முஸ்லிம் சிந்தனையாளரும், எழுத்தாளரும், பேச்சாளருமான காயல்பட்டினம் எஸ்.கே.ஷாஹூல் ஹமீது புதனன்று தமிழ்நாடு காயல்பட்டணத்தில்
காலமானார்.
1980களில் இலங்கையில் நீண்டகாலம் இஸ்லாமிய பணியிலீடுபட்ட இவர், அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின்
சம்மேளனத்தினால் வெளியிட்ட உதயம் மற்றும் டோன் பத்திரிக்கைகளின் ஆசிரியர் பீடத்தில் பணி புரிந்தார்.
முன்னாள் சபாநாயகர் அல்ஹாஜ் பாக்கீர் மாக்காருடன் இணைந்து முஸ்லிம் லீக் வாலிபமுன்னணி வளர்ச்சிக்காக அரும்பணி புரிந்தார்.
அவரது மறைவு குறித்து பாகிஸ்தான் சென்றுள்ள பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் ஏ.ஹெச்.எம். அஸ்வர் அங்கிருந்து அனுதாப செய்தி ஒன்றை விடுத்துள்ளார். எஸ்.கே. என எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் மர்ஹூம் ஷாஹூல் ஹமீது ஆழ்ந்த இஸ்லாமிய அறிவு மிக்க ஒருவர். இந்தியாவில் முஸ்லிம்களுக்கெதிரான ஊடகச் சவால்களை முறியடிப்பதற்காக தமது பேனாவை பயன்படுத்தியவர். அவரது மறைவு முஸ்லிம் சமூகத்துக்கு ஒரு பேரிழப்பாகும் என்றார்.
முன்னாள் அமைச்சர் அல்ஹாஜ் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் கூறியிருப்பதாவது -
தனது தந்தையுடன் சமூகப்பணி புரிந்த மர்ஹூம் எஸ்.கே. ஷாஹூல் ஹமீது ஆழ்ந்த அறிவு மிக்கவர். ஆங்கிலத்திலும் தமிழிலும் புலமைமிகு அவரது மறைவு சமூகத்துக்கு பேரிழப்பாகும் என்றார்.
முஸ்லிம் லீக் வாலிப முன்னணி அனுதாபம்
மூத்த முஸ்லிம் அறிஞரும், சமுதாய சிந்தனையாளரும், சமூக ஆர்வலருமான காயல்பட்டினம் எஸ்.கே. ஷாஹூல் ஹமீது அவர்கள் காலமான செய்தியை கேட்டு அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் ஆழ்ந்த கவலை கொள்கிறது. இஸ்லாமிய பணிகளில் ஆர்வத்தோடு முழு மூச்சாக செயற்பட்ட அன்னாரது மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனத்தின் தேசிய தலைவர் சட்டத்தரணி அல்ஹாஜ் ரஷீத் எம்.இம்தியாஸ் விடுத்துள்ள அனுதாப செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
மர்ஹூம் எஸ்.கே. ஷாஹூல் ஹமீது வாலிப முன்னணிகளின் சம்மேளனத்தின் வளர்ச்சிக்கு பெரும் சேவைகள் செய்துள்ளார். சம்மேளனத்தின் ஸ்தாபக தலைவர் மர்ஹூம் தேசமாணிய அல்ஹாஜ் பாக்கிர் மாகாருடன் இணைந்து இலங்கையில் நாளா பங்கங்களுக்கும் விஜயம் செய்து வாலிப முன்னணிகளின் உருவாக்க பணிகளில் பங்காற்றியுள்ளார். சம்மேளனம் வெளியிட்டு வந்த உதயம், DAWN ஆகிய பத்திரிக்கைகளின் ஆசிரியர் குழுவில் இடம்பெற்று தனது எழுத்தாற்றல் இளைஞர் மத்தியில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்தினார். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்றுரிந்த இவரது ஆற்றல் சமுதாய நலனுக்காக பயன்படுத்த பட்டமை விசேடமாக குறிப்பிடத்தக்கது.
தகவல்:
செய்யத் உமர் கலாமி,
இலங்கை.
|