காயல்பட்டினம் நகர பொதுமக்களிடையே புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தேவையான முக்கிய தகவல்கள் அனைத்தையும் உள்ளடக்கிய குறும்படம் ஒன்றை நகருக்கேற்ற வகையில் தயாரித்து வெளியிடுவதென சஊதி அரபிய்யா - ஜித்தா காயல் நற்பணி மன்றம் சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
குறும்பட தயாரிப்பு குறித்த துவக்க ஆலோசனைக் கூட்டம் 27.12.2010 அன்று காயல்பட்டினம் மருத்துவர் தெருவிலும், இரண்டாவது கூட்டம் அன்று சென்னையிலும் நடைபெற்றது.
குறும்பட தயாரிப்பு முன்னேற்பாட்டுப் பணிகளுக்கு இறுதி வடிவம் கொடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் 18.01.2011 (நேற்று) மாலை 05.00 மணிக்கு காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்க கூட்ட அரங்கில் ஹாஜி எஸ்.அய்.அஹ்மத் தலைமையில் நடைபெற்றது.
இதுவரை நடைபெற்ற கூட்டங்களில் பேசப்பட்டவை குறித்தும், அவை செயல்படுத்தப்பட்டமை குறித்தும் ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ அக்கூட்டத்தில் விளக்கிப் பேசினார். குறும்படத்தில் இடம்பெற வேண்டிய காட்சியமைப்புகள் குறித்து ஷமீமுல் இஸ்லாம் எஸ்.கே.எஸ். விளக்கமளித்தார்.
குறும்பட தயாரிப்புக்கான ஒளிப்பதிவு வேலைகளை மேற்கொள்வதற்காக தொழில் முறையில் ஒளிப்பதிவாளர்கள் சில தினங்களில் காயல்பட்டினத்திற்கு வருகை தரவிருப்பதாகவும், அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய வேலை செயல்திட்டங்களை ஒழுங்குபடுத்துவது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதித்து முடிவெடுக்கப்பட்டது.
அத்துடன், புற்றுநோயின் கொடுமைகளை உணர்த்தும் பொருட்டும், நகர மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய உணவு ஒழுங்குமுறைகள், புற்றுநோய் தவிர்ப்பு நடவடிக்கைகளை விளக்கும் பதாதைகளைத் தாங்கியவர்களாக காயல்பட்டினம் நகர பள்ளி மாணவர்களைக் கொண்டு நகர் முழுக்க பேரணியாக செல்லச் செய்வதற்காக பள்ளி நிர்வாகங்களை அணுகுவதெனவும் அக்கூட்டத்தில் மேலும் முடிவு செய்யப்பட்டது.
இக்குறும்படம் குறித்த தங்கள் ஆலோசனை வரவேற்க்கப்படுகிறது. அவைகளை kayalcancerdoc@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு தெரியப்படுத்தவும்.
கூட்டத்தில் ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத், ஜித்தா காயல் நற்பணி மன்ற உள்ளூர் பிரதிநிதி ஹாஜி ஏ.எம்.இஸ்மாஈல் நஜீப், ஹாஃபிழ் எம்.எம்.ராஸிக், ஹாஜி எஸ்.அய்.புகாரீ, கே.எம்.டி.சுலைமான், ஹாஜி எஸ்.எச்.முஹம்மத் ஹஸன், ஏ.எம்.யூனுஸ், எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோர் கலந்துகொண்டனர். |