தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில், இங்குள்ள 6 சட்டசபை தொகுதிகளில் மொத்தம் 10 லட்சத்து 81 ஆயிரத்து 736 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்களை விட, 9 ஆயிரத்து 826 பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.
தமிழகம் முழுவதும் 2011 ஜனவரி 1ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு 18 வயது நிரம்பிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். இதற்கான வரைவு வாக்காளர் பட்டியல் 2010 அக்டோபர் 25ம் தேதி வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல் உள்பட படிவங்கள் வழங்கப்பட்டு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. வாக்காளர் பெயர் சேர்க்க கடந்த நவம்பர் 12ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, வாக்காளர்களிடம் இருந்து பெறப்பட்ட பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் ஆகிய படிவங்கள் குறித்து வீடு, வீடாகச் சென்று விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து, வாக்காளர்களின் முழு விவரங்களையும் கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி நடந்தது. தமிழகத்தில் உள்ள 234 சட்டசபைத் தொகுதிகளிலும், இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த 5ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாக வருவாய்த்துறையினர் மழை நிவாரணப் பணிகளை மேற்கொள்ளச் சென்றனர். இதனால் வாக்காளர் பட்டியல் வெளியிட தாமதமானது. இந்நிலையில் ஜனவரி 10ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்தார். அதன்படி இன்று தமிழகத்தில் உள்ள அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், இறுதி வாக்காளர் பட்டியலை இன்று வெளியிட்டனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. பட்டியலை மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) துரை.ரவிச்சந்திரன் வெளியிட்டார். அது பற்றிய விவரம் தொகுதிவாரியாக வருமாறு:
விளாத்திக்குளம்
விளாத்திக்குளம் தொகுதியில் 86 ஆயிரத்து 108 ஆண் வாக்காளர்கள், 86 ஆயிரத்து 369 பெண் வாக்காளர்கள் என மொத்தம் ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 477 வாக்காளர்கள் உள்ளனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி தொகுதியில் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 773 ஆண் வாக்காளர்கள், ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 355 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 9 ஆயிரத்து 128 வாக்காளர்கள் உள்ளனர்.
திருச்செந்தூர்
திருச்செந்தூர் தொகுதியில் 90 ஆயிரத்து 740 ஆண் வாக்காளர்கள், 95 ஆயிரத்து 889 பெண் வாக்காளர்கள், என மொத்தம் ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 629 வாக்காளர்கள் உள்ளனர்.
ஸ்ரீவைகுண்டம்
ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 83 ஆயிரத்து 990 ஆண் வாக்காளர்கள், 88 ஆயிரத்து 823 பெண் வாக்காளர்கள் என மொத்தம் ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 813 வாக்காளர்கள் உள்ளனர்.
ஓட்டப்பிடாரம்
ஓட்டப்பிடாரம் தனித்தொகுதியில் 82 ஆயிரத்து 125 ஆண் வாக்காளர்கள், 81 ஆயிரத்து 218 பெண் வாக்காளர்கள், என மொத்தம் ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 343 வாக்காளர்கள் உள்ளனர்.
கோவில்பட்டி
கோவில்பட்டி தொகுதியில் 88 ஆயிரத்து 219 ஆண் வாக்காளர்கள், 89 ஆயிரத்து 127 பெண் வாக்காளர்கள் என மொத்தம் ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 346 வாக்காளர்கள் உள்ளனர்.
மாவட்டத்தில் இந்த 6 தொகுதிகளில் 5 லட்சத்து 35 ஆயிரத்து 955 ஆண் வாக்காளர்களும், 5 லட்சத்து 45 ஆயிரத்து 781 பெண் வாக்காளர்களும் உள்ளனர். மொத்தம் 10 லட்சத்து 81 ஆயிரத்து 736 வாக்காளர்கள் உள்ளனர்.
தகவல்:
www.tutyonline.net
|