தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இம்மாதம் 22ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெறவுள்ளது. இதற்கான ஆன்லைன் முன்பதிவு 12.01.2011 (நாளை) முதல் துவங்குகிறது. இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு பின்வருமாறு:-
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக ஜனவரி 22இல், தூத்துக்குடி அரசினர் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமிற்கான ஆன்லைன் முன்பதிவு 12.01.2011 அன்று துவங்குகிறது.
வேலைவாய்ப்பற்ற படித்த இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களில் தொழில்திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டம் தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 22ஆம் தேதி நடத்தப்படுகிறது.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள - 18 முதல் 35 வயது வரையுள்ள - 10ஆம் வகுப்பிற்கு மேல் படித்துள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் இம்முகாமில் கலந்துகொள்ளலாம்.
இம்முகாமில் கலந்துகொள்ள, ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. www.thoothukudi.tn.nic.in என்ற இணையதளத்திலுள்ள முன்பதிவுப் படிவத்தில் பூர்த்தி செய்து பதிவு செய்து கொள்ளலாம். ஆன்லைன் மூலம் பதிவு செய்தவுடன் பதிவு செய்ததற்கான ஒப்புதல் சீட்டும் கணினி வழி எடுத்துக்கொள்ளலாம். ஆன்லைன் மூலமாக 12.01.2011 முதல் 20.01.2011 வரை பதிவு செய்து கொள்ளலாம்.
ஆன்லைன் மூலம் பதிவு செய்ய இயலாதவர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் 12, 13, 14 ஆகிய மூன்று நாட்களில் அனைத்து ஆவனங்களுடன் சென்று பதிவு செய்துகொள்ளலாம்.
இந்த நாட்களிலும் பதிவு செய்ய இயலாதவர்கள் 18 மற்றும் 19 தேதிகளில் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இங்ஙணம் முன்பதிவு செய்து, ஒப்புதல் அட்டைகள் பெற்றவர்கள் மட்டுமே 22ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள இயலும்.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு, தொழில்திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு அளிக்க மாநில மற்றும் மாவட்ட அளவிலான பல தனியார் நிறுவனங்கள் இசைவு தெரிவித்துள்ளன.
எனவே, வேலைவாய்ப்பற்ற படித்த இளைஞர்கள் இந்த வாய்ப்பினை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்ளப் படுகிறது.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |