இலங்கை இராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்குமிடையே கடும் சண்டை நடந்து வந்த காலங்களில், சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இலங்கையைச் சுற்றியுள்ள கடற்கரைப் பகுதிகளில், குறிப்பிட்ட இடைவெளி விட்டு கடலோரம் முழுக்க பாதுகாப்புக்காக பீரங்கிகள் நிறுத்தப்பட்டிருந்தன.
அதுபோல, காயல்பட்டினம் கடற்கரையிலும் பொதுமக்கள் அமரும் மணற்பரப்பில் சுமார் 7 இடங்களில் கோபுரங்கள் உள்ளன. பார்க்க பாதுகாப்புக் கோபுரம் போன்றிருக்கும் அவை வேறொன்றுமில்லை... மாட்டுச் சாணக் குவியல்கள்தான்!
ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு தானாக வந்து இயற்கை உபாதைகளைக் கழித்துச் செல்லும் அளவுக்கு காயல்பட்டினம் மாடுகள் இன்னும் முதிர்ச்சியடையவில்லை என்பது ஒருபுறமிருக்க, பொதுவாக மாடு வளர்ப்போர் சாணங்களை சேகரித்து, அவற்றை வண்டிகளில் அனுப்பி வைப்பது வழக்கம். இதனால் ஏற்படும் செலவினங்களைத் தவிர்த்திடுவதற்கோ என்னவோ... சுற்றுவட்டாரத்தில் மாடு வளர்க்கும் ஒரு சிலர், காயல்பட்டினம் கடற்ரையின் சுகாதாரமான மணற்பரப்பில் கடந்த சில மாதங்களாக சாணங்களைக் கொட்டிக் கொட்டி, கடற்கரையோரத்தின் பெரும்பகுதி மணற்பரப்பில் கோபுரங்கள் அமைத்துள்ளனர்.
கடந்த மாதமும் (முதல் படம்), நேற்று மாலையிலும் பதிவு செய்யப்பட்ட கோபுர(?)க் காட்சிகள் பின்வருமாறு:-
தகவல்:
கடற்கரை பயனாளிகள் சங்கம்,
காயல்பட்டினம். |