போலியோ என்ற கொடிய இளம்பிள்ளைவாத நோய் குழந்தைகளின் கை, கால்களை நிரந்தரமாக செயலிழக்கச் செய்கின்றன. போலியோ நுண் கிருமிகள் அசுத்தமான தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்கள் மூலம் குழந்தைகளிடையே பரவுகின்றன.
அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே சமயத்தில் சொட்டு மருந்து கொடுப்பதன் மூலம் இந்தியாவிலிருந்து இந்நோயை அறவே ஒழிக்க முடியும்.அதற்காக 1995 ஆம் ஆண்டு முதல் பல்ஸ் போலியோ சிறப்பு முகாம்கள் நாடு முழுவதும் ஒரே சமயத்தில் நடத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 17 கோடி 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளும், தமிழகத்தில் 70 லட்சம் குழந்தைகளும் பயனடைந்துள்ளார்கள்.
போலியோ சிறப்பு முகாம்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டதால் கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிடிநநாட்டில் போலியோவினால் எந்த குழந்தையும் பாதிக்கப்படவில்லை. ஐந்து வயதிற்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் சொட்டுமருந்து கொடுக்க 23-1-2011 மற்றும் 27-2-2011 ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு
முகாம்கள் நாடு முமுவதும் நடத்தப்படுகின்றன.
அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிக்கூடங்கள், பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலா மையங்கள் முதலான இடங்களில் 40 ஆயிரத்து 399 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
போலியோ நோய் பாதிப்பு உள்ள வடமாநிலங்களிலிருந்து தமிழகத்தில் இடம் பெயர்ந்து வாழ்வோரின் குழந்தைகளுக்கும், இலங்கை அகதிகள் குழந்தைகளுக்கும் நடமாடும் முகாம்கள் மூலம் சொட்டு மருந்து வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரசுத் துறைகள், ரோட்டரி சங்கங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த 2 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் முகாமில் ஈடுபடுகிறார்கள். போலியோ சொட்டு மருந்து உரிய குளிர்பதன நிலையில் பராமரிக்கப்பட்டு வீரியமுடன் வழங்கப்படுவதை VVM (Vaccine Vial Monitor) மூலம் உறுதி செய்யப்படுகிறது.
சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளின் இடதுகை சுண்டு விரலில் மார்க்கர் பேனா (Marker Pen) மூலம் அடையாள மை இடப்படும். விடுபடும் குழந்தைகள் இதன் மூலம் கண்டறியப்படுவர். போலியோ சொட்டு மருந்து மிகவும் பாதுகாப்பானது, பயனளிக்கக்கூடியது.
முகாம் நாட்களில் 5 வயதுக்கு உட்பட்ட ஒரு குழந்தை கூட விடுபடாமல் போலியோ சொட்டு மருந்து வழங்கினால் மட்டுமே எல்லா குழந்தைகளுக்கும் போலியோ நோயிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும். சொட்டு மருந்து முகாம்கள் தமிழ்நாடு முழுவதும் அவரவர் வசிப்பிடபகுதிகளுக்கு அருகாமையிலேயே அமைக்கப்பட்டுள்ளன. பொது மக்கள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போட்டுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
போலியோ சொட்டு மருந்து வழங்கும் இத்திட்டத்தை முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் இன்று (23-1-2011) அவரது இல்லத்தில், குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து வழங்கித் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியின்போது, முதலமைச்சரின் துணைவியார் திருமதி தயாளு அம்மாள், மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சென்னை மாநகராட்சி மேயர் திரு.மா. சுப்பிரமணியன், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை முதன்மைச்
செயலாளர் திரு. வி.கு. சுப்புராஜ், இ.ஆ.ப., பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் மரு.ஆர்.டி. பொற்கைபாண்டியன், மருத்துவக் கல்வி இயக்குநர் மரு.வி. கனகசபை மற்றும் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் மரு. என். ராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தகவல்:
இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை,
தலைமைச் செயலகம், சென்னை-9. |