"நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு கல்லூரி, பள்ளிகளிலும் தமிழ் உணர்வு வளர்க்கப்பட வேண்டும்" என ஆசியவியல் கல்வி நிறுவனம் சார்பில் நடத்தப்படும் சர்வதேச கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய ஜமால் அவர்கள் தெரிவித்தார்கள்.
சென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் ஆசியவியல் கல்வி நிறுவனம் செயல்படுகிறது.
அந்நிறுவனத்தின் வெள்ளி விழாவை முன்னிட்டு, 'ஆசிய பண்பாட்டு வளர்ச்சிக்கு
தமிழர்கள் நல்கிய பங்களிப்பு' என்ற தலைப்பிலான மூன்று நாள் சர்வதேச
கருத்தரங்கம் நடந்தது.
இதில், பல்வேறு நாடுகளை சேர்ந்த தமிழ் அறிஞர்கள் பங்கேற்று கட்டுரைகளை
சமர்ப்பித்தனர். மூன்றாவது அமர்வு, பேராசிரியர் சிங்காரவேலு சச்சிதானந்தம்
தலைமையில் நடந்தது.
இதில் ஹாங்காங்கில் தமிழ் கலாசாரம் என்ற தலைப்பில் ஏ.எஸ்.ஜமால் அவர்கள்
கூறியதாவது:-
நான் பிறந்தது தமிழகத்தில் உள்ள காயல்பட்டினம். 15 ஆண்டுகள் மராட்டிய
மாநிலத்தில் படித்தேன். கடந்த 45 ஆண்டுகளாக, ஹாங்காங்கில் வசித்து
வருகிறேன். எனது தந்தை அமீர் சுல்தான் மரைக்காயர் மும்பை தமிழ் சங்கம்
உருவாக்கியவர்களில் ஒருவர். முதன் முதலில் தமிழ் பேசும் இஸ்லாமியர்
ஒருவர், கடந்த 1956 ல் ஹாங்காங் சென்றார்.
தற்போது, அங்கு 2500 க்கும் அதிகமான தமிழ் பேசும் இந்துக்கள், இஸ்லாமியர்கள் மற்றும் கிருஸ்துவர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் சகோதர பாசத்துடன் பழகி வருகின்றனர்.
அங்குள்ள தமிழ் சங்கம் ரஹுமானால் உருவாக்கப்பட்டு, ராம், ராபர்ட்டால் வளர்க்கப்பட்டது. தமிழக கலாசாரம் அங்கு வளர்க்கப்பட்டு வருகிறது. நம் நாட்டில் உள்ள கல்லூரிகள், பள்ளிகளிலும் தமிழ் உணர்வு வளர்க்கப்பட வேண்டும். வெளி நாடுகளுக்கு ஆரம்பத்தில் தொழிலாளர்களாகவே தமிழர்கள் சென்றனர்.
தற்போது கல்வி அறிவு பெற்று அங்கு மிகப்பெரிய பொறுப்புகளை வகிக்கின்றனர். உலகளவில் தமிழ் வளர்ச்சி பெற வேண்டும் என்பதே நமது குறிக்கோள்.
இவ்வாறு ஜமால் அவர்கள் பேசினார்கள்.
தகவல்:
தினமலர் |