தாமாக முன்வந்து இஸ்லாமிய மார்க்கத்தைத் தம் வாழ்வியலாக்கிக் கொள்ளும் ஆண் - பெண்களுக்கு மூன்று மாத காலம் இஸ்லாமிய மார்க்க அடிப்படைக் கல்வியைப் போதிப்பதற்காக, காயல்பட்டினம் அப்பாபள்ளித் தெருவில் செயல்பட்டு வருகிறது சமூக நல்லிணக்க மையம் என்ற தஃவா சென்டர். இதன் பெண்கள் பிரிவு காயல்பட்டினம் அலியார் தெருவிலுள்ள வாடகை வீடொன்றில் செயல்பட்டு வருகிறது.
இஸ்லாமைத் தழுவும் மக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு முறையான தங்குமிட வசதிகளை நிரந்தரமாக ஏற்படுத்திக் கொடுத்து கல்வி கற்பிப்பதற்காக, காயல்பட்டினம் குட்டியாபள்ளி வளாகத்தையொட்டி வடபகுதியில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.
அக்கட்டிடத்தின் ஒரு பகுதியான பெண்கள் பிரிவு கட்டுமானப் பணிகள் நிறைவுற்றுள்ளதையடுத்து, நேற்று (26.01.2011) மாலையில் அதன் துவக்க விழா நடைபெற்றது.
காயல்பட்டினம் ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் கண்காணிப்பாளர் (ரகீபா) ஃபாத்திமா மும்தாஜ் தலைமை தாங்கினார். இதர கண்காணிப்பாளர்களான (ரகீபாக்கள்) தீனார், செய்யித் கதீஜா கலாமீ, தாஹா, ரஃபீக்கா, ஜஹ்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் மூத்த ஆசிரியை ஃபாத்திமா ஜனூபா ஆலிமா சித்தீக்கிய்யா நிகழ்ச்சிகளைத் தொகுத்தளித்தார். ஆயிஷா நஸ் ரீன் ஆலிமா சித்தீக்கிய்யா கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். ஜெய்னுல் அரஃபா ஆலிமா சித்தீக்கிய்யா அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
அக்கல்லூரியின் தலைமை ஆசிரியை ஷபானா ஆலிமா சித்தீக்கிய்யா முன்மாதிரி முஸ்லிம் பெண் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
மஃரிப் தொழுகைக்குப் பின் இரவு 07.00 மணிக்கு இரண்டாம் அமர்வு துவங்கியது. இஸ்லாமை புதிதாக தம் வாழ்வியல் நெறியாக்கிக் கொண்ட மாணவியர் திருச்சி ஜைனப், பெரியபட்டினம் ரிழ்வானா, பெங்களூர் ஃபாத்திமா, ஊட்டி ஹஸீனா ஆகியோர் தாம் இஸ்லாமைத் தழுவிய விபரங்களை உரையாக வழங்கினர்.
பின்னர், தஃவா சென்டர் பெண்கள் பிரிவின் நிர்வாகிகளுள் ஒருவரான நஃபீஸா தஃவா சென்டரின் செயல்பாடுகள் குறித்த அறிக்கையை வாசித்தார்.
அதனைத் தொடர்ந்து, இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மயிலாடுதுறை நகரைச் சார்ந்த பிரச்சாரகர் ஃபாத்திமா ஜன்னாஹ், “அழைப்புப் பணியில் பெண்களின் பங்கு” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
ராபியா ரோஷன் ஆலிமா சித்தீக்கிய்யா நன்றி கூற, கஃப்ஃபாரா துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. இந்நிகழ்ச்சியில் நகரின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் திரளான பெண்கள் கலந்துகொண்டனர். ஆண்களுக்கென தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, தஃவா சென்டர் மேலாளர் டி.வி.எஸ்.ஜக்கரிய்யா மேற்பார்வையில், சென்டர் நிர்வாகிகள் மற்றும் பெண்கள் பிரிவு பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.
புதிதாக இஸ்லாமைத் தழுவியோருக்கான கல்விப் பிரிவு அப்பா பள்ளித் தெருவிலுள்ள - தற்சமயம் மிகவும் பழுதடைந்துள்ள கட்டிடத்திலும், குட்டியப்பா பள்ளியிலும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
தற்போது துவக்கி வைக்கப்பட்டுள்ள பெண்கள் பிரிவு கட்டிடம் போல ஆண்கள் பிரிவுக்கென கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. பொதுமக்கள் இவ்வகைக்காக தாராள நன்கொடைகளை வழங்கியுதவுமாறு தஃவா சென்டர் நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தகவல்:
M.A.அப்துல் ஜப்பார்,
கொச்சியார் தெரு, காயல்பட்டினம். |