பொதுநல ஆர்வலரும், சிறந்த சிந்தனையாளரும், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் கவுரவ ஆலோசகரும், காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதின் செயற்குழு உறுப்பினருமான ஹாஜி எம்.எல்.ஷாஹுல் ஹமீத் எஸ்.கே. அவர்கள் 12.01.2011 அன்று காலமானார். அவரது நல்லடக்கம் மறுநாள் 13.01.2011 அன்று காலையில் நடைபெற்றது.
எஸ்.கே. அவர்களின் மறைவிற்கு சிங்கப்பூர் காயல் நல மன்றம் தனது பொதுக்குழுக் கூட்டத்தின் மூலம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. கூட்ட நிகழ்வுகள் குறித்து மன்றத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் சிங்கப்பூர் Marina Barrageஇல், 15.01.2011 அன்று மாலை 06.00 மணிக்கு நடைபெற்றது.
டாக்டர் எம்.என்.முஹம்மத் லெப்பை கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். சோனா அபூபக்கர் சித்தீக் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.
Philips நிறுவனத்தில் வேலைவாய்ப்பு:
துவக்கமாக கூட்டத்தலைவர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். Philips நிறுவனத்தில் நல்ல வேலைவாய்ப்புகள் உள்ளதாகவும், அதற்கு யார், எவ்வாறு விண்ணப்பிக்கலாம் என்பன பற்றியும் அவர் தனதுரையில் விளக்கிப் பேசினார். அத்துடன், வேலைவாய்ப்புகளுக்காக விண்ணப்பிக்கும் முறைமை குறித்தும் அவர் விளக்கமளித்தார்.
வரவு-செலவு கணக்கறிக்கை:
மன்றத்தின் வருடாந்திர வரவு-செலவு கணக்கறிக்கையை மன்றப் பொருளாளர் எஸ்.எச்.அன்ஸாரீ சமர்ப்பித்தார். 2011ஆம் ஆண்டுக்கான நிதிநிலையறிக்கையை தயாரித்தளித்த உறுப்பினர் ஹரீஸ் அவர்களுக்கு கூட்டம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.
ஏ.டி.எம். இயந்திரங்கள் மூலம் மன்றத்திற்கு அனுப்பப்படும் தொகைகளைப் பெறுகையில், அனுப்பியவரை இனங்காணுவதற்கு நடைமுறைச் சிக்கல் இருக்கிற காரணத்தால், ஏ.டி.எம். இயந்திரம் மூலம் உறுப்பினர்கள் யாரும் பணம் அனுப்புவதைத் தவிர்க்கவோ அல்லது உறுப்பினர் இஸ்மத் ஷாஜஹானின் ஆலோசனைப்படி, ஏ.டி.எம். மூலம் தாங்கள் அனுப்பிய தொகைக்கான அச்சுப்பிரதியை ஸ்கேன் செய்து மன்றத்தில் ஒப்படைத்தோ ஒத்துழைக்குமாறு உறுப்பினர்களை மன்றச் செயலர் ரஷீத் ஜமான் கேட்டுக் கொண்டார். இன்டர்நெட் பேங்கிங் மூலம் பணம் அனுப்புவதை வழமையாக்கிக் கொள்ளுமாறு அப்போது உறுப்பினர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
விண்ணப்பங்கள் பரிசீலனை:
உதவிகள் கோரி மன்றத்தால் பெறப்பட்ட விண்ணப்பங்கள் இனி வரும் மார்ச் மாதம் பரிசீலிக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டது.
