சட்டமேலவை தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. பட்டதாரி தொகுதிகளில் 7,38,509 வாக்காளர்களும், ஆசிரியர் தொகுதிகளில் 1,37,929 வாக்காளர்களும் உள்ளனர்.
தமிழக சட்டமேலவைக்கு தேர்தல் நடத்துவதற்காக செப்டம்பர் 30ம் தேதி ஜனாதிபதி பிரதிபா பாட்டில் அறிவிப்பு வெளியிட்டார். அதைத் தொடர்ந்து சட்டமேலவை தேர்தலுக்கான பூர்வாங்க பணிகளை தேர்தல் கமிஷன் தொடங்கியது. பட்டதாரி மற்றும் ஆசிரியர் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 22ம் தேதி வெளியிடப்பட்டது.
இதில் விடுபட்ட மற்றும் புதிதாக வாக்காளர்களை சேர்ப்பதற்கான பணிகள் நவம்பர் 22ம் தேதி தொடங்கி முழுவீச்சில் நடந்தது. ஒவ்வொரு மாவட்டத்திலும் பட்டதாரிகள், ஆசிரியர்கள் அனைவரும் தங்கள் பெயர்களை பதிவு செய்தனர். இதற்காக சிறப்பு முகாம்களும் தேர்தல் கமிஷனால் நடத்தப்பட்டது.
அதன்படி, தொகுதி எல்லை வரையறை பணிகள் முடிந்து இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
இப்பட்டியல் அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகம், வட்டாச்சியர் அலுவலகம், தாலுகா அலுவலகம், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறியதாவது:
தமிழகத்தில் பட்டதாரி, ஆசிரியர்களுக்கான தலா 7 தொகுதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இறுதியாக பட்டதாரி தொகுதிகளில் 7 லட்சத்து 38 ஆயிரத்து 509 வாக்காளர்களும், ஆசிரியர் தொகுதிகளில் 1 லட்சத்து 37 ஆயிரத்து 929 வாக்காளர்களும் உள்ளனர். பட்டியலில் ஏதாவது திருத்தம் இருந்தால் அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்கலாம். உடனடியாக திருத்தம் மேற்கொள்ள முடியாது. இந்திய தேர்தல் ஆணையத்தால் திரும்பவும் மேலவை தேர்தலுக்கான பட்டியல் வெளியிடும் போது இத்திருத்தங்கள் அதில் சேர்க்கப்படும். புதிதாக பெயர் சேர்க்க முடியாது.
பட்டியலை பார்வையிட காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. அதன் பின்னர் தேர்தல் கமிஷன் அறிவிக்கும் தேதியில் மேலவை தேர்தல் நடத்தப்படும்.
இவ்வாறு பிரவீன்குமார் கூறினார்.
இறுதி பட்டியல் இணையதளத்தில் வெளியீடு இணையதளத்தில் பார்க்கலாம்
மேலவை தொகுதிக்கான இறுதி வாக்காளர் பட்டியல் www.elections.tn.gov.in
என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஒவ்வொரு மாவட்டத்திலும் எவ்வளவு பட்டதாரிகள், ஆசிரியர்கள் உள்ளனர் என்பதை தற்போது தெரிந்து கொள்ளலாம். இன்னும் 10 நாட்களில் வாக்காளர்களின் முழு விவரங்களும் அதில் வெளியிடப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.
தகவல்:
தினகரன்
|