காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் சுற்றுச்சுவரையொட்டி, பிரதான வீதி - ஸீகஸ்டம்ஸ் சாலை - கே.டி.எம். தெரு சந்திப்பில் சிறியது முதல் பிரம்மாண்டமான அளவு வரை அரசியல் கட்சிகளும், பொதுநல அமைப்புகளும் கடந்த சில ஆண்டுகளாக டிஜிட்டல் பேனர்கள், தட்டி போர்டுகளை நிறுவி வருவது புதிய வழக்கமாக இருந்தது.
நகரின் மிக முக்கிய சந்திப்பான இப்பகுதியில் இவ்வாறு நிறுவப்படும் டிஜிட்டல் பேனர்கள் காரணமாக, ஸீ-கஸ்டம்ஸ் சாலையிலிருந்து மேல் நோக்கி வாகனங்களில் வருவோரும், கே.டி.எம். தெருவிலிருந்து ஸீ-கஸ்டம்ஸ் சாலைக்கு வாகனங்களில் செல்வோரும் அடிக்கடி விபத்துக்களைச் சந்திக்க நேர்ந்தது.
இது ஒருபுறமிருக்க, இறையில்லமான பள்ளிவாசல் முன் உருவங்கள் அடங்கிய இதுபோன்ற பதாகைகளை நிறுவுவதைத் தவிர்க்குமாறு அமைப்பினரிடம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ பள்ளி நிர்வாகம் சார்பில் பலமுறை வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், குறிப்பிட்ட அப்பகுதியில் அறிவிப்புப் பலகையும் நிறுவப்பட்டுள்ளது.
தாமதமாக இணைக்கப்பட்ட படம்:-
இந்நிலையில், நேற்று நள்ளிரவில் அரசியல் கட்சியொன்றின் சார்பில் அப்பகுதியில் நிறுவப்பட்டிருந்த மிகப்பெரிய டிஜிட்டல் பேனர் காரணமாக அதிகாலையில் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இந்நிலையில் அடையாளம் தெரியாத சிலர் அந்த டிஜிட்டல் பேனரை சேதப்படுத்தியதாகவும், அதனால் பதட்டம் ஏற்பட்டதாகவும் தெரிகிறது.
காவல்துறையினர் தலையீட்டின் பேரில், நிறுவப்பட்டிருந்த டிஜிட்டல் பேனர் சில மணி நேரங்களில் அகற்றப்பட்டதால், நிலவிய பதட்டம் நீங்கியதாக, சம்பவத்தின்போது அங்கிருந்தோர் தெரிவித்தனர்.
தகவல்:
S.அப்துல் வாஹித்,
கொச்சியார் தெரு, காயல்பட்டினம். |