அத்தியாவசிய சமையல் பொருளுதவி:
காயல்பட்டினத்திலுள்ள ஏழை-எளிய, உழைக்கவியலாத, ஆதரவற்ற மக்களுக்காக மன்றத்தால் வழங்கப்பட்டு வரும் அத்தியாவசிய சமையல் பொருட்களுதவியை (Groceries for Needy kayalite - GNK) இனி வருடத்திற்கு இருமுறை, நோன்புப் பெருநாள் மற்றும் ஹஜ் பெருநாள் நெருக்கத்தில் வழங்குவதென முடிவு செய்யப்பட்டது. இதர நலத்திட்ட உதவிகள் அவ்வப்போதைய தேவைக்கேற்ப அந்தந்த காலங்களில் வினியோகிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன், GNK நலத்திட்ட உதவிக்காக இதுவரை 37 உறுப்பினர்கள் அனுசரணையாளர்களாக உள்ளனர் என்றும், இனி வருங்காலங்களில் இதர உறுப்பினர்களும் தம் பொறுப்பில் குறைந்தபட்சம் ஓர் ஏழைக்கு உதவ அனுசரணை வழங்கலாம் எனவும் மன்றத் தலைவர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டார்.
புதிய நிர்வாகக் குழு:
மன்றத்தின் தற்போதைய நிர்வாகக் குழுவின் பதவிக்காலம் வரும் மார்ச் மாதம் 31ஆம் தேதியுடன் முற்றுப்பெறுவதையடுத்து, புதிய நிர்வாகப் பொறுப்புகள் பின்வருமாறு செயற்குழுவால் பரிந்துரைக்கப்பட்டு, தலைவரால் ஏற்கப்பட்டது. பின்னர் அப்பொறுப்புகளுக்கான புதிய பொறுப்பாளர்களைத் தேர்வு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப் பட்டதற்கிணங்க, பொதுக்குழு உறுப்பினர்களால் பின்வருமாறு புதிய நிர்வாகக் குழு தேர்வு செய்யப்பட்டது:-
ஆலோசனைக் குழு:
ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன்
டாக்டர் எம்.என்.முஹம்மத் லெப்பை
தலைவர்:
எம்.ஆர்.ரஷீத் ஜமான்
துணைத்தலைவர்:
எஸ்.எச்.அன்ஸாரீ
செயலாளர்:
எம்.எம்.மொகுதூம் முஹம்மத்
துணைச் செயலாளர்கள்:
ஏ.எம்.உதுமான்
எஸ்.டி.ஸூஃபீ ஹுஸைன்
பொருளாளர்:
கே.எம்.டி.ஷேக்னா
துணைப் பொருளாளர்கள்:
எஸ்.ஷேக் அப்துல் காதிர்
எம்.எச்.முஹம்மத் இல்யாஸ்
மேற்கண்டவாறு பொறுப்புகளுக்கான புதிய உறுப்பினர்கள் பொதுக்குழு உறுப்பினர்களால் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். வரும் ஏப்ரல் 01ஆம் தேதி முதல் 2013ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை (01.04.2011 - 31.03.2013) இவர்கள் நிர்வாகக் குழுவினராக இருந்து மன்றத்தை வழிநடத்துவர் என அறிவிக்கப்பட்டது.
இந்நிர்வாகக் குழுவினர் மீது உறுப்பினர்களுக்கு ஆட்சேபணை இருந்தால், மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுவின்போது புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவர் எனவும் அறிவிக்கப்பட்டது.
CFFC குறித்த விளக்கம்:
காயல்பட்டினத்தில் புற்றுநோய் பரவலுக்கான காரணிகளைக் கண்டறியும் குழுவான Cancer Fact Finding Committee - CFFC குறித்தும், அதன் நோக்கங்கள் மற்றும் செயல்திட்டங்கள் குறித்தும், இதுவரை அக்குழு மேற்கொண்டுள்ள பணிகள் குறித்தும் மன்ற உறுப்பினர் சாளை நவாஸ் விளக்கிப் பேசினார்.
நகர்நலன் கருதி, CFFCக்கு மன்றத்தின் முழு ஒத்துழைப்பை தொடர்ந்து வழங்குவதென கூட்டம் மீண்டும் உறுதி செய்தது.
அடுத்த பொதுக்குழு:
மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தை வரும் மார்ச் மாதம் 26ஆம் தேதியன்று நடத்துவதென்று முடிவு செய்யப்பட்டது. Pasir Ris-ஐ கூட்டம் நடத்துவதற்கான இடமாக உத்தேச முடிவு செய்யப்பட்டது.
