காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி மையவாடியில், நடைபாதையோரங்களில் வேம்பு, புங்கை, இலந்தை, அத்தி, இயல்வாகை உள்ளிட்ட பல்வேறு வகை மரங்கள் நட்டப்பட்டுள்ளன. கடந்த பல காலமாக சொளுக்கு எஸ்.எஸ்.எம்.செய்யித் முஹம்மத் ஸாஹிப் என்ற சொளுக்கு செய்யித் என்பவர் மட்டுமே சிரமம் பாராமல் தினமும் நீண்ட தூரம் தண்ணீர் சுமந்து சென்று மரங்களுக்கு ஊற்றி வளர்த்து வந்தார்.
இந்நிலையில் தனிநபர் சுமையைக் குறைக்கவும், ஆட்களில்லாத நேரங்களிலும் மரங்களுக்கு தண்ணீர் தானாகப் பாய்வதற்கு வசதியாகவும் சொட்டு நீர் பாசனத்தை நடைமுறைபடுத்துவது சிறந்தது என்று கருதி, உ.ம.ஷாஹுல் ஹமீத் என்பவர் தலைமையில், சொளுக்கு செய்யித், சிந்தா மதார், பொறியாளர் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஆகியோரடங்கிய குழுவினர் முயற்சியில் இறங்கினர்.
பள்ளி மையவாடியின் நடைபாதையோரங்களில் நட்டப்பட்டுள்ள மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச வசதியாக அனைத்து மரங்களையொட்டி ஓரடி ஆழத்திற்கு குழி தோண்டி, பாசனக் குழாயை அதனுள் நிறுவி, மரங்களுக்கு தனித்தனி சிறு குழாய்களிட்டு, சுமார் ஒரு வார காலம் இடைவிடாமல் பணியாற்றி சொட்டு நீர் பாசனத்தை அமைத்துள்ளனர்.
பள்ளி மையவாடியையொட்டிய தனிக்கழிவறைக்கு மேற்புறத்தில் தண்ணீர் தொட்டியை நிறுவி, அதில் நீரேற்றுவதற்காக ஒரு நீரேற்றியும் (மோட்டர்) அமைத்து, அதனைப் பாதுகாப்பதற்காக அறையொன்றும் அமைத்துள்ளனர்.
மோட்டர் நீரேற்றி, தண்ணீர் தொட்டி, பாசனக்குழாய் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்காக தீவுத்தெருவைச் சார்ந்த ஹாஜி உ.ம.செய்யித் இப்றாஹீம் தம்பதியர், ஹாஜி முஹம்மத் நூஹ் உள்ளிட்டோர் பொருளாதார ஒத்துழைப்புகளைச் செய்துள்ளனர். பாசன அமைப்புக் குழுவினரும் தமது பங்களிப்பாக கனிசமான தொகையை செலவழித்துள்ளனர்.
இத்திட்டம் குறித்து அமைப்புக் குழுவைச் சார்ந்த உ.ம.ஷாஹுல் ஹமீத் கருத்து தெரிவிக்கையில்,
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நமதூரின் ஒவ்வொரு வீட்டையொட்டியும் ஒரு தோட்டம் இருந்தது. நாளாவட்டத்தில் நகரில் வீடுகள் பெருக்கத்தால், புதிய வீடுகள் கட்டுவதற்கு இடமில்லாத நிலையில், நன்கு செழித்து வளர்ந்திருந்த மரங்களைக் கொண்ட தோட்டங்களையெல்லாம் மக்கள் அழித்து வீடுகளாக்கி வருகின்றனர். இதனால் நகரில் காற்று மாசு ஏற்பட்டு, பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு பெரும் கேடு உண்டாகி வருகிறது.
இவற்றையெல்லாம் முற்கூட்டியே சிந்தித்துதானோ என்னவோ, முன்னோர்கள் நமதூரின் ஒவ்வொரு பள்ளிவாசலுக்கும் பெரும் பரப்பளவில் நிலங்களை தானமாக (வக்ஃப்) கொடுத்துள்ளனர்.
வீடுகளில்தான் நம்மால் தோட்டங்களைப் பாதுகாக்க முடியவில்லை... குறைந்தபட்சம் இதுபோன்ற பொது இடங்களையாவது நாம் பயன்படுத்தி நம் நகரைப் பசுமையாக்க முயற்சிக்கலாமே... என்ற எண்ணத்தின் விளைவே இத்திட்டம் செயல்படுத்தப்பட காரணமாயிற்று! என்றார்.
இதுகுறித்து ஹாஜி சொளுக்கு செய்யித் கருத்து தெரிவிக்கையில்,
நம் நகரில் பரந்த நிலப்பரப்பைக் கொண்டுள்ள அனைத்து பள்ளிவாசல்களையொட்டியும் இதுபோன்று மரங்களை நட்டி சொட்டு நீர்ப்பாசனம் அமைக்கலாம்... அவ்வாறு யாரேனும் அனைத்து ஏற்பாடுகளோடும் பணியாற்ற முன்வந்தால், அவர்களுக்காக நேரம் ஒதுக்கி வழிகாட்டவும், இயன்றளவுக்கு உடனிருந்து பணியாற்றவும் நாங்கள் ஆர்வமாக உள்ளோம்... என்றார். |