அறுப்பிடங்களில் நிலவும் சுகாதாரக் கேட்டை சரிசெய்து தருமாறு, காயல்பட்டினத்திலுள்ள இறைச்சி வணிகர்கள் நகர்மன்றத்தில் முறையிட்டுள்ளனர்.
காயல்பட்டினம் கிடா இறைச்சி வணிகர்கள் சங்கத் தலைவர் செய்யித் இப்றாஹீம் தலைமையில், இறைச்சி வணிகர்கள் இணைந்து 25.01.2011 அன்று காலை 12.00 மணிக்கு காயல்பட்டினம் நகர்மன்ற அலுவலகத்திற்குச் சென்றனர்.
அங்கு நகர்மன்ற துணைத்தலைவர் கஸ்ஸாலி மரைக்காரை சந்தித்த அவர்கள், நகர்மன்றத்தால் கட்டப்பட்டு வரும் தனி அறுப்பிடத்தை விரைவில் துவக்கித் தருமாறும், தற்காலிகமாக நகர்மன்ற அலுவலக வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அறுப்பிடத்தில் நிலவும் சுகாதாரக் கேட்டை சரிசெய்து தருமாறும், தினமும் அறுக்கப்படும் பிராணிகளுக்காக அந்தந்த கடை வணிகர்களுக்கு பணம் செலுத்தியதற்கான ஒப்புதல் சீட்டை தனித்தனியே வழங்குமாறும் கோரியதோடு, இக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் பணம் செலுத்தப்போவதில்லை எனவும் தெரிவித்தனர்.
நகர்மன்றத் தலைவர் ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மான் மற்றும் நகர்மன்ற அலுவலர்களுடன் இதுகுறித்து கலந்தாலோசனை செய்த துணைத்தலைவர் கஸ்ஸாலி மரைக்கார், தனி அறுப்பிடம் துவக்குவது தற்போது நடைமுறைச் சிக்கலில் உள்ளதாகவும், விரைவில் அது தீர்க்கப்பட்டு, வரும் மார்ச் மாத இறுதிக்குள் துவக்கி வைக்கப்படும் என்று தெரிவித்தார்.
நகர்மன்ற அலுவலகத்தில் பணியாட்கள் குறைவாக உள்ளதால் தினமும் அறுப்பிடத்தை சுத்தம் செய்யவியலவில்லை எனவும், எனினும் பொதுமக்கள் நலன் கருதி இனி இயன்றளவுக்கு தினமும் சுத்தம் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் அப்போது கூறினார்.
இறைச்சி வணிகர்கள் பணம் செலுத்தியதற்கான ஒப்புதல் சீட்டை கணினி மூலம் தினமும் தனித்தனியே வழங்குவது நடைமுறை சாத்தியமற்றது என்றும், எனினும் நகர்மன்ற முத்திரையிட்டு ஒரு காகிதத்தில் தனித்தனியாகவும், கணினி மூலம் மொத்தமாகவும் தினமும் ஒப்புதல் சீட்டு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அவரது கருத்துக்களால் மனநிறைவடைந்த இறைச்சிக்கடை வணிகர்கள் தமது பணம் செலுத்தா போராட்ட அறிவிப்பை திரும்பப் பெற்றுக்கொள்வதாக தெரிவித்தனர்.
நகர்மன்ற அலுவலகத்திலுள்ள தற்காலிக அறுப்பிடம் மிகுந்த சுகாதாரக் கேட்டுடன் காணப்பட்டது. அறுக்கப்பட்ட பிராணிகளின் இரத்தங்கள் அறுத்த இடத்திலேயே உறைந்து துர்வாடையுடன் காணப்பட்டது. சுத்தப்படுத்துவதற்குத் தேவையான ப்ளீச்சிங் பவுடர் தேவைக்கேற்ப இல்லாமலும், சுண்ணாம்பு முற்றிலும் இல்லாமலும் இருந்தன.
இதுகுறித்து நகர்மன்ற அலுவலர்களிடம் வினவுகையில், அவற்றை வாங்குவதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே செய்யப்பட்டுவிட்டதாகவும், ஓரிரு தினங்களில் அவை நகர்மன்ற அலுவலகத்திற்கு வந்தடையும் என்றும் தெரிவித்தனர். |