சஊதி அரபிய்யா - ஜித்தா, ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரி (ASGIC) நலக்குழுவின் ஆலோசனைக்கூட்டம் சென்ற 07.01.2011 அன்று சகோ. நூர்தீன் (ஷரஃபிய்யா) இல்லத்தில் சகோ. எஸ்.எ.ஹுமாயூன் கபீர் தலைமையில் சகோ. எம்.ஐ.அப்துல் பாஸித் இறைமறை ஓத ஆரம்பமானது.
தாய் கல்லூரி:
ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் ஆரம்பம், வளர்ச்சி, செயல்பாடுகள், சாதனைகள் என பல செய்திகளை கோடிட்டார் சகோ.எஸ்.ஹெச்.ஹுமாயூன் கபீர். கண்ட தடைகளை களைந்து, கொண்ட கொள்கையில் உறுதி கொண்டு தமிழகத்திற்கே தாய் கல்லூரியாக திகழ்ந்து பல ஏகத்துவ பெண் மார்க்க அறிஞர்களை உருவாக்கிய பெருமை நம் கல்லூரியைச் சாருமென்று கூறிய அவர், அத்தகைய சூழலை நம் கல்லூரிக்கு ஏற்படுத்தி தந்த வல்ல நாயனை போற்றினார். மேலும், நமது நகரின் ஏகத்துவ எழுச்சி, தொடர்ந்து சந்தித்த சவால்கள் , செய்த தியாகங்கள் என பல சீரிய கடந்தகால நிகழ்வுகளை கண்முன் கொண்டுவந்து ஏகத்துவ பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் மேலும் பரவலாக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.
ஏகத்துவ இல்லம்:
அல்ஜாமிஉல் அஸ்ஹர் இறைஇல்லத்தின் தோற்றம் மற்றும் செயல்பாடுகளை விவரித்த சகோ.எம்.ஏ.செய்யித் இப்ராஹீம், இணைவைப்பின் சாயல் கூட இவ்வில்லத்தில்படாது தொலைநோக்கில் சிந்தித்து திறமையாக நிர்மாணித்த நம் முன்னோர்களை பாராட்டினார். தோன்றி ஆண்டுகள் பல ஆனாலும் அதன் தனித்தன்மையான ஏகத்துவ காற்றை மட்டுமே வீசும் இந்த இறைஇல்லம் தற்போது ஜன மிகுதியின் காரணமாக இட நெருக்கடி ஏற்பட்டு விரிவாக்கப்பணியில் இறங்கியுள்ளது என்றும் கூறினார். ஏனைய பணிகளைவிடினும் இந்த இறைஇல்லக் கட்டுமானப்பணி மிக முக்கியமானது என்று தெரிவித்த அவர், அதன் பணிகள் இனிதே துரிதாக முடிய நாம் யாவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்றார்.
மேலும்; நம் கல்லூரிக்கென்று ஒரு தனி இணையதளம் அமைப்பது காலத்தின் கட்டாயம் என்று நாம் ஏற்கனவே தீர்மானம் செய்ததை நினைவுபடுத்திய சகோ.செய்யித் இப்ராஹீம், நம் ஜித்தா ASGIC நலக்குழு தெரிவித்த இணையதள யோசனைக்கு முழு வடிவம் கொடுக்கும் முயற்சியில் தற்போது தம்மாம் மற்றும் ரியாத் ASGIC நலக்குழுக்களும் இறங்கியிருப்பதாகவும், அதன்படி நம் கல்லூரிக்கென தனி இணையதளம் வடிவமைத்து நம் தேவைக்கு செயல் வடிவம் கொடுத்திருக்கும் சகோ. சென்னை எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹுக்கு நம் நலக்குழு மனமார்ந்த நன்றிகளை தெரிவிப்பதாகவும் கூறினார்.
