காயல்பட்டினத்தில் ஆண்டுதோறும் புதிய கல்வியாண்டில், நகரிலுள்ள ஏழை-எளிய மாணவ-மாணவியருக்காக சமுதாயத்தின் பல்வேறு பொதுநல மற்றும் அரசியலமைப்புகள் சார்பில் இலவச பள்ளிச் சீருடைகள், பாடக் குறிப்பேடுகள் வழங்கப்பட்டு வருகிறது.
வெவ்வேறு அமைப்புகள் தனித்தனியே வழங்கினாலும், பெறுவது காயல்பட்டினம் மக்கள் மட்டுமே என்பதால், ஒரு மாணவருக்கே பல அமைப்பினரும் பாடக் குறிப்பேடுகள், பள்ளிச் சீருடைகளை வினியோகிப்பதும், இதன் காரணமாக தகுதியுள்ள சில மாணவ-மாணவியருக்கு இந்த இலவச பொருட்கள் கிடைக்காமற்போவதும் தொடராக நிகழ்ந்து வருகிறது.
இக்குறையைப் போக்கிடும் வகையில், 20.12.2010 அன்று இரவு 07.00 மணிக்கு, இக்ராஃ அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது.
காயல்பட்டினம் நகரில் ஏழை-எளிய மாணவர்களுக்கு பள்ளி பாடக்குறிப்பேடுகள், சீருடைகளை இலவசமாக வினியோகித்து வரும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (த.மு.மு.க.), காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை, காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பு, கற்புடையார்பள்ளி வட்டம் கடற்கரை முஹ்யித்தீன் பள்ளி, அல்-அமீன் இளைஞர் நற்பணி மன்றம், அன்னை கதீஜா மகளிர் மத்ரஸா, கே.வி.ஏ.டி.புகாரீ ஹாஜி அறக்கட்டளை ஆகிய அமைப்புகளைச் சார்ந்தோரும், இக்ராஃ நிர்வாகிகளும் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், இக்ராஃ கல்விச் சங்கத்தின் தலைமையின்கீழ், பள்ளிச் சீருடை, பாடக்குறிப்பேடுகள் இலவச வினியோகத்திற்கான விண்ணப்பங்களை மட்டும் அதன் அலுவலகத்திலிருந்தே வினியோகிக்கவும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைப் மீளப்பெறவும், தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஒருங்கிணைந்த முறையில் அமைப்புகள் பிரித்துக் கொள்ளவும் அக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருந்தது.
விண்ணப்பங்கள் வினியோகம், அந்தந்த அமைப்புகளுக்கு விண்ணப்பங்களை பிரித்தளித்தல் உள்ளிட்டவற்றை தங்குதடையின்றிச் செய்திடும் பொருட்டு,
(01) ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் தலைமையில்,
(02) கே.ஜே.ஷாஹுல் ஹமீத்,
(03) இசட்.ஏ.ஷேக் அப்துல் காதிர்,
(04) கே.முஹம்மத் ஆஷிக்,
(05) ஜாஹிர் ஹுஸைன்,
(06) முஹம்மத் நூர் ஃபிர்தவ்ஸ்,
(07) மாஷாஅல்லாஹ் செய்யித் முஹம்மத்,
(08) கே.அப்துர்ரஹ்மான்,
(09) கே.எம்.டி.சுலைமான்,
(10) ஏ.தர்வேஷ் முஹம்மத் மற்றும்
(11) எஸ்.கே.ஸாலிஹ்
ஆகியோரடங்கிய குழுவும் அக்கூட்டத்தில் நியமனம் செய்யப்பட்டது.
விண்ணப்பப்படிவம் வினியோகம் குறித்த விபரங்கள் அடங்கிய பிரசுரத்தை 31.12.2010 வெள்ளிக்கிழமையன்று நகரின் இரண்டு ஜும்ஆ பள்ளிகளிலும் வினியோகிப்பதென்றும், மறுநாள் 01.01.2011 சனிக்கிழமை முதல் இக்ராஃவிலிருந்து விண்ணப்பங்களை வினியோகிப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும், வினியோகத்தில் சம்பந்தப்பட்ட மேற்படி அனைத்து அமைப்பினரையும் கலந்தாலோசனை செய்வதில் ஏற்பட்ட கால விரையம் காரணமாக, அத்தேதிகள் ஒரு வாரம் பிற்படுத்தப்பட்டு, 07.01.2011 அன்று ஜும்ஆ பள்ளிகளில் பிரசுரங்களை வினிகோகிக்கவும், 08.01.2011 முதல் விண்ணப்பங்களை வினியோகிக்கவும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ள 22.01.2011 அன்று கடைசி நாளாக நிர்ணயித்தும் ஏற்பாட்டுக் குழுவினரால் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.
அதனடிப்படையில், 08.01.2011 அன்று இக்ராஃ கல்விச் சங்க அலுவலகத்தில் விண்ணப்ப வினியோகம் துவங்கியது. துவக்க நாளன்றே சுமார் 400 விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை வரை 820 விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டுள்ளது.
நேற்றும், நேற்று முன்தினமும் பள்ளிக்கூட விடுமுறை என்பதால், மாணவ-மாணவியர் தம் பெற்றோருடன் நீண்ட வரிசையில் காத்திருந்து விண்ணப்பங்களைப் பெற்றுச் சென்றது குறிப்பிடத்தக்கது. இக்ராஃ அலுவலகப் பொறுப்பாளர் மஹ்பூப் பயனாளிகளுக்கு விண்ணப்பங்களை வினியோகிக்கும் காட்சி:-
விண்ணப்பங்கள் குறித்த பிரசுரம்:-
விண்ணப்பப் படிவ மாதிரி:-
தகவல்:
A.தர்வேஷ் முஹம்மத்,
நிர்வாகி,
இக்ராஃ கல்விச் சங்கம், காயல்பட்டினம். |