தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மாற்றுத் திறனாளி பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கிடும் பொருட்டு, மறு ஆய்வு மருத்துவ முகாம் வரும் மார்ச் மாதம் 11ஆம் தேதியன்று திருச்செந்தூரில் நடைபெறவுள்ளது. இதுகுறித்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு பின்வருமாறு:-
இந்திராகாந்தி தேசிய மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை திட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் தகுதியுள்ள பயனாளிகளைப் புதிதாகச் சேர்த்திட ஏதுவாக ஊராட்சி ஒன்றியம் வாரியாக மறு ஆய்வு மருத்துவ முகாம் நடத்தப்படவுள்ளது.
அந்த வரிசையில், திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில் வரும் 11.03.2011 அன்று காலை 11.00 மணிக்கு மறு ஆய்வு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.
தகுதியுடைய அனைத்து மாற்றுத் திறனாளி பயனாளிகளுக்கும் உதவித்தொகை வழங்கிட வேண்டும் என்ற உயரிய நோக்குடன் மாவட்ட நிர்வாகம் மூலம் இச்சிறப்பு முகாமை நடத்திட உத்தரவிடப்பட்டுள்ளது.
ஊனத்தின் தன்மை 50 சதவீதம் மற்றும் அதற்கு மேற்பட்ட 18 வயது நிரம்பிய மாற்றுத் திறனாளிகள் இம்மறு ஆய்வு மருத்துவ சிறப்பு முகாமில் கலந்துகொள்ளலாம். அவ்வாறு முகாமில் கலந்துகொள்ள வரும்போது தேசிய அடையாள அட்டை மற்றும் குடும்ப அட்டை ஆகியவற்றின் அசல் கொண்டு வர வேண்டும்.
ஏற்கனவே மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை திட்டத்தில் உதவித்தொகை பெற்று வரும் பயனாளிகள் வட்டாட்சியரால் வழங்கப்பட்ட உத்தரவு நகலினைக் கொண்டு வர வேண்டும். பராமரிப்பு உதவித்தொகை ரூ.500 மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் அலுவலகம் மூலம் பெற்று வரும் பயனாளிகள் இம்முகாமில் கலந்துகொள்ள வேண்டாம்.
மறு ஆய்வு சிறப்பு முகாமில் மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட்டு, தகுதியுடைய மாற்றுத் திறனாளிகளுக்கு இந்திராகாந்தி தேசிய மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்க பரிந்துரை செய்யப்பட்டு, மாதம் ரூ.500 உதவித்தொகை பெற்று பயன்பெறலாம்.
இதுகுறித்து மேலதிக தகவல்கள் அறிய விரும்புவோர் சம்பந்தப்பட்ட சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியரை அணுகி தெரிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |