காயல்பட்டினம் நகரில் புற்றுநோய் பரவலுக்கான காரணிகளைக் கண்டறியும் முயற்சிகளை மேற்கொண்டு வரும் Cancer Fact Finding Committee - CFFCக்கு ரூ.10,000 நிதியொதுக்கீடு செய்ய சிங்கப்பூர் காயல் நல மன்ற செயற்குழு தீர்மானித்துள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டம் 07.01.2011 அன்று இரவு 08.00 மணிக்கு, மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.
எம்.ஏ.கே.ஷேக்னா தலைமை தாங்கினார். சோனா அபூபக்கர் சித்தீக் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.
வரவு-செலவு & நிதிநிலையறிக்கை:
31.12.2011 வரையிலான மன்றத்தின் வரவு-செலவு கணக்கறிக்கையை பொருளாளர் எஸ்.எச்.அன்ஸாரீ சமர்ப்பித்தார். 2011ஆம் ஆண்டிற்கான - உறுப்பினர் ஹரீஸ் தயாரித்த மன்றத்தின் நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) அவரும், மன்ற துணைச் செயலாளர் மொகுதூமும் இணைந்து சமர்ப்பித்தனர். பட்ஜெட்டை சிறப்புற தயாரித்ததற்காக உறுப்பினர் ஹரீஸ் அவர்களை மன்றத் தலைவர் பாராட்டினார்.
பின்னர், மன்றத் தலைவர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் அண்மையில் தான் காயல்பட்டினம் சென்று, பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றமை குறித்து கூட்டத்தினருக்குத் தெரிவித்தார்.
நகர்மன்றத் தலைவருக்கு பாராட்டு:
காயல்பட்டினத்தில் இரண்டாவது பைப்லைன் திட்டம் நிறைவேற்றப் படுவதற்காக தனது பொறுப்பில் ரூ.50 லட்சம் பங்களிப்புச் செய்ய விழைந்துள்ள நகர்மன்றத் தலைவர் ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மான் அவர்களுக்கு மன்றம் தனது மனமார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டது.
புதிய நிர்வாகக் குழு:
மன்றத்தின் தற்போதைய நிர்வாகக் குழுவின் பதவிக்காலம் 31.03.2011 தேதியுடன் முடிவடைகிறது. புதிய நிர்வாகக் குழு,
தலைவர்
துணைத்தலைவர்
செயலாளர்
இரண்டு துணைச் செயலர்கள்,
பொருளாளர்
இரண்டு துணைப் பொருளாளர்கள்
என்ற கட்டமைப்பில் அமைக்கப்படலாம் என தலைவர் கருத்து தெரிவித்தார். அத்துடன், சமூகப் பணிகளாற்றிடும் பொருட்டு ஆர்வப்படும் உறுப்பினர்கள் மேற்படி பொறுப்புகளை ஏற்றிட முன்வர வேண்டும் என்றும், பொறுப்புகளுக்கு போட்டி ஏற்படுமேயானால் தேர்தல் மூலம் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்படுவர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
சிறப்பு மலர்:
மன்றத்தால் வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ள சிறப்பு மலரை தயாரிக்கும் பொறுப்பை எஸ்.கே.ஸாலிஹ் வசம் ஒப்படைக்க செயற்குழு தீர்மானித்துள்ளது.
இம்மலரில் தமது கட்டுரை, கவிதை, துணுக்குச் செய்திகள், குறுந்தகவல்கள், சிங்கையில் பணியாற்றுகையில் தமது சுய அனுபவம், சிறுகதைகள், சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு பெறுவதற்கான விழிப்புணர்வையூட்டும் கட்டுரைகள் உள்ளிட்ட தமது படைப்புகளை இடம்பெறச் செய்ய விரும்பும் உறுப்பினர்கள் மலர்க்குழுவிடம் விரைந்து தமது ஆக்கங்களை ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இவ்வாண்டு மே மாதத்திற்குள் மலரை வெளியிடுவதென உத்தேசமாக கால நிர்ணயம் செய்யப்பட்டது.
