காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவைக்கு, திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் நேற்று மாலை 05.45 மணிக்கு வருகை தந்தார். பேரவைத் தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ் தலைமையிலும், பேரவை செயலாளர் ஹாஜி பிரபு சுல்தான் முன்னிலையிலும் நடைபெற்ற இச்சந்திப்பில், நகர்நலக் கோரிக்கைகளாக சில அவர் முன் வைக்கப்பட்டன.
காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டத்தில் கட்டப்பட்டு வரும் தொகுப்பு வீடுகள் கட்டிடப் பணிகளை நிரந்தரமாக நிறுத்திட ஆவன செய்ய வேண்டுமென அப்போது அவரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
காயல்பட்டினம் ஜலாலிய்யா மஜ்லிஸையொட்டியும், மகுதூம் பள்ளி வளாகத்திலும் கட்டப்பட்டு, இதுவரை செயல்பாடு துவக்கப்படாமலிருக்கும் நீர்த்தேக்கத் தொட்டிகளை செயல்படச் செய்ய வேண்டுமென அப்போது அந்தந்த பள்ளி மற்றும் பகுதி நிர்வாகிகள் சார்பில் கோரப்பட்டது.
ஜலாலிய்யா வளாகத்திலுள்ள நீர்த்தேக்கத் தொட்டி வரும் 20.01.2011 வியாழக்கிழமை செயல்படத் துவங்குமெனவும், மகுதூம் பள்ளி வளாகத்திலுள்ள தொட்டி விரைவில் செயல்பட ஆவன செய்யப்படும் எனவும் சட்டமன்ற உறுப்பினர் சார்பில், காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர் சுகு தெரிவித்தார்.
அத்துடன், மேலாத்தூர் பகுதியைச் சார்ந்த பொதுமக்கள் காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையிடம் முன்வைத்த கோரிக்கை மனுவும் சட்டமன்ற உறுப்பினர் முன் வைக்கப்பட்டது.
மேலாத்தூர் வார்டு 01 பகுதியில், அருந்ததியர் சமுதாயத்தைச் சார்ந்த 60 குடும்பத்தினர் உட்பட ஏழை-எளிய மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த, தினக்கூலி வேலை செய்து வரும் 100 குடும்பத்தினர் கடந்த 50 ஆண்டுகளாக வசித்து வருவதாகவும், அவர்கள் வசிக்கும் பகுதியில் புறவழிச் சாலை அமைப்பதற்காக சர்வே செய்யப்பட்டு வருவதாகவும், அவ்வாறு சாலை அமைக்கப்பட்டால் மேற்படி குடும்பங்கள் வீடு வாசல்களை இழக்க வேண்டி வரும் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ள அம்மனுவில்,
அப்பகுதியிலுள்ள 10 ஏக்கர் நிலப்பரப்பில்தான் தமிழ்நாடு குடிநீர் வடிகால் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் 1949ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு, அங்கிருந்து சுத்தரிக்கப்பட்ட குடிநீர் ஆத்தூர், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருவதாகவும், அவ்விடத்தில் புறவழிச்சாலை அமையும்பட்சத்தில் குடிநீரில் மாசு கலந்து சுகாதாரக் கேட்டை உண்டாக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்மனு குறித்து பரிசீலித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக சட்டமன்ற உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அப்போது தெரிவித்தார்.
தகவல்:
L.M.E.கைலானீ,
குத்துக்கல் தெரு, காயல்பட்டினம். |