காயல்பட்டினம் மஸ்ஜித் ஸெய்யிதினா பிலால் பள்ளிவாசலுக்கு நேர் கிழக்கில் கற்புடையார் பள்ளி வட்ட கடற்கரையோரத்தில் கிறிஸ்துவ குருசடி ஒன்று உள்ளது.
மீன்பிடி தொழிலுக்காக அப்பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன் குடியேறிய வெளியூர் மக்கள், தத்தம் சொந்த ஊர்களில் அவர்களுக்கு குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அனைத்தையும் தக்கவைத்துக் கொண்ட நிலையிலேயே காயல்பட்டினத்திலும் அவர்கள் வசிக்குமிடங்களை ஆதாரமாகக் காண்பித்து குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை பெற்றுக் கொண்டதாகவும், தாங்கள் வசிப்பதற்கு அடையாளமாக அப்பகுதியில் சட்டத்திற்குப் புறம்பாக ஆங்காங்கே குருசடிகளை அமைத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இது ஒருபுறமிருக்க, அப்பகுதியில் சுனாமி குடியிருப்பு தொகுப்பு வீடுகள் என்ற பெயரில் 169 பயனாளிகளுக்கான தொகுப்பு வீடுகளும் அரசுத் திட்டங்கள் மூலம் கட்டப்பட்டு வருகிறது. வெளியூர்களிலிருந்து புதிதாக மக்களை குடியமர்த்துவதற்காக அக்கட்டிடப் பணி நடைபெறுவதாகக் கூறி, கட்டிடப் பணிகளை நிறுத்தக் கோரி காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை சார்பில் கடந்த 04.01.2011 அன்று காலை முதல் மாலை வரை காயல்பட்டினம் நகரில் கடையடைப்பு போராட்டமும், அன்று மாலை 04.30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகும் தொகுப்பு வீடு கட்டிடப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்ததையடுத்து காயல்பட்டினம் நகரப் பிரமுகர்களடங்கிய குழுவொன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சி.நா.மகேஷ்வரனை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சந்தித்து இதுகுறித்து முறையிட்டது.
அப்பகுதியில் தொகுப்பு வீடு கட்டிடப் பணிகள் மட்டுமே அரசின் சார்பில் கட்டப்பட்டு வருவதாகவும், அவ்வீடுகளில் குடியமர்த்தப்படவுள்ள 169 பயனாளிகள் யார் என்பது குறித்து இதுவரை இறுதி முடிவு எதுவும் செய்யப்படவில்லை என்றும், அனுமதியின்றி எப்பகுதியிலும் வழிபாட்டுத் தலங்கள் எழுப்பக் கூடாது என்றும், அவ்வாறு எழுப்பப்படும் வழிபாட்டுத் தலங்களை அப்புறப்படுத்த சட்டத்தில் இடமுள்ளதாகவும் அப்போது மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில், மஸ்ஜித் ஸெய்யிதினா பிலால் பள்ளியின் நேர் கிழக்கில் கற்புடையார் பள்ளி வட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த குருசடியைச் சுற்றி ஓரிரு தினங்களுக்கு முன் திடீரென சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டு வருகிறது. இதனால் நகரில் பரபரப்பு ஏற்பட்டு, நகர பொதுமக்கள் நூற்றுக்கணக்கில் சம்பவ இடத்தில் கூடியுள்ளனர்.
உடனடியாக அவ்விடத்திற்கு வந்த திருச்செந்தூர் வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர், குருசடியைச் சுற்றி கட்டப்பட்டு வரும் சுற்றுச்சுவர் கட்டிடப்பணிகளை உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளதையடுத்து கட்டிடப்பணி நிறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இச்சம்பவத்தையொட்டி நகரில் ஏற்பட்டுள்ள பதட்டத்தைத் தணிக்கும் முகமாக காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை அலுவலகத்தில் 21.01.2011 (நேற்று) இரவு 07.30 மணிக்கு அவசர ஆலோசனைக் கூட்டம், பேரவைத் தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ் தலைமையில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மான், கே.எம்.டி. மருத்துவமனை தலைவர் ஹாஜி எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ, பேரவை செயலர் ஹாஜி பிரபு சுல்தான் ஜமாலுத்தீன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
துவக்கமாக, பொதுநல ஆர்வலரும், சிறந்த சிந்தனையாளரும், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் கவுரவ ஆலோசகரும், காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதின் செயற்குழு உறுப்பினருமான ஹாஜி எம்.எல்.ஷாஹுல் ஹமீத் எஸ்.கே. அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து, அவர்களின் பாவப்பிழை பொருப்பிற்காகவும், மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனம் கிடைக்கவும் பிரார்த்தனை செய்யப்பட்டது.
பின்னர் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், புதிதாக கட்டப்பட்டு வரும் கிறிஸ்துவ குருசடி கட்டிடப் பணிகள் தற்போது நிறுத்தப்பட்டிருந்தாலும், இதுவரை கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவரை அப்புறப்படுத்தவும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்துவதென தீர்மானிக்கப்பட்டது.
துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. |