பொதுநல ஆர்வலரும், சிறந்த சிந்தனையாளரும், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் கவுரவ ஆலோசகரும், காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதின் செயற்குழு உறுப்பினருமான ஹாஜி எம்.எல்.ஷாஹுல் ஹமீத் எஸ்.கே. அவர்கள் 12.01.2011 அன்று காலமானார். அவரது நல்லடக்கம் மறுநாள் 13.01.2011 அன்று காலையில் நடைபெற்றது.
அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் நேற்று மாலை 05.00 மணிக்கு காயல்பட்டினம் கொச்சியார் தெருவிலுள்ள எஸ்.கே. இல்லத்திற்கு வருகை தந்தார். எஸ்.கே. அவர்களின் மகன் ஷமீமுல் இஸ்லாம் எஸ்.கே.எஸ்., எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோரும், மருமகன்களான அப்துர்ரஷீத் அவ்லியா, எஸ்.ஏ.கே.தைக்கா ஸாஹிப், பேரன் ஹாஃபிழ் ஏ.முஹம்மத் ஆகியோரும் அவரை வரவேற்றனர்.
எஸ்.கே. அவர்கள் காலமான தினத்தன்று, சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தமையால் தான் சென்னையில் இருக்க நேரிட்டதாகவும், அதனால் நேரில் வந்து நல்லடக்கத்தில் கலந்துகொள்ள இயலாமற்போனது என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.
மிடுக்கான தோரணை, கம்பீரமான நடை, தெளிவான பேச்சு என தன் வயதை விஞ்சிய அனைத்து பண்புகளையும் தன்னகத்தே நிரந்தரமாகக் கொண்டிருந்த அவரது நடவடிக்கைகள் அனைவரையும் ரசிக்க வைத்தவை என்றும், அவரது இழப்பு காயல்பட்டினம் நகருக்கு பேரிழப்பு என்றும், அவரது இழப்பால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தாருக்கும், உற்றார் - உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அப்போது அவர் தெரிவித்தார்.
காயல்பட்டினம் நகர தி.மு.க. செயலாளர் மு.த.ஜெய்னுத்தீன், நகர்மன்ற உறுப்பினர்கள் மும்பை மெய்தீன், ஓடை சுகு, சட்டமன்ற உறுப்பினரின் நேரடி உதவியாளர் தனசிங், இளந்தளிர் முத்து மற்றும் பலர் இந்நிகழ்வில் உடனிருந்தனர். |