தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு போட்டிகள் நடத்த வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையர் பிரவீன் குமார் தெரிவித்து உள்ளார்.
தேசிய வாக்காளர் தினம், சட்டமன்ற பொதுத்தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாநில தலைமை தேர்தல் ஆணையர் பிரவீன்குமார், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சி.நா.மகேசுவரனுடன் வீடியோ காண்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார்.
அப்போது தலைமை தேர்தல் ஆணையர் பிரவின் குமார் கூறியதாவது:-
வருகிற 25-ந் தேதி தேசிய வாக்காளர் தினத்தை சிறப்பாக கொண்டாட வேண்டும். அன்று மாவட்ட, வட்ட, வாக்குச்சாவடி அளவில் வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும். விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பள்ளி, கல்லூரி அளவில் பேச்சு போட்டி, கலைநிகழ்ச்சிகள், மனித சங்கிலி நடத்த வேண்டும்.
சட்டமன்ற மேலவை வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு வருகிற 20-ந் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட வேண்டும். வருகிற 24-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிப்பார்க்க வேண்டும். பொதுத்தேர்தலுக்கு அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்ய வேண்டும் என்று கூறினார்.
ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) ராஜேந்திரன், தேர்தல் பிரிவு தாசில்தார் சாமுவேல், தேசிய தகவலியல் அலுவலர் குமார், சிரஸ்தார் பரமசிவம், உதவி செய்தி-மக்கள் தொடர்பு அலுவலர் ப.காந்தி ஆகியோர் உடன் இருந்தனர்.
தகவல்:
தினத்தந்தி |