எம்.எல்.ஷாஹுல் ஹமீத் (எஸ்.கே.) அவர்கள் மரணத்திற்கு, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் இரங்கல் தெரிவித்துள்ளார். அதன் சாராம்சம் வருமாறு:-
சமூக ஆர்வலரும், காயல்பட்டணம் அல்ஜாமியுல் அஸ்ஹர் ஜும்மா பள்ளியின் செயற்க்குழு உறுப்பினரும், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகத்தின் காயல்பட்டணக் கிளையின் முன்னாள் தலைவருமான எம். எல். ஷாஹுல் ஹமீத் அவர்கள் சென்ற புதன் (ஜனவரி 12, 2011) காலை 11.20 மணியளவில் காலமானார்கள். அன்னாருக்கு வயது 69. அவர் மரணமடைந்த செய்தி காயல்பட்டணம் தமுமுக நிர்வாகி ஜாஹிர் அவர்கள் மூலம் அறியவந்து பெரும் துயரம் அடைந்தேன். 30 ஆண்டுகளுக்கு மேலாக நான் நட்புக் கொண்டிருந்த என்னுடைய மூத்த சகோதரரை இழந்த துக்கம் உள்ளத்தில் எழுந்தது.
எஸ்.கே. என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் அந்த சகோதரரை நான் முதலில் சந்தித்தது 1980ன் தொடக்கத்தில். அப்போது இந்திய
மாணவர் இஸ்லாமிய இயக்கத்தின் தலைமையகம் 211 அங்கப்பன் நாயக்கன் தெருவில் (ஒலைக்கடை அங்காடி) அமைந்திருந்தது. வாரந்தோறும்
ஞாயிறு அன்று உறுப்பினர்களின் வாரந்திர வகுப்பு நடைபெறும். அதில் திருக்குர்ஆன் விரிவுரையும் இடம் பெறும். அது போல் ஒரு நாள் நடந்த
வகுப்பில் சகோதரர் எஸ்.கே. அவர்கள் திருக்குர்ஆன் வகுப்பு நடத்தினார். அவரது சரளமான நகைச்சுவை கலந்த தமிழ்நடை என்னை வெகுவாக
கவர்ந்தது. தமிழைப் போல் அவரது ஆங்கிலமு்ம் என்னை வெகுவாக கவர்ந்தது. அப்போது முதல் அவருடனான எனது நட்பு தொடங்கியது. மார்க்க
விஷயங்கள் மட்டுமின்றி பல்வேறு பயனுள்ள அறிவுசார்ந்த நுட்பங்களை அவரிடமிருந்து நான் கற்றுக் கொண்டேன்.
சகோதரர் எஸ்.கே. அவர்களுடனான எனது நட்பின் தொடக்க காலக்கட்டத்தில் தனது இளமைக் கால அனுபவங்களை பகிர்ந்துக் கொள்வது உண்டு. இலங்கையில் உள்ள கண்டியில் எஸ்.கே.யின் தந்தை எஸ்.கே. முஹம்மது லெப்பை அவர்கள் எஸ்.கே.எஸ். ஜுவல்லர்ஸ் என்னும் நகை கடை நடத்தி வந்தார். அவரது பராமரிப்பில் வளர்ந்து வந்த எஸ்.கே. அவர்கள் அங்கேயே கல்வி பயின்றார். புகழ்பெற்ற டிரினிட்டி கல்லூரியில் அவரது கல்வி பயணம் தொடர்ந்தது. அவர் என்னுடன் அவ்வப்போது பகிர்ந்துக் கொண்ட பல செய்திகளை அவரது மரணம் குறித்து செய்தி வெளியிட்ட காயல்பட்டணம் டாட் காம் தொகுத்து வழங்கியுள்ளது...
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட போது அதனுடன் இணைந்து செயல்பட்டார் எஸ்.கே. காயல்பட்டண நகரத் தமுமுக
தலைவராகவும் அவர் சேவையாற்றினார்.
இஸ்லாமிய அறிஞர்களின் ஆங்கில உரையை தமிழாக்கம் செய்வதில் வல்லவராக திகழ்ந்தார் எஸ்.கே. தமிழகம் வருகை புரிந்த அப்துல் ரஹீம்
கிரீன், பிலால் பிலிப்ஸ் ஆகியோரின் உரைகளை தமிழாக்கம் செய்தார். 1999ல் ஜுலை 4ல் சென்னை கடற்கரையில் தமிழ்நாடு முஸ்லிம்
முன்னேற்றக் கழகம் நடத்திய முஸ்லிம்களின் வாழ்வுரிமை மாநாட்டில் பங்குக் கொண்டு உரையாற்றிய இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர்
இப்ராஹீம் சுலைமான் சேட் அவர்களின் ஆங்கில உரையை தமிழாக்கம் செய்தவரும் சகோதரர் எஸ்.கே. அவர்கள் தான்.
