இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளை சார்பில் தென்மாவட்ட அளவிலான கிராஅத் போட்டி பாளையங்கோட்டையிலும், அதனைத் தொடர்ந்து இறுதிப்போட்டி கீழக்கரையிலும் நடத்தப்பட்டது.
இறுதிப் போட்டியில், 12ஆம் வகுப்பு வரையிலான மாணவியர் பிரிவில், இரண்டாம் வகுப்பு படிக்கும் - காயல்பட்டினம் மரைக்கார் பள்ளித் தெருவைச் சார்ந்த மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீயின் பேத்தியும், ஹாஃபிழ் பி.எம்.முஹம்மத் ஸர்ஜூன் என்பவரின் மகளுமான சிறுமி எம்.எஸ்.உம்மு உமாரா முதல் பரிசை வென்றுள்ளார்.
அவரது சாதனையைப் பாராட்டியும், கராத்தே எனும் தற்காப்பு கலை குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் நோக்கிலும் காயல்பட்டினம் தாயிம்பள்ளி நிர்வாகத்தின் கீழுள்ள சீதக்காதி நினைவு நூலக வாசகர் வட்டம் சார்பில் நேற்று இரவு 08.00 மணிக்கு சிறப்புக் கூட்டம் நடத்தப்பட்டது.
தாயிம்பள்ளி தலைவர் ஹாஜி எஸ்.டி.வெள்ளைத்தம்பி தலைமை தாங்கினார். சீதக்காதி நூலக வாசகர் வட்ட செயலர் ஏ.லெப்பை ஸாஹிப் என்ற ஏ.எல்.எஸ். மாமா, வாசகர் வட்ட தலைவர் எஸ்.எச்.முஹம்மத் நியாஸ், தாயிம்பள்ளி நிர்வாகி கே.எம்.தவ்லத் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தம்மாம் காயல் நற்பணி மன்ற பிரதிநிதி கவிஞர் ஹாஜி ஏ.ஆர்.தாஹா நிகழ்ச்சிகளைத் தொகுத்தளித்தார்.
பின்னர், கராத்தே எனும் தற்காப்புக் கலையின் அவசியம், இதுபோன்ற தற்காப்புக் கலைகள் குறித்த இஸ்லாமிய பார்வை உள்ளிட்டவை குறித்து, காயல்பட்டினம் நகரில் பல்வேறு பள்ளிகளில் கராத்தே மற்றும் யோகா பயிற்சிகளை வழங்கி வரும் பேட்டை இர்ஃபான் சிறப்புரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து, இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளை நிறுவனம் சார்பில் அண்மையில் பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி வளாகத்திலும், அதனைத் தொடர்ந்து கீழக்கரையிலும் நடத்தி முடிக்கப்பட்டுள்ள தென்மாவட்டங்கள் அளவிலான கிராஅத் போட்டி ஏற்பாடுகள் குறித்தும், காயல்பட்டினம் நகரின் மாணவ-மாணவியரிடம் புதைந்து கிடக்கும் திறமைகளை வெளிக்கொணர வேண்டியதன் அவசியம் குறித்தும், அதற்காக அவர்களிடம் கடைப்பிடிக்கச் செய்யப்பட வேண்டிய சுய கட்டுப்பாடுகள் குறித்தும், காயல்பட்டினம் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ விளக்கிப் பேசினார்.
பின்னர் பரிசளிப்பு விழா நடைபெற்றது. தென் மாவட்ட அளவிலான கிராஅத் போட்டியில் முதலிடம் பெற்ற மாணவி எம்.எஸ்.உம்மு உமாராவிற்கு சீதக்காதி நூலகம் சார்பில், தாயிம்பள்ளி நிர்வாகத் தலைவர் ஹாஜி எஸ்.டி.வெள்ளைத் தம்பி பரிசு வழங்கினார். தனது ஓவியபள்ளி மாணவி என்ற அடிப்படையில் ஏ.எல்.எஸ். மாமாவின் சார்பில் ஹமீத் துரை, எல்.டி.எஸ்.கோல்டு ஹவுஸ் நிறுவனம் சார்பில் பி.மி.அப்து காக்கா ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
பின்னர் மாணவி உம்மு உமாரா கூட்டத்தில் கலந்துகொண்ட மக்களிடையே தனதினிய குரலால் திருமறை குர்ஆனின் “முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்...” எனத்துவங்கும் வசனத்தை ஓதிக் காண்பித்து, அனைவரின் பாராட்டையும், பிரார்த்தனைகளையும் பெற்றுக் கொண்டார்.
இறுதியாக என்.எம்.அஹ்மத் நன்றி கூற, தாயிம்பள்ளி இமாம் அஹ்மத் காஸிம் துஆவுடன் விழா நிறைவுற்றது. இவ்விழாவில் தாயிம்பள்ளி மஹல்லா ஜமாஅத்தைச் சார்ந்த திரளானோர் பங்கேற்றனர்.
தகவல்:
ஏ.லெப்பை ஸாஹிப் என்ற ஏ.எல்.எஸ். மாமா,
கே.டி.எம். தெரு, காயல்பட்டினம். |