பொதுநல ஆர்வலரும், சிறந்த சிந்தனையாளரும், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் கவுரவ ஆலோசகரும், காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதின் செயற்குழு உறுப்பினருமான ஹாஜி எம்.எல்.ஷாஹுல் ஹமீத் எஸ்.கே. அவர்கள் 12.01.2011 அன்று காலமானார். அவரது நல்லடக்கம் மறுநாள் 13.01.2011 அன்று காலையில் நடைபெற்றது.
அவரது மறைவை முன்னிட்டு, தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) சாரபாக இரங்கல் கூட்டம்
14.01.2011 வெள்ளி பின்னேரம் மக்ரிப் தொழுகைக்குப் பின் பாங்காக் ஜெம் ஹவுஸ் இல்லத்தில் தலைவர் ஹாஜி வாவு ஷம்சுத்தீன் தலைமையில் நடைபெற்றது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து தக்வா அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
துவக்கமாக ஹாஃபிழ் எஸ்.எம்.மிஸ்கீன் சாஹிப் கிராஅத் ஓதினார். அவ்வமயம் பலரும் சகோதரர் எஸ்.கே. அவர்கள் செய்த சேவைகளை பற்றி விவரித்துப் பேசினார். அவர் தனதுரையில் எஸ்.கே. அவர்களுக்கும் தமக்குமிடையே இருந்து வந்த தொடர்பு, அவர்கள் ஊரில் இருக்கும்போது எஸ்.கே. அவர்கள் ஊர் நல விஷயங்களை விவாதிப்பது, பலவேறு சமுதாய செயல்பாடுகளில் இணைந்து செயலாற்றியது பற்றி நினைவு கூர்ந்தார்.
தொடரந்து சின்ஸியர் லங்கா மீரா சாஹிப் உரையாற்றினார். தமக்கும் எஸ்.கே. அவர்களுக்கும் இடையேயான உறவு மிக ஆழமானது. 1992 கால கட்டத்தில் நமதூரில் நடைபெற்ற அசம்பாவிதங்களுக்கு உரிய நடவடிக்கைகளை எடுத்தது, எஸ்.கே. அவர்கள் இலங்கையிலிருந்து செயல்பட்ட விதத்தை விபரமாக எடுத்துச் சொன்னதுடன், அவரது ஆங்கிலப் புலமைக்கு நிறைய உதாரணங்களையும் நினைவு கூர்ந்தார. பின் சகோதரர் எம்.டி.ஹுமாயூன் அவர்கள் தனது பால்ய காலங்களில் எஸ்.கே. அவர்கள் எப்படி எல்லாம் மார்க்க வழிகாட்டல்கள் காட்டினார் என்பதை ஞாபகப்படுத்திப் பேசினார். சகோதரர் எஸ்.ஏ.ஆர்..யூனுஸ் அவர்களும் எஸ்.கே. அவர்களைப் பற்றி புகழ்ந்து பேசினார்.
இறுதியாக பேசிய மௌலவி ஷாதுலி ஆலிம், மரணத்திற்குப் பிறகும் மனிதனை பின் தொடரும் செயல்களை விவரித்து, எஸ்.கே. அவர்கள் இதுபோன்ற பொது நல காரியங்களில் ஈடுபட்டதின் காரணமாக எல்லோரது மனதிலும் இடம்பிடித்துள்ளார்கள். உலகத்தில் எத்தனையோ நபர்கள் இருக்கலாம்... அவர்கள் எல்லோரும் மக்கள் மனதில் இடம் பெறுவதில்லை. ஆனால் எஸ்.கே. அவர்கள் எல்லோரது மனதிலும் இடம் பெற்றிருப்பது இறைவன் அவர்களுக்கு செய்த பெரும் பாக்கியம் என்று பேசினார்.
அல்லாஹ் அவரது பாவங்களை மன்னித்து அவரது அமல்கள் மற்றும் அவரது சேவைகள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு ஜன்னத்துல் ஃபிரதெளஸை வழங்கிடுவானாக. அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு, அல்லாஹ் அவர்களுக்கு பொறுமையைத் தந்தருள பிரார்த்திக்கிறோம். அவர் செய்த சேவையைப் போல் அவரது மக்களும் தொடர்ந்து சேவையாற்றிட வல்ல நாயன் துணை நிற்பானாக ஆமீன். எஸ்.கே. அவர்களது மஃபிரத்திற்காக யாஸீன் ஓதி ஈஸால் தவாப் செய்யப்பட்டது. இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின் பாங்காக் பள்ளி இமாம் முஹைதீன் ஆலிம் துஆ ஓத கூட்டம் நிறைவுற்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
ஹாஜி வாவு சம்சுத்தீன்,
தலைவர்,
தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா). |