மருத்துவ உதவி:
மருத்துவ உதவி கோரி பெறப்படும் மனுக்கள் குறித்து காயல் நற்பணி மன்றம் - ஜித்தா, காஹிர் பைத்துல்மால் - ரியாத், காயல் நற்பணி மன்றம் - தம்மாம் அமைப்புகளுடன் தகவல் பரிமாற்றம் செய்துகொள்ளும் முறைமைகள் குறித்து மன்ற துணைச் செயலாளர் மொகுதூம் முஹம்மத் கூட்டத்தில் விவரித்தார்.
CFFCக்கு நிதியொதுக்கீடு:
காயல்பட்டினத்தில் புற்றுநோய் பரவலுக்கான காரணிகளை அதிகாரப்பூர்வமாக கண்டறிவதற்காக என்று உருவாக்கப்பட்டு செயல்பட்டு வரும் Cancer Fact Finding Committee - CFFCக்கு மன்றத்தின் சார்பில் ரூ.10,000 நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இக்ராஃ புதிய உறுப்பினர்கள்:
இக்ராஃவில் புதிதாக உறுப்பினராவதற்காக விண்ணப்பித்துள்ள மன்ற உறுப்பினர்களின் பட்டியலை துணைச் செயலர் மொகுதூம் விவரித்தார். விரைவில் அவ்விண்ணப்பப் படிவங்கள் இக்ராஃவிற்கு அனுப்பி வைக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
வழியனுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு:
சிங்கப்பூர் முஃப்தீ ஜனாப் ஹாஜி செய்யித் ஈஸா பின் முஹம்மத் பின் ஸெலாமத் அவர்கள் விடைபெறுவதையொட்டி, 23.01.2011 அன்று சிங்கை இந்திய முஸ்லிம் கூட்டமைப்பால் (FIM) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வழியனுப்பு நிகழ்ச்சியில் மன்ற உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்க வருமாறு மன்றத் தலைவர் அழைப்பு விடுத்தார்.
ஐக்கியப் பேரவைக்கு உதவி:
காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவைக்கு மன்றத்தின் சார்பில் உதவப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
கைபேசி கதிர்வீச்சு குறித்த விழிப்புணர்வு:
கைபேசியைப் பயன்படுத்துவதால் ஏற்படும் கதிர்வீச்சுக் கெடுதிகள், கைபேசியுடன் இணைத்து பயன்படுத்தும் Ear Piece, Bluetooth ஆகியவற்றின் கதிர்வீச்சு பக்கவிளைவுகள் குறித்து கூட்டத்தில் உறுப்பினர்கள் விவாதித்தனர்.
கைபேசிக் கருவியிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சின் அளவு குறித்தும் ஆய்ந்தறிய வேண்டும் என CFFCக்கு கூட்டம் தனது வேண்டுகோளை முன்வைப்பதாக தெரிவிக்கப்பட்டது.
வருங்கால மணமகனுக்கு வாழ்த்து:
இம்மாதம் 23ஆம் தேதி திருமணம் செய்யவுள்ள மன்ற உறுப்பினர் உமர் ரப்பானீக்கு மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தமது இதயப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.
தனது திருமண நிகழ்ச்சியில் மன்ற உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்க வருமாறும், தனது வருங்கால நல்வாழ்வுக்காக பிரார்த்திக்குமாறும் வருங்கால மணமகன் உமர் ரப்பானீ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கணக்குத் தணிக்கையாளர் நியமனம்:
வரும் பொதுக்குழுவிற்கான 2010ஆம் ஆண்டின் கணக்குகளை தணிக்கை செய்வதற்காக உறுப்பினர் முஹம்மத் அலீ அவர்களை கூட்டம் நியமித்துள்ளது.
விவாதிக்க வேறு அம்சங்கள் எதுவும் இல்லாத நிலையில், இரவு 09.15 மணிக்கு மன்ற உறுப்பினர் ஹரீஸ் அவர்களின் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
ரஷீத் ஜமான்,
செயலாளர்,
காயல் நல மன்றம், சிங்கப்பூர். |