பொதுநல ஆர்வலரும், சிறந்த சிந்தனையாளரும், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் கவுரவ ஆலோசகரும், காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதின் செயற்குழு உறுப்பினருமான ஹாஜி எம்.எல்.ஷாஹுல் ஹமீத் எஸ்.கே. அவர்கள் 12.01.2011 அன்று காலமானார். அவரது நல்லடக்கம் மறுநாள் 13.01.2011 அன்று காலையில் நடைபெற்றது.
நல்லடக்கத்தைத் தொடர்ந்து, காயல்பட்டினம் கொச்சியார் தெருவிலுள்ள அவரது இல்லத்தின் முன், நகரப் பிரமுகர்களால் நடத்தப்பட்ட இரங்கல் கூட்டத்தில், சஊதி அரபிய்யா - தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் சார்பில் அதன் உள்ளூர் பிரதிநிதி கவிஞர் ஹாஜி ஏ.ஆர்.தாஹா இயற்றி வாசித்த இரங்கல் கவிதை பின்வருமாறு:-
எஸ் கே எனும் இரு சொல்லால்
எங்கள் இதயம் நிறைந்தவரே
ஏற்றமிகும் இறையைக் காண
எங்களை விட்டுச் சென்றவரே
உள்ளார்ந்த உமதன்பால்
அனைவரையும் கவர்ந்திட்டீர்
ஊருக்கு உழைப்பதிலே
அனைவரையும் விஞ்சிட்டீர்
ஊரார்கள் ஒன்றுபட
ஓய்வின்றி உழைத்திட்டீர்
ஊக்கமோடு நல்ல பணிகள்
நடக்க திட்டம் தந்திட்டீர்
மனித நேயம் மாண்பாய்ப் பேணி
மாற்றாரை மதித்தவரே
மனதறிந்து யாருக்குமே
துன்பம் தரா நல்லவரே
ஏகத்துவ நெறி காக்க
எந்நாளும் உழைத்தவரே
எல்லோரோடும் அன்பொழுக
எண்ணங்களைப் பகிர்ந்தவரே
விஞ்ஞான கண்ணோடு
குர்ஆனை ஆய்ந்தவரே
விவாதங்கள் பலவற்றில்
வெற்றிக் கொடி கொண்டவரே
கைப் பொருளை செலவிட்டு
கட்சி பல வளர்த்திட்டீர்
கை மாறாய் எவரிடத்தும்
பணம் தேட மறுத்திட்டீர்
பணம் சேர்க்க மனமின்றி
பாரினில் நீர் வாழ்ந்திட்டீர்
பண்பான உம் குணத்தால்
பலர் நெஞ்சில் நிலைத்திட்டீர்
அய்க்கியப் பேரவையினிலே
முக்கிய ஓர் அங்கம் நீர்
அய்க்கிய விளையாட்டு சங்கத்திலும்
ஆர்வமிக்க உறுப்பினர் நீர்
ஆங்கில மொழி சில பொழுதில்
அர்த்தம் தெரிந்திட உமை நாடும்
அழகுறும் உம் உச்சரிப்பால்
ஆங்கில மொழி மெருகேறும்
பல்கலைக் கழகங்கள் உம் பேச்சை
பணிவோடு செவி மடுக்கும்
புது வார்த்தை உம் பேச்சில்
பல கண்டு மெய்ச்சிலிர்க்கும்
ஜாகிர் நாயக் உரைகள் உங்கள்
தமிழாக்கத்தால் மிளிர்ந்தது
தமிழ் கூறும் நல்லுலகம்
உம்மால் பயன் அடைந்தது
உம்மை இழந்து நாங்களிங்கே
கண்ணீரில் மிதக்கின்றோம்
உம் பணியைத் தொடர்பவர் யார்
தெரியாமல் தவிக்கின்றோம்
காலத்தின் அருமை கருதி
கவிதையை நான் சுருக்குகிறேன்
கருணையிறை எம்மவர்க்கு
சுவனம் தர இறைஞ்சுகிறேன்
இவ்வாறு அந்த இரங்கல் கவிதை அமைந்திருந்தது.
தகவல்:
ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத்,
அப்பாபள்ளித் தெரு, காயல்பட்டினம்.
|