தனது இறுதி நாட்களின் போதும் அவரது இந்த மார்க்கப் பணி தொடர்ந்தது. டாக்டர் ஜாகிர் நாயக்கின் உரைகள் விவாதங்களெல்லாம் தமிழ் வடிவம்
பெற்று வருகின்றது. அந்த பணியின் ஒரு தூணாக இருந்து செயல்பட்டு வந்தவர் எஸ்.கே.
எஸ.கே. அவர்களுடன் சேர்ந்து பணியாற்றிய போது பல சுவையான அனுபவங்கள் உண்டு. அனைவற்றையும் இங்கே பதிவுச் செய்ய இயலாது.
ஆனால் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வை மட்டும் பதிவுச் செய்ய விரும்புகிறேன்.
மாணவர் இயக்கத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த வேளையில்
சென்னையில் இஸ்லாத்தின் பெண்ணுரிமை என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் நடைபெறப் போவதாக எங்களுக்கு தகவல் வந்தது. அமெரிக்கவில்
உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைகழகத்தில் இஸ்லாமிய ஆய்வுத் துறை பேராசிரியராக பணியாற்றும் யோனே ஹத்தாத் என்பவர் அந்த உரையை ஆற்றப்
போகின்றார் என்ற தகவலும் எங்களுக்கு கிடைத்தது. இஸ்லாம் பெண்களுக்கு அளிக்கும் உரிமைகளை கொச்சைப்படுத்தும் நோக்கத்தில் இந்த
கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நானும் எஸ்.கே.யும் இயக்க சகோதரர்களும் தகுந்த தயாரிப்புகளுடன் (இத்தலைப்பு குறித்த சரியான
அறிமுக ஒலைகளுடன்) அழையா விருந்தாளிகளாக கருத்தரங்கம் நடைபெற்ற இடத்திற்குச் சென்றோம்.
பேராசிரியை ஹத்தாத் இஸ்லாம்
பெண்களின் உரிமைகளை மதிப்பதில்லை. அதற்கு எடுத்துக்காட்டு ஹிஜாப் என்னும் பர்தா என்ற பாணியில் தனது உரையை அமைத்துக் கொண்டார்.
அவரது உரை முடிந்த உடன் கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டது. முதல் நபராக சகோதரர் எஸ்.கே. எழுந்து தனக்கே உரிய மிடுக்கான
ஆங்கிலத்தில் 'if covering one's whole body is a symbol of oppression, then why is it your nuns are covering their entire body
from head to toe? If your reason is they are holy people, we Muslims consider our entire women folk as holy' (முழு
உடலையும் மறைப்பது அடக்குமுறையின் சின்னம் என்றால் ஏன் உங்கள் பெண் துறவிகள் தலை முதல் கால் வரை மறைத்துக் கொள்கிறார்கள்.
அவர்கள் புனிதமானவர்கள் தான் அதற்கு காரணம் என்று நீங்கள் சொல்வீர்கள் எனில் நாங்கள் எங்கள் பெண்கள் அனைவரையும் புனிதமானவர்களாக
கருதுகிறோம்) என்று சொல்லி முடிப்பதற்குள் அரங்கம் நிறைந்த கரகோசை எழும்பியது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நிலை குலைந்து போனார்கள்.
போதாகுறைக்கு நாங்கள் இஸ்லாம் கூறும் பெண்ணுரிமை குறித்த சிற்றோலைகளை அரங்கம் முழுவதும் வினியோகிக்க நிகழ்ச்சி ஏற்பட்டாளர்களின்
நோக்கம் சிதைந்து போனது.
தம்பி ஜவாஹிர் என்று நேசத்துடன் என்னை அவர் அழைக்கும் குரலை இனி நான் கேட்கப் போவதில்லை. ஆனால் எஸ.கே. அவர்களின் நினைவுகள்
அவருக்காக எனது மனதை எப்போதும் பிரார்த்திக்கச் சொல்லும்...
இதுவே அவ்வறிக்கையின் சாராம்சம் ஆகும்.
தகவல்:
பீ.எம்.எஸ்.சதக்கத்துல்லாஹ்,
தமாம், சவுதி அரேபியா. |