் அஹ்மத் ஏ.ஜே.முஸ்தஃபா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். மாணவர் ஹாஃபிழ் எம்.எச்.முஹம்மத் நூஹ் இம்ரான் கிராஅத் ஓதி விழாவைத் துவக்கி வைத்தார். தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து, பள்ளி தாளாளர் டாக்டர் எஸ்.எல்.முஹம்மத் லெப்பை வரவேற்புரையாற்றினார். பள்ளித் தலைவர் டாக்டர் அஷ்ரஃப் தலைமையுரையாற்றினார். பள்ளி தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா பள்ளியின் ஆண்டறிக்கையை வாசித்தார்.
பின்னர் சிறப்பு விருந்தினரான மாவட்ட ஆட்சியருக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் நினைவுப் பரிசு வழங்கி, சால்வை அணிவிக்கப்பட்டது.
பின்னர், மாவட்ட ஆட்சியர் சி.நா.மகேஷ்வரன் சிறப்புரையாற்றினார். அவர் தனதுரையில்,
இப்பள்ளியில் பயின்று இன்று பல துறைகளில் முன்னேறியுள்ள பெருமக்களெல்லாம், தான் கற்ற பள்ளியை மறவாமல் பல்வேறு உதவிகளை தொடர்ந்து செய்து கொண்டிருப்பதை தலைமையாசிரியர் சமர்ப்பித்த ஆண்டறிக்கை மூலம் அறிந்து மிக்க மகிழ்ச்சியடைந்தேன். எத்தனையோ வருடங்களுக்கு முன்னாள் இப்பள்ளியில் கற்றிருந்தும், இன்று வரை மறவாமல் பள்ளியுடன் தொடர்போடிருந்து, பள்ளி நலனில் அக்கறை காட்டும் அவர்களின் செயல் மிகுந்த பாராட்டுக்குரியதாகும்.
மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் தான் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் இருக்க வேண்டும். அத்துடன், தனக்கென தனியோர் இலட்சியம் வைத்துக்கொள்ள வேண்டும். அக்காலத்தில், ஊருக்குள் அதிகாரிகள் ஜீப்பில் வந்தால் அதைப் பார்ப்பதற்காக ஒரு கூட்டம் இருக்கும்... அக்கூட்டத்தில் நானும் ஒருவன்... அந்த ஜீப் சென்று பல மணி நேரம் சென்ற பிறகும் ஜீப்பின் நிறம், அதன் மேலிருந்த சிவப்பு விளக்கு என எங்களுக்குள் நீண்ட நேரம் அந்த ஜீப்பைப் பற்றியே பேசிக்கொண்டிருப்போம்... அப்போது என் சிந்தனையில் பிறந்த ஓர் எண்ணம், நானும் ஒருநாள் ஜீப்பில் ஊரை பவனி வரவேண்டும்... அதற்கான தகுதியைப் பெற வேண்டும் என்று விளையாட்டாய் எண்ணினேன்... இன்று அது நிறைவேறியிருக்கிறது.
இதை நான் தற்பெருமைக்காக சொல்லவில்லை... நான் ஒரு விவசாயியின் மகன்... நான் இப்போது ஒரு நல்ல பொறுப்பில் இருக்கிறேன்... என் எண்ணமெல்லாம், என் மகன் என்னை விட இரண்டு மடங்கு அதிகமாக முன்னேற வேண்டும் என்பதுதான்... இது எப்போது சாத்தியமாகும் என்றால் என் மகனும் என்னைப் போலவே எண்ணம் கொள்ளும்போதுதான்...
கற்கும் காலத்தில், தனக்கு கல்வியறிவைப் போதிக்கும் ஆசிரியர்களை முழுமையாக மதித்து வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறிருந்தால் மட்டுமே வாழ்வில் முன்னேற முடியும். ஆசிரியரை மதியாதோர் தம் வாழ்வில் மதிப்புகளைப் பெறுவதென்பது அரிதிலும் அரிது.
இலட்சியத்துடன் கற்றல், கற்றுத் தந்தவரையும் - கற்ற பள்ளியையும் மதித்தல் ஆகிய இவற்றுடன் இறைபக்தியும் இருக்க வேண்டும். எவ்வளவுதான் கற்றாலும் இறை பக்தியில்லையென்றால் அவன் ஒரு கொலை காரனாக, கொள்ளைக் காரனாக... இவ்வாறு குற்றவாளியாகவே நிற்பான். இறை பக்தி கொண்டவரிடம் இந்த போக்குகள் நிச்சயம் இருக்காது.
இவ்வாறு அவர் தனதுரையில் தெரிவித்தார்.
பின்னர், கடந்த கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு - பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளில் மாவட்ட அளவிலும், நகரளவிலும், பள்ளியளவிலும் பாட வாரியாகவும், தர வரிசை அடிப்படையிலும் சிறந்த மதிப்பெண் பெற்றோருக்கு மாவட்ட ஆட்சியர் பரிசுகளை வழங்கினார்.
அவரைத் தொடர்ந்து, இதர மாணவர்களுக்கான கல்விப் பரிசுகளை மேடையில் முன்னிலை வகித்தோர், உரையாற்றியோர் வழங்கினர்.
கடந்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் தமிழ் மொழி பாடத்தில் சிறந்த மதிப்பெண் பெற்ற பள்ளி மாணவர் அபூபக்கருக்கு, “தலைவர் கலைஞர் அவர்களின் அண்ணா அறக்கட்டளை” மூலம் பணப்பரிசு அளிக்கப்பட்ட செய்தி காயல்பட்டினம்.காம் வலைதளத்தில் வெளியிடப்பட்டது. அச்செய்தியைப் பார்த்து அம்மாணவரைப் பாராட்டி, அமீரக காயல் நல மன்ற நிர்வாகிகளுள் ஒருவரான சாளை ஷேக் ஸலீம் வழங்கிய ரூபாய் ஆயிரம் பணப்பரிசு வழங்குவதாக செய்தியின் பின்னூட்டத்தில் கருத்துப் பதிவு செய்திருந்தார். அப்பரிசும் இவ்விழாவின்போது வழங்கப்பட்டது.
பின்னர், வரும் மே மாதத்துடன் பணி ஓய்வு பெறவுள்ள பள்ளியின் கணித ஆசிரியர் நாராயணன், அரபி மொழி ஆசிரியர் அஷ்ரஃப் அலீ ஆகியோருக்கு பள்ளி தலைவர் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இறுதியில், பள்ளியின் முதுகலை ஆங்கில ஆசிரியர் தேவராஜன் நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் மாலை 06.15 மணிக்கு விழா நிறைவுற்றது.
இரவு 07.00 மணி முதல் 10.00 மணி வரை பள்ளி மாணவர்களின் பட்டி மன்றம், நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் அதே மேடையில் நடைபெற்றது.
விழாவில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் நகர பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை பள்ளி தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா தலைமையில் பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
|