அனைத்து உறுப்பினர்களும் அக்கூட்டத்தில் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
உண்டியல் திறப்பு:
நகர்நலனுக்காக உண்டியல் மூலம் மன்றத்தால் நிதி சேகரிக்கப்பட்டு வருகிறது. அடுத்த உண்டியல் திறப்பு வரும் மே மாதம் நடைபெறும் என்றும், அனைத்து உறுப்பினர்களும் தமது உண்டியல்களை வெற்றிடமின்றி எடுத்து வருமாறும், இதுவரை உண்டியல் பெறாத உறுப்பினர்கள், உறுப்பினர் உமர் ரப்பானீ அவர்களைத் தொடர்புகொண்டு விரைந்து பெற்றுக்கொள்ளுமாறும், மே மாதம் கூட்டம் நடைபெறும் நாள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மருத்துவ உதவி கோரும் விண்ணப்பங்கள்:
மருத்துவ உதவி கோரி மன்றத்தால் பெறப்பட்டுள்ள விண்ணப்பங்கள் குறித்து, ஏற்கனவே தீர்மானித்துள்ளபடி ஜித்தா காயல் நற்பணி மன்றம், தம்மாம் காயல் நற்பணி மன்றம் மற்றும் ரியாத் காஹிர் பைத்துல்மால் ஆகிய வளைகுடா காயல் நல மன்றங்களுடன் கலந்தாலேசானை செய்து முடிவெடுக்கப்படும் எனவும், மன்ற துணைச் செயலாளர் மொகுதூம் முஹம்மத் அப்பொறுப்பை எடுத்துக்கொள்வார் எனவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
சிங்கை புதிய குடிமகனுக்கு பாராட்டு:
மன்ற உறுப்பினர் தவ்ஃபீக் ஸாலிஹ், சிங்கப்பூர் நாட்டின் குடிமகனானதற்காக (Citizen) மன்றம் அவருக்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டது.
எஸ்.கே. மறைவுக்கு இரங்கல்:
சிறந்த சமூக சிந்தனையாளரும், பொதுநல ஊழியருமான ஹாஜி எம்.எல்.ஷாஹுல் ஹமீத் (எஸ்.கே.) அவர்கள் அண்மையில் அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க காலமான செய்தி மிகுந்த கவலையளித்துள்ளதாகவும், அன்னாரின் மறைவிற்காக மன்றத்தின் அனைத்து உறுப்பினர்களும் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும், மறைந்த மர்ஹூம் அவர்களின் குடும்பத்தாருக்கும், உற்றார் - உறவினர்களுக்கும் மன்ற உறுப்பினர்கள் நெஞ்சம் நிறைந்த “அஸ்ஸலாமு அலைக்கும்” எனும் ஸலாமைத் தெரிவித்துக் கொள்வதாகவும் இக்கூட்டம் மூலம் தெரிவித்துக் கொண்டனர்.
கருணையுள்ள அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவப்பிழைகளைப் பொருத்தருளி, மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தை நற்கூலியாக அவர்களுக்கு வழங்கியருள்வானாக என மன்றம் பிரார்த்திக்கிறது.
விவாதிக்க வேறு அம்சங்கள் எதுவும் இல்லாத நிலையில், கூட்டம் இரவு 08.00 மணிக்கு நிறைவுற்றது. கூட்டத்தில் மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். அனைவருக்கும், மன்றச் செயலர் ரஷீத் ஜமான், துணைச் செயலர் மொகுதூம் முஹம்மத், பொருளர் எஸ்.எச்.அன்ஸாரீ ஆகியோரின் அனுசரணையில் இரவு உணவு விருந்தோம்பல் செய்யப்பட்டது.
கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கையில், தனியிடத்தில் மன்ற உறுப்பினர்களின் குழந்தைகள் வேடிக்கை – விளையாட்டுகளில் உற்சாத்துடன் பொழுதைக் கழித்தனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
M.R.ரஷீத் ஜமான்,
செயலாளர்,
காயல் நல மன்றம், சிங்கப்பூர். |