கலாநிதி எஸ்.கே. ஷாஹுல் ஹமீதின் மறைவு என்னை பெரிதும் வாட்டுகிறது. எமது பாராளுமன்ற சபாநாயகர் சமல் ராஜபக்ஷவுடன் உத்தியோகபூர்வ நல்லெண்ண விஜயம் ஒன்றை மேற்கொண்டு பாகிஸ்தான் நாடு சென்று தாயகம் திரும்பி, நாட்டுக்கு வந்ததும் என்னைப் பெரிதும் வாட்டிய செய்தி இதுவாகும். இவ்வாறு அண்மையில் இறையடி சேர்ந்த காயல்பட்டினத்தைச் சேர்ந்த அல் ஹாஜ் எஸ்.கே. ஷாஹுல் ஹமீத்தின் திடீர் மறைவையொட்டி பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற கவுன்சிலின் உறுப்பினருமான அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியிலேயே குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து அந்த அனுதாபச் செய்தியில் எஸ்.கே. என எல்லோராலும் அன்போடும் மரியாதையோடும் அழைத்து வந்த இப்பெருமகன் எனது மிக மிக நெருங்கிய நண்பராவார். நான் இஸ்லாமிய சமய விவகார அமைச்சராக இருந்த பொழுது எமக்கு உதவும் பொருட்டு அமைச்சில் இணைந்து அற்புதமான பல பணிகளைச் செய்தவர். அவருடைய பேச்சும் இஸ்லாமியத் தத்துவங்களை மிகத் திண்மையாக தொட்டு நின்றது.
சர்வதேச அரசியல் விவகாரங்களிலும் அவர் ஆழ்ந்த புலமை பெற்றிருந்தவர். ஸ்யோனிச, யூத, காலனித்துவ எதேச்சதிகாரங்களை எதிர்த்து மூச்சு விடாமல் போராடி வந்தவர்.
முன்னாள் சபாநாயகர் அல் ஹாஜ் எம்.ஏ. பாக்கீர் மாக்கார், அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியை ஸ்தாபித்தபோது அதில் மிகவும் பற்றுறுதியோடு இணைந்து செயலாற்றினார். முஸ்லிம் வாலிபர்கள் மத்தியில் இஸ்லாமிய தத்துவார்த்தங்களை விதைக்க இவரால் ஆரம்பிக்கப்பட்ட உதயம், டோன் என்ற தமிழ், ஆங்கில நாளிதழ்களில் இஸ்லாமிய தத்துவ விதைகளைத் தூவி முஸ்லிம்கள் மத்தியில் கருத்தோட்டத்தையும் மறுமலர்ச்சியையும் ஏற்படுத்த அவர் புரிந்த மகோன்னத பணிகளை நாம் என்றும் மறவோம். அதனை இன்றும் என்றும் நன்றியுணர்வோடு நினைத்துப் பார்க்கிறேன். அந்த இரண்டு பத்திரிக்கைகளிலும் அவர் முஸ்லிம்களினது, குறிப்பாக முஸ்லிம் வாலிபர்களின்
சிந்தனையைத் தூண்டி பல ஆக்கபூர்வமான தாக்கங்களை அவர் ஏற்படுத்தினார்.
தெளிந்த நீரோடையைப் போன்று எஸ்.கே.யின் எழுத்து நடை முஸ்லிம்களின் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
எஸ்.கே. தனது ஆரம்பக் கல்வியை இலங்கையின் எழில்மிகு மலை நாட்டின் கண்டி மாநகர் திருத்துவக் கல்லூரியில் பெற்றார். முன்னாள் பிரதமர் திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் உறவுகளோடு சேர்ந்து இக்கல்லூயில் படித்த பெருமை இவருக்குண்டு. கண்டி முஸ்லிம் லீக் கட்டிடத்திற்கு அடிக்கடி விஜயம் செய்த இவர் பண்டார நாயக்க ரத்வத்தை சகோதர நபர்களோடு மேசைப் பந்தாட்ட விளையாட்டில் ஈடுபட்டு விளையாட்டில் நல்ல தேர்ச்சி பெற்றார்.
ஜமாஅத்தே இஸ்லாம் இயக்கத்தின் உத்தியோகப்பற்றற்ற பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் இருந்து இலங்கையிலும் இந்தியாவிலும் அவர் நல்ல பல சிந்தனைச் சொற்பொழிவுகளை ஆற்றி இந்தியாவிலும் இலங்கையிலும் மார்க்கப்பணியை சிறந்த முறையில் செய்த ஒரு அறிவு மேதையாகும்.
எஸ்.கே.யின் அன்பு மனைவி ஹாஜா மர்சூனா, மகன் சமீம் உட்பட குடும்பத்தில் ஏனைய பிள்ளைகள், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெவித்துக் கொள்வதோடு அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் நிழலில் பேரின்பம் பெற இறைவனை இரு கரமேந்திப் பிரார்த்திக்கிறேன் என்றும் தெவித்துள்ளார்.
நன்றி:
வீரகேசரி நாளிதழ், இலங்கை.
தகவல்:
ஏ.எஸ்.புஹாரி (துணை பொருளாளர்) மற்றும் ஒ.எல்.முஹம்மது ஆரிப் (செயற்குழு உறுப்பினர்),
காவாலங்கா. |