காயல்பட்டினம் துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளியின் புதிய கட்டிட திறப்பு விழா 30.12.2010 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெற்றது.
துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் பாதையில், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தார் சாலை அமைத்துக் கொடுத்த தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ஜெயதுரையே அச்சாலையைத் திறந்து வைத்தார்.
பின்னர், இலங்கை காயல் நல மன்றம் (காவாலங்கா) அனுசரணையில் கட்டப்பட்டுள்ள துளிர் பணியாளர் குடியிருப்பு கட்டிடத்தை தமிழக சமூக நலத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் திறந்து வைத்தார்.
சென்னை க்ரஸெண்ட் கல்லூரியின் முன்னாள் மாணவர் மன்றம், டாக்டர் மஜீத் ஆகியோரின் அனுசரணையில் கட்டப்பட்ட விருந்தினர் தங்கும் அறையை திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.
சென்னை தி.நகர் எல்.கே.எஸ்.கோல்ட் ஹவுஸ் அனுசரணையில் கட்டப்பட்ட கலையரங்கத்தை, நடுவண் இணையமைச்சர் நெப்போலியன் திறந்து வைத்தார்.
பின்னர் நடைபெற்ற விழாவிற்கு துளிர் அறக்கட்டளை அறங்காவலர்களுள் ஒருவரான கே.எம்.இ.நாச்சி தம்பி தலைமை தாங்கினார். ஹாஜி ராவன்னா அபுல்ஹஸன், துளிர் மறுவாழ்வுத் துறை தலைவர் அ.வஹீதா, பெற்றோர் - ஆசிரியர் கழக செயலாளர் ஆயிஷா ஸாஹிப் தம்பி, இலங்கை காயல் நல மன்ற (காவாலங்கா) துணைச் செயலாளர் ஹாஜி பி.எம்.ரஃபீக், சென்னை க்ரஸெண்ட் கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்க செயலர் சிராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
ஹாஃபிழ் ஜக்கரிய்யா கிராஅத் ஓதி விழாவைத் துவக்கி வைத்தார். தமிழ்த்தாய் வாழ்த்தும், துளிர் வாழ்த்துப் பாடலைத் தொடர்ந்து, துளிர் அறக்கட்டளை நிறுவனர் வழக்குறைஞர் அஹ்மத் அறிமுகவுரையாற்றினார்.
சிறப்பு விருந்தினர்களான நடுவண் இணையமைச்சர் நெப்போலியன், தமிழக அமைச்சர் பெ.கீதாஜீவன், தூத்துக்குடி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ஜெயதுரை, திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
துளிர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சித்தி ரம்ஸான் நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.
விழாவில் நகர தி.மு.க. நிர்வாகிகள், துளிர் அறங்காவலர்கள், நிர்வாகிகள், ஆசிரியர்கள், நகர பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
தகவல்:
சித்தி ரம்ஸான்,
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்,
துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளி,
ஏ.கே.எம்.நகர், காயல்பட்டினம். |