காயல்பட்டின கருப்புடையார் வட்டம் (சிங்கித்துறை) பகுதியில், தமிழக அரசின் கடலோரபகுதிகளில் ஆபத்தான இடங்களில் உள்ள வீடுகளை மாற்று
இடத்தில் கட்டும் திட்டத்தின் கீழ் [Vulnerability Reduction of Coastal Communities (VRCC)], நகரில்
கட்டப்படும் குடியிருப்புகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கிய பேரவை அழைப்பின் பெயரில் நகரில் இம்மாதம் நான்காம் தேதியன்று - கடை அடைப்பும், ஆர்ப்பாட்டமும் நடந்தது. இப்பிரச்சனை குறித்து ஐக்கிய பேரவை சார்பில்
மாவட்ட திமுக செயலாளர் பெரியசாமியை ஐக்கிய பேரவை பிரதிநிதிகள் அண்மையில் சந்தித்தனர்.
அதனை தொடர்ந்து ஜனவரி 13 வியாழன் அன்று காயல்பட்டணத்தில் இருந்து குழு ஒன்று, மாவட்ட ஆட்சியர் திரு சி.என்.மகேஸ்வரனை
சந்தித்தது. இக்குழுவில் நகராட்சி தலைவர் வாவு செய்யத் அப்துர்ரஹ்மான், துணைத்தலைவர் எம்.ஏ.கஸ்ஸாலி மரைக்கார், தி.மு.க. நகர
செயலாளர் ஜெய்னுதீன், காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கிய பேரவை செயலாளர் பிரபு சுல்தான், சென்னை காயல்பட்டினம் ஐக்கிய சங்கத்தின்
செயலாளர் காதர், முஸ்லிம் லீக் சார்பாக M.H.அப்துல் வாஹித், பிரபு முஹம்மது தம்பி, சொளுக்கு முத்து ஹாஜி, வாவு நாசர், வாவு W.S.A.R.
இஸ்ஹாக், அப்துல் ரஷீத் (அவ்லியா), மரைக்கார், ஆதம் சுல்தான், குத்புதீன், மொகுதூம், மெய்தீன், அப்துல் காதர்(பாலப்பா), கோபால்,
நெய்னா, கணேசன், ஜலீல் ஆகியோர் இடம்பெற்றனர்.
அச்சந்திப்பின்போது குழுவின் சார்பாக இக்குடியிருப்பு திட்டம் முறைப்படி அமல்படுத்தப்படவில்லை என்றும், அதன் பயனாளிகள் தேர்வு
வெளிப்படையான அறிவிப்பின் பெயரில் நடக்கவில்லை என்றும், அதற்கான நிலம் தவறான வழியில் கையகப்படுத்தப்பட்டுள்ளது என்றும், நகரில்
சுனாமியால் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும், நகரில் ஏழைகள் பலர் உள்ளர் என்றும், அவர்களை புறக்கணித்துவிட்டு ஒரு குறிப்பிட்ட
சமுதாய மக்களுக்கு மட்டும் குடியிருப்புகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது.
இதற்கு பதில் அளித்த மாவட்ட ஆட்சியர், இத்திட்டம் முறைப்படி அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், 169 பயனாளிகள் இன்னும் இறுதி
செய்யப்படவில்லை என்றும், நில ஆர்ஜிதத்தில் ஏதும் பிரச்சனை இருந்தால் உரியவர்கள் நீதி மன்றத்தை அணுகி, தடைபெற்றுகொள்ளட்டும் என்றும்
தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் - வழக்கு தொடர சாத்தியமாக ஜனவரி 31 வரை குடியிருப்பு கட்டுமான வேலையை நிறுத்தி வைப்பதாக
மாவட்ட ஆட்சியர் வாக்களித்தார் என்றும் கூறப்படுகிறது.
தகவல் மற்றும் புகைப்படங்கள்:
எஸ்.ஆர்.பி.ஜஹாங்கீர் |