நன்மைகள் பல:
கல்லூரிக்கென்ற தனி இணையதளம் தொடர்பான மின்னஞ்சல் பரிமாற்றங்களை விவரித்த சகோ.ஒய்.எம்.முஹம்மத் ஸாலிஹ், இந்த வலைதளப்பணிகள் மூலம் பல நன்மைகளை நம் குழுமம் பெற முடியுமென்றார். தளம், குழுமம், இடுகை, இழை குறித்த சகோதரர்களின் சந்தேகங்களுக்கும் தெளிவான விளக்கம் அளித்தார். ஏற்கனவே செவ்வனே இயங்கி வரும் அல்ஜாமிஉல் அஸ்ஹர் மற்றும் இத்திஹாதுல் இக்வானில் முஸ்லிமீன் இணையதள வரிசையில் ஆயிஷா சித்தீகா மகளிர் இஸ்லாமிய கல்லூரி புதிய இனைய தளமும் இணைகிறதென்றும், இந்த அஸ்ஹர் குழும இணையதளங்கள் மூன்றையும் சிறப்பாக செயல்படுத்த சகோதரர்களின் மேலான ஆதரவையும் உயரிய ஆலோசனைகளையும் வேண்டிக்கொண்டார்.
சிறந்த முயற்சி:
நாம் அளிக்கும் சிறு உதவிகள் மூலம் கல்லூரியின் பல பணிகள் நடந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று கூரிய சகோ.எம்.எம்.மூஸா ஸாஹிப், இணையதள உருவாக்கம் சிறந்த முயற்சியென்று பாராட்டினார். நாம் பகிர்ந்த இந்த செய்திகளை நம் சகோதர குழுக்களும் அறிய கேட்டுக்கொண்டார். இறைஇல்ல விரிவாக்கப்பணிகளுக்கு நமது உதவிகள் அவசியம் உண்டு என்றும் கூறினார்.
நன்றிகள்:
அல்ஜாமிஉல் அஸ்ஹர் தலைமை பிரச்சாரகர் (கத்தீப்) மௌலவி அப்துல்மஜீத் மஹ்ழரியை தொலைத்தொடர்பு கொண்டு அஸ்ஹர் குழும செய்திகளை கேட்டறிந்த சகோ.எம்.ஐ.முஹம்மத் ஷுஅய்ப், தற்போதய அஸ்ஹர் விரிவாக்க கட்டுமானப் பணிகள் குறித்து விளக்கினார். கல்லூரியின் விடுதி குறித்தும் அறியத்தந்த அவர் அனைத்து பணிகளும் விரைந்து நிறைவு பெற எடுக்கும் முயற்சிகளில் நம்குழு உரிய ஒத்துழைப்பை நல்கும் என்றார்.
கல்லூரி விடுதி கட்டுமானப்பணிகளுக்கு உதவிகள் வழங்கிய நல் உள்ளங்கள் யாவருக்கும் நன்றிகள் தெரிவித்து, நிதி நிலையை சமர்பித்து, சந்தாவின் முக்கியத்தை உணர்த்தி அவைகளை விரைந்து செலுத்திட சகோதரர்களை கேட்டுக்கொண்டார்.
தீர்மானங்கள்:
• அல்ஜாமிஉல் அஸ்ஹர் - ஏகத்துவ இறைஇல்ல விரிவாக்க கட்டுமானப்பணிகளுக்கு நம் அனைவரது பங்களிப்பும் மிக அவசியம் தேவை என்று வலியுறுத்தும் இந்நலக்குழு, அதற்காக ஒருவர் எத்தனை தொழும் இடங்களையும் (முஸல்லா) அளிக்கலாம் என்றும் இந்த இறைஇல்ல விரிவாக்கப்பணியில் பிறரையும் பங்களிக்கச்செய்து நன்மைகள் பெற்றுத்தரலாம் என்றும் இம்மன்றம் கேட்டுக்கொள்கிறது.
• அஸ்ஹர் குழும இணையதளங்களின் சேவைகள், பொறுப்புக்கள், தேவைகளை ஜித்தா, ரியாத், தம்மாமில் இயங்கும் ASGIC நலக்குழுக்கள் பகிர்ந்து கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது.
• ASGIC இணையதள வடிவமைப்புப் பணிகள் விரைந்து முடிந்து அது தனது பணியை தொடங்க இந்நலக்குழு ஆவல் கொள்கிறது.
தேநீர் பரிமாறப்பட்டு பிரார்த்தனையுடன் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.
தகவல்:
அரபி ஷுஅய்ப்,
ஜித்தா.
|