காயல் நகராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவி ஆ.வஹிதா அவர்கள் கடந்த மூன்றாண்டுகளாக
தூத்துக்குடி மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவிச்சங்கத்தின் கவுரவ செயலாளராக உள்ளார். இந்த
மகளிர் உதவிச்சங்கத்தின் மூலம் காயல்பட்டினம்
மற்றும் மாவட்டத்தில் பரவலாக வாழும் முஸ்லிம்
பெண்களுக்கு அரசின் உதவிகளை கிடைக்கச்செய்ய வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இந்த அமைப்பின் செயல்திட்டம் பற்றியும், இதற்கான உதவிகளை அளித்திடுவது பற்றியும் அவர்
இன்று வேண்டுகோள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில் கூறப்பட்டுள்ளதாவது;
தமிழகத்தின் அனைத்து மாவட்டத்திலும்,மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் கடந்த பல
ஆண்டுகளாக செயல்பட்டு வருவது மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவிச்சங்கம். அரசின் பல்வேறு
நலத்திட்டங்களில் ஒன்று முஸ்லிம் மகளிர் உதவித்திட்டம். இந்த உதவித்திட்டம் எந்த அடிப்படையில்
செயல்படுத்தப்படுகிறதென்றால், தனவந்தர்கள் அல்லது பொதுநல அமைப்புகள் இந்த முஸ்லிம் மகளிர் உதவிச்சங்கத்திற்கு எவ்வளவு உதவித்தொகை வழங்குகிறார்களோ அதற்கு இணையான
தொகையை அரசும் வழங்குகிறது. அரசு அதிக பட்சமாக ஒரு மாவட்டத்திற்கு ரூபாய் பத்து லட்சம் வரை
இந்த உதவித்திட்டத்திற்கு வழங்குகிறது. இதன் அடிப்படையில் நாம் ரூபாய் பத்து லட்சம் வரை சேகரித்து
அதை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் உறுதிப்படுத்தினால் அதற்கு இணையாக அரசும் ரூபாய் பத்து லட்சம்
உதவித்தொகை வழங்குகிறது. ஆக மொத்தம் ரூபாய் இருபது லட்சம் உதவித்தொகையினை நம் முஸ்லிம் பெண்களுக்கு பயனுள்ள பல வழிகளில் உதவிட இயலும்.
இந்த திட்டத்தின் மூலம் பெண்களின் நலன்களுக்காக, குறிப்பாக சிறுதொழில், கல்வி,மருத்துவ உதவி போன்றவைகளை, நமது பெண்களுக்கு அளித்திட இயலும். இந்த திட்டத்தினை நடைமுறை சாத்தியமாக்கிட முஸ்லிம் பெண்கள் உதவிச்சங்கம்
அமைக்கப்பட்டு அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் பல மாவட்டங்களில் சிறப்பாக செயல்பட்டு முஸ்லிம் பெண்கள் பலன் பெற்று வருகின்றனர். ஆனால் நமது தூத்துக்குடி
மாவட்டத்தில் கடந்த மூன்றாண்டுகளுக்கு முன் முஸ்லிம் மகளிர் உதவிச்சங்கம் துவக்கப்பட்டும், போதிய விழிப்புணர்வு இன்மையால்
அது செயல் வடிவில் உயிரோட்டமின்றி இருந்து வருகிறது.
எனவே இந்த பயனுள்ள அரசுத்திட்டத்தை நமது சமுதாய மக்கள் பயன் பெற்றிடச்செய்யும் வகையில்
இது குறித்த விளக்க மற்றும் ஆலோசனைக்கூட்டம் கடந்த 01-01-2011 அன்று எல்.கே.மேனிலைப்பள்ளியில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பொது நல அமைப்புகள், பைத்துல்மால் அங்கத்தினர்கள், தனவந்தர்கள், வெளிநாடுவாழ் காயல்வாசிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு ஆலோசனைகளையும், ஆதரவுகளையும் வழங்கினர். அத்துடன் அரசின் இந்த உதவித்திட்டத்தை நாம் முழுமையாக பயன்படுத்தும் முயற்சியில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவது என்றும், இந்த உதவித்தொகைக்கான நமது பங்களிப்பிற்காக நமதூர் செல்வந்தர்கள், வெளியூர், வெளிநாடுகளில் வாழும் நமது மக்களிடமும் ரூபாய் பத்து லட்சம் வரை வரும் மார்ச் மாதத்திற்குள் சேகரிப்பது எனவும், இதன் மூலம் துயறுற்று வரும் நமது முஸ்லிம் பெண்களை உயர்நிலைக்கு கொண்டு வரும் வகையில் உதவித்திட்டங்களை செயல்படுத்துவது எனவும், இதற்கான செயல்பாடுகளை முனைப்புடன் செயல்படுத்த ஊரில் A.வஹிதா, S.S.சதக்கத்துல்லாஹ் (ஹாஜி காக்கா), ஹாஜி TAS.முஹம்மது அபூபக்கர், A.தர்வேஷ் முஹம்மது, S.செய்க் அப்துல் காதர், ஹாஜி S.I.புஹாரி,
ஹாஜி MNL. சுலைமான் ஆகியோரையும் சென்னையில் இதற்கான பணிகளை மேற்கொள்ள ஹாஜி இபுனு சுவூது, ஹாஜி LKK. லெப்பைத்தம்பி, ஹாஜி SSM.சதக்கத்துல்லாஹ், S.இம்தியாஸ், டைமன்ட் செய்யது ஆகியோரையும் தேர்ந்தெடுத்து
இதில் முழு வெற்றி பெற உழைப்பது எனவும் அக்கூட்டத்தில்
முடிவு செய்யப்பட்டது.
இந்த அமைப்பில் பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் உறுப்பினர்களாக சேர்ந்து பணியாற்றலாம். இதில் ரூபாய் ஆயிரம் செலுத்தி ஆயுள் கால உறுப்பினர்களாகவும், வருடந்தோறும் ரூபாய் ஐநூறு சந்தா செலுத்திடும் உறுப்பினர்களாகவும் இணையலாம்.இந்த கூட்டத்தின் போதே நாற்பது ஆண்கள் உறுப்பினர்களாக பதிவு செய்து கொண்டனர். அத்துடன் தனவந்தர்கள் பலர் இரண்டு லட்சம் ரூபாய் வரை நன்கொடை வழங்குவதற்கு வாக்களித்தனர். இது போக இன்னும் எட்டு லட்ச ரூபாய் சேகரிக்க வேண்டியுள்ளது.
எனவே, சமுதாய நலனிலும், முன்னேற்றத்திலும் ஆர்வம் கொண்ட அன்பிற்கினிய உள்ளூர், வெளியூர், மற்றும் வெளிநாடுவாழ் சகோதர, சகோதரிகள், முஸ்லிம் பெண்கள் முன்னேற்றத்திற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கும் இந்த தூத்துக்குடி மாவட்ட முஸ்லிம் பெண்கள் உதவிச்சங்கத்திற்கு தங்களின் தாராளமான பொருளுதவியை அல்லாஹ்வுக்காக வழங்கி ஆதரிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். இதன் மூலம் துயரில் வாடும் நமது முஸ்லிம் பெண்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திட இயலும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தகவல்:
A. தர்வேஷ் முஹம்மத்,
அப்பா பள்ளித் தெரு, காயல்பட்டினம்.
|