தூத்துக்குடியில் இருந்து கொழும்புக்கு வரும் பிப்ரவரி மாதம் இறுதியில் பயணிகள் கப்பல் போக்குவரத்து துவக்கப்படும் என மத்திய அமைச்சர் வாசன் தெரிவித்தார்.
தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.332 கோடியில் புதிய 2வது வடக்கு சரக்கு தளம் மேம்படுத்தும் திட்டம் துவக்க விழா மற்றும் பயணிகள் போக்குவரத்து முனையம் துவக்க விழா நேற்று நடந்தது. துறைமுக சேர்மன் சுப்பையா வரவேற்றார். சுங்கதுறை ஆனையர் அஜய் தீக்ஷித், மத்திய கப்பல் போக்குவரத்து துறை துணை தலைவர் ஆனந்த்சோப்ரா, ஜெயதுரை எம்பி , கலெக்டர் மகேஷ்வரன் முன்னிலை வகித்தனர்.
விழாவில் மத்திய அமைச்சர் வாசன் பேசியதாவது:
தூத்துக்குடியில் இருந்து கொழும்புக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தனியார் நிறுவனம் மூலம் துவக்கப்பட உள்ளது. வரும் பிப்ரவரி மாத இறுதியில் பயணிகள் போக்குவரத்து துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் கட்டமாக வாரத்தில் 3 நாட்களும் பின்னர் வாரத்தின் அனைத்து நாட்களும் பயணிகள் கப்பல் போக்குவரத்து விரிவுபடுத்தப்படும்.
தென் தமிழகத்தின் வளர்ச்சியில் தூத்துக்குடி துறைமுகத்தின் பங்கு அதிகமாக உள்ளது. விரைவில் இது சர்வதேச துறைமுகமாக வளரும். தற்போது பெரிய கப்பல்கள் இங்கு வரமுடியாத நிலை இருப்பதால் துறைமுக ஆழத்தை 12.8 மீட்டராக உயர்த்த ரூ.538 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணி வரும் 2012க்குள் நிறைவடையும்.
தூத்துக்குடியில் மேலும் 10 புதிய அனல்மின் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. தற்போது துறைமுகத்தில் 5.6 மில்லியன் டன் நிலக்கரி கையாளப்பட்டு வருகிறது. புதிய அனல் மின் நிலையங்கள் செயல்படும் போது 30 மில்லின் டன் நிலக்கரி தேவைப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது.
2020ல் துறைமுகத்தில் கையாளப்படும் மொத்த சரக்குகளில் 50 சதவீதம் நிலக்கரியின் பங்கு இருக்கும். இதற்காக மேலும் 4 புதிய சரக்கு தளங்கள் அமைக்கப்படுகிறது. முதல் தளத்திற்கான பணிகள் நடந்து வருகிறது. ரூ.332 கோடியில் 2வது வடக்கு சரக்கு தளம் பணி நடக்கிறது. இது இன்னும் இரு ஆண்டிற்குள் முடியும். 3, 4ம் சரக்கு தளங்கள் விரைவில் கட்டப்பட இருக்கின்றன. மேலும் 2 கட்டுமான பொருட்களுக்கான தளங்கள் கட்டவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி துறைமுகத்திற்கு கப்பலோட்டிய தமிழன் வஉசி பெயரை சூட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னையில் இருந்து குமரி வரை உள்நாட்டு கப்பல் போக்குவரத்து திட்டத்தை துவக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு பின்னர் இத்திட்டம் வளர்ச்சியடையும்.
இவ்வாறு மத்திய அமைச்சர் வாசன் பேசினார்.
விழாவில் ராமசுப்பு எம்பி, துறைமுக பொறுப்பு கழக உறுப்பினர்கள் பெரியசாமி, எஸ்டிஆர். விஜயசீலன், எம்எல்ஏக்கள் வேல்துரை, அசன்அலி, சப்கலெக்டர் சஜ்ஜன்சிங், ஏஎஸ்பி சோனல்சந்த்ரா, காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் ஜஸ்டின், கதிர்வேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தகவல்:
தினகரன் |