பொதுநல ஆர்வலரும், சிறந்த சிந்தனையாளரும், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் கவுரவ ஆலோசகரும், காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதின் செயற்குழு உறுப்பினருமான ஹாஜி எம்.எல்.ஷாஹுல் ஹமீத் எஸ்.கே. அவர்கள் 12.01.2011 அன்று காலமானார். அவரது நல்லடக்கம் மறுநாள் 13.01.2011 அன்று காலையில் நடைபெற்றது.
எஸ்.கே. அவர்களின் மறைவிற்கும், கத்தர் காயல் நல மன்ற உறுப்பினர்களின் உறவினர்கள் மறைவிற்கும் இரங்கல் தெரிவித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
சிறந்த சமூக சேவையாளரும், ஈடு இணையற்ற சிந்தனையாளரும், பன்மொழிகளில் அசாத்திய திறன் பெற்றவரும், நகர்நலப் பணிகளில் தன்னை இறுதி வரை ஈடுபடுத்திக் கொண்டவரும், எம் மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதி ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் அவர்களின் அன்புத் தந்தையுமான அல்ஹாஜ் எம்.எல்.ஷாஹுல் ஹமீத் எஸ்.கே. அவர்கள் கடந்த 12.01.2011 அன்றும்,
காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் முதல்வர் கண்ணியத்திற்குரிய மவ்லவீ எஸ்.எஸ்.கலந்தர் மஸ்தான் ரஹ்மானீ அவர்களின் அன்பு மனைவியும், எமது மன்ற உறுப்பினர் நூருத்தீன் அவர்களின் அன்புத் தாயாருமான ஹாஜரா பீவி அம்மையார் அவர்கள் கடந்த 15.01.2011 சனிக்கிழமையன்றும்,
எம் மன்ற உறுப்பினர் முஹம்மத் தம்பி என்ற தம்பி காக்கா அவர்களின் மைத்துனர் ஜனாப் செய்யித் அஹ்மத் அவர்கள் கடந்த 15.01.2011 அன்றும் வல்ல அல்லாஹ்வின் கட்டளைப்படி தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா அளவில் சேர்ந்து விட்டார்கள்... இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
மர்ஹூம், மர்ஹூமாக்களின் மஃபிரத் - பாவப் பிழை பொருப்பிற்காக எம் மன்றம் மனமுருகி துஆ செய்வதோடு, அவர்கள் யாவருக்கும் மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்ற உயர் சுவனம் கிடைத்திட வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக என பிரார்த்திக்கிறது.
அத்துடன், அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக எனவும் எம் மன்றம் துஆ செய்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |