காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டம் - கோஸ்மரை தர்கா அருகில் புதிதாக தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.
நகரின் பூர்விகமற்றவர்களைப் புதிதாகக் குடியமர்த்தும் நோக்கோடு இக்கட்டிடம் கட்டப்படுவதாகவும், கட்டிடப் பணிகளை நிறுத்துவது குறித்து அரசின் கவனத்தை ஈர்ப்பதாகவும் கூறி, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை சார்பில் 04.01.2011 அன்று காலை முதல் மாலை வரை நகர் முழுக்க கடையடைப்பு போராட்டமும், மாலை 04.30 மணிக்கு பிரதான வீதியில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை சார்பில் சொளுக்கு முத்து ஹாஜி, ஹாஜி வாவு கே.எஸ்.நாஸர், மவ்லவீ என்.டி.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் மஹ்ழரீ, எம்.எல்.அப்துர்ரஷீத் அவ்லியா, எஸ்.எச்.மஹ்மூத் நெய்னா ஆகியோரும், காயல்பட்டினம் நகர தி.மு.க. பிரதிநிதிகளும், நேற்று (08.01.2011) காலையில், தி.மு.க. தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் என்.பெரியசாமியை தூத்துக்குடியில் சந்தித்து, நகராட்சியின் முன் அனுமதி பெறாமல் இத்தொகுப்பு வீடுகள் சட்ட விரோதமாகக் கட்டப்பட்டு வருவதாகவும், கட்டிடப் பணிகளை உடனடியாக நிறுத்திட ஆவன செய்யுமாறும் முறையிட்டுள்ளனர்.
இக்கோரிக்கை குறித்து பரிசீலித்து ஆவன செய்யப்படும் என அவர் அப்போது தெரிவித்ததாக சந்திப்பில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
தகவல்:
எஸ்.ஆர்.பி.ஜஹாங்கீர் மூலமாக,
எம்.எல்.அப்துர் ரஷீத் அவ்லியா,
கொச்சியார் தெரு, காயல்பட்டினம். |