காயல்பட்டினம் தாயிம்பள்ளிவாசல் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் சீதக்காதி நினைவு நூலகம் சார்பில் சர்வதேச கராத்தே மாஸ்டரை வரவேற்றும், அண்மையில் தென்மாவட்ட அளவிலான கிராஅத் போட்டியில் முதலிடம் பெற்ற இளம் மாணவியைப் பாராட்டியும் விழா நடத்தப்படவுள்ளது.
இதுகுறித்து, சீதக்காதி நினைவு நூலகத்தின் வாசகர் வட்ட தலைவர் எஸ்.எச்.முஹம்மத் நியாஸ், செயலாளர் ஏ.லெப்பை ஸாஹிப் என்ற ஏ.எல்.எஸ். மாமா ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
நமது சீதக்காதி நினைவு நூலகம் சார்பில் வாசகர் வட்ட கூட்டம் 16.01.2011 ஞாயிறு பின்னேரம் திங்களிரவு இஷா தொழுகைக்குப் பின் நூலக வளாகத்தில் நடைபெறவுள்ளது.
சர்வதேச கராத்தே மாஸ்டர் பேட்டை இர்ஃபான் அவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கராத்தே என்ற தற்காப்புக் கலையின் அவசியம், அதனால் விளையும் ஆரோக்கியம் குறித்து உரையாற்றுகிறார்.
அத்துடன், கடந்த 27.12.2010 அன்று இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளை சார்பில் கீழக்கரையில் நடத்தப்பட்ட தென்மாவட்டங்கள் அளவிலான கிராஅத் போட்டியின் இறுதிப்போட்டியில் முதலிடம் பெற்ற
ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரியும் ஹாஃபிழ் பி.எம்.முஹம்மத் ஸர்ஜூன் அவர்களின் மகளும், காயல்பட்டினம் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியரான மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எச்.பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ அவர்களின் பேத்தியுமான எம்.எஸ்.உம்மு உமாரா என்ற 02ஆம் வகுப்பு படிக்கும் ஏழு வயது இளம் மாணவி, 12ஆம் வகுப்பு வரையுள்ள மாணவியர் கலந்துகொண்ட கிராஅத் போட்டியில் முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளதைப் பாராட்டும் வகையில் விழா நடத்தி, ஊக்கப்பரிசு வழங்கப்படவுள்ளது.
நகரப் பிரமுகர்கள், தாயிம்பள்ளிவாசல் நிர்வாகிகள் கலந்துகொள்ளும் இவ்விழாவில் பொதுமக்கள் திரளாகப் பங்கேற்று சாதனை மாணவியை ஊக்கப்படுத்த வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |