சஊதி அரபிய்யா ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் சார்பில், காயல்பட்டினம் நகர மக்களுக்கு புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் குறும்படம் (டாக்குமெண்டரி) தயாரித்து வெளியிடுவதென தீர்மானிக்கப்பட்டு, அதற்கான ஆயத்தப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
குறும்பட தயாரிப்பு குறித்த கருத்துக்களைப் பெறுவதற்கான துவக்கக் கூட்டம் 27.12.2010 அன்று இரவு 07.00 மணிக்கு காயல்பட்டினம் மருத்துவர் தெருவில் நடைபெற்றது.
குறும்பட தயாரிப்பு குறித்து அத்துறை சார்ந்த தொழில்நுட்பட வல்லுனர்களுடன் கலந்தாலோசனை செய்வதற்கான கூட்டம் 09.01.2011 அன்று சென்னையில் நடைபெற்றது. குறும்படத்தின் வடிவம், நீளம் குறித்து இக்கூட்டத்தில் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்பட்டது.
குறும்பட ஒளிப்பதிவாளர்களை வரவழைத்து தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள், அவர்களுக்களிக்கப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள், நகர மக்களிடையே புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பள்ளி மாணவர்களைக் கொண்டு நகர்வலம் நடத்தல் உள்ளிட்டவை குறித்து 18.1.2011 அன்று காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்க கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் விவாதித்து முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக, 23.01.2011 (நேற்று) மாலை 05.00 மணிக்கு காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்க கூட்ட அரங்கில் ஆலோசனைக் கூட்டம் பொறியாளர் ஹாஜி எஸ்.ஏ.அஹ்மத் முஸ்தஃபா தலைமையில் நடைபெற்றது.
குறும்படத்தில் இடம்பெறச் செய்ய வேண்டிய அம்சங்கள் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்குமாறு காயல்பட்டினம்.காம் வலைதளத்தின் மூலம் கோரப்பட்டிருந்தது. அதன்படி உலக காயலர்கள் இதுவரை ஆர்வத்துடன் அனுப்பித் தந்துள்ள கருத்துக்கள் இக்கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.
பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையிலும், கூட்டத்தில் கலந்துகொண்டோரின் ஆலோசனைகளின்படியும், புற்றுநோய் விழிப்புணர்வுக்காக தயாரிக்கப்படவுள்ள குறும்படத்தில் இடம்பெற வேண்டிய அம்சங்கள், ஒளிப்பதிவு முறைமைகள், காட்சியமைப்புகள், வசனங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசித்து, முதற்கட்ட முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மாலை 06.00 மணிக்கு கூட்டம் நிறைவுற்றது.
தகவல்:
ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் சார்பாக,
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ,
காயல்பட்டினம். |