காயல்பட்டினம் தைக்கா தெருவில் அமைந்துள்ள ஸாஹிப் அப்பா தைக்காவில் அடங்கியிருக்கும் மஹான் தைக்கா ஸாஹிப் வலிய்யுல்லாஹ் அவர்களின் 160ஆவது கந்தூரி விழா 18.01.2011 அன்று தைக்கா வளாகத்தில் நடைபெற்றது.
முன்னதாக, ஸஃபர் மாதம் முதல் நாளன்று கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. ஸஃபர் முதல் நாள் முதல் 14ஆம் நாள் வரை தினமும் அதிகாலை ஃபஜ்ர் தொழுகைக்குப் பின் கத்முல் குர்ஆன் ஓதி, ஈஸால் தவாப் செய்யப்பட்டதுடன், அந்நாட்களில் தினமும் காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை மவ்லித் மஜ்லிஸும் நடைபெற்றது.
ஸஃபர் 05ஆம் நாளன்று மஹான் ஸதக்கத்துல்லாஹ் அப்பா அவர்களின் 317ஆவது கந்தூரி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மறுநாள் ஸஃபர் 06 அன்று தைக்கா ஸாலிஹ் வலிய்யுல்லாஹ் அவர்களின் கந்தூரி நடைபெற்றது.
ஸஃபர் 13ஆம் நாள் - 17.01.2011 அன்று ஊர்வலம், தஃப்ஸ், பைத், யானை - குதிரை - பல்லக்கில் குழந்தைகளை அமர்த்தி ஊர்வலம் ஆகிய நிகழ்ச்சிகள் காயல்பட்டினம் முஹ்யித்தீன் மாணவர் மன்றம் சார்பில் நடத்தப்பட்டது.
ஸஃபர் 14ஆம்நாள் - 18.01.2011 அன்று மஹான் தைக்கா ஸாஹிப் வலிய்யுல்லாஹ் அவர்களின் 160ஆவது கந்தூரி நாள் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அன்று இரவு மஃரிப் தொழுகைக்குப் பின் ராத்திப் மஜ்லிஸும், இஷாவுக்குப் பின் மார்க்கச் சொற்பொழிவும் நடைபெற்றது.
திருவிதாங்கோடு அல்ஜாமிஉல் அன்வர் அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் நிஜாமுத்தீன் அஹ்ஸனீ சிறப்புரையாற்றினார்.
மறுநாள் அதிகாலை ஃபஜ்ர் தொழுகை முடிவுற்றதிலிருந்து காலை 08.00 மணி வரை நேர்ச்சை வினியோகம் நடைபெற்றது.
தகவல் மற்றும் படங்கள்:
ஹாஜி J.M.அப்துர்ரஹீம் காதிரீ,
மகுதூம் தெரு, காயல்பட்டினம். |