எம்.எல்.ஷாஹுல் ஹமீத் (எஸ்.கே.) அவர்கள் மரணத்திற்கு, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் இரங்கல் தெரிவித்துள்ளது. அதன் விபரம் வருமாறு:-
எஸ்.கே. என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்பட்ட காயல்பட்டினம் எம்.எல். ஷாகுல் ஹமீது இன்று முற்பகல் 11.15 மணிக்கு காலமானார்.
அன்னாருக்கு வயது 68.
எஸ்.கே.எஸ். ஜுவல்லர்ஸ் அதிபராக இருந்த எஸ்.கே. முஹம்மது லெப்பை புதல்வரான இவர் புகழ்பெற்ற இலங்கை கண்டியின் திருத்துவ
கல்லூரியில் பயின்றவர். இலங்கை ராணுவ தளபதி லக்ஷமன் கொப்பேகடுவ, ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்ட காமினி திஸா நாயக்க போன்றோர் இவரது பள்ளி தோழர்கள்.
இலங்கை சட்டப் பேரவை சபாநாயகராக இருந்த பாகிர் மாக்காருக்கு ஆலோசகராக இருந்தவர். முஹம்மது அஸ்வருடன் இணைந்து உதயம்
பத்திரிகையில் ஆசிரியராக பணியாற்றியவர்.
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பில் பணி யாற்றிய எஸ்.கே. 1975ல் அகில இந்திய அளவில் முஸ்லிம் மாணவர் பேரவை உருவாக காரணமாக இருந்தவர். அதற்காக இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டவர்.
1985-ல் சவூதி அரேபிய அரசின் அழைப்பில் புனித மதீனா ஷரீப் சென்று அல்லாமா யூசுப் அலி மொழி பெயர்த்த புனித திருக் குர்ஆன் தஃப்சீர் ஆங்கிலத்தில் வெளிவருவதற்கு துணை புரிந்தவர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் காயல் பட்டினம் நகர துணைச் செயலாளராக முன்பு பொறுப்பு வகித்த எஸ்.கே. இறுதி மூச்சு உள்ளவரை சமூக பணிகளுக்கு பாடுபட்டவர்.
காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவையில் அமர்ந்து நகர பணிகளை ஆற்றி வந்தவர். இவருக்கு மனைவியும், இரண்டு புதல்வர்களும், மூன்று புதல்விகளும் உள்ளனர்.
அவரது புதல்வர் எஸ்.கே.சாலிஹ் மணிச்சுடர் நாளிதழின் தூத்துக்குடி மாவட்ட செய்தியாளராக பணிபுரிகிறார்.
அன்னாரின் ஜனாஸா காயல்பட்டினம் குருவித்துறை பள்ளியில் நாளை (13.1.2011) காலை நல்லடக்கம் செய்யப்படுகிறது. செய்தி அறிந்து தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், மாநில செயலாளர் காயல் மகபூப், எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., உள்ளிட்டோர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்து அன்னாரின் மக்பிரத்திற்கு துஆ செய்தனர்.
இவ்வாறு அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தகவல்:
எஸ்.ஏ.சி.ஹமீது,
அபு தபி, ஐக்கிய அரபு அமீரகம். |