தமிழ்நாடு சமூக நல வாரியம் சார்பில் பெண் குழந்தைகளின் உரிமைகளும், சமமற்ற பாலின விகிதாசாரத்தில் ஏற்படும் எதிர்காலத்தின் விளைவுகள் என்ற தலைப்பில் இஸ்லாமிய பெண்களுக்கான 2 நாட்கள் கருத்தரங்கு காயல்பட்டினம் துளிர் சிறப்பு குழந்தை பள்ளி வளாகத்தில் நடந்தது.
கருத்தரங்கிற்கு தலைமை வகித்து தமிழ்நாடு சமூக நல வாரியத் தலைவி ருக்கையா சல்மா பேசியதாவது:-
அரசின் திட்டங்கள், சட்டங்கள் குறித்து தெரியப்படுத்தவே கருத்தரங்கு நடத்தப்படுகிறது. ஆணுக்கு பெண் நிகராக நடத்தப்படுவதில்லை. ஒவ்வொரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பாதிப்புகள் இருக்கும். அதுகுறித்து விழிப்புணர்வுகள் பெண்களிடம் இல்லை. இஸ்லாமிய பெண்களுக்கு விழிப்புணர்வு மிகவும் குறைவாக இருக்கும். அதனால்தான் இஸ்லாமிய பெண்களைத் தேடி பிரச்சினைகளிலிருந்து விடுபட வைப்பதற்காக முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
கருத்தரங்கைத் துவக்கி வைத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மகேஷ்வரன் பேசியதாவது:-
தமிழகத்தில் ஆயிரம் ஆண்களுக்கு, 954 பெண்கள்தான் உள்ளனர். இதனால் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய முடியாது. ஆனால் கேரளாவில் ஆயிரம் ஆண்களுக்கு 1058 பெண்கள் உள்ளனர். இதற்கு காரணம் அங்கு பெண்களுக்கு சம உரிமை வழங்கப்படுகிறது. பெண்கள் கல்வி அறிவு பெற்று உள்ளனர். பெண்களுக்கு சம அந்தஸ்து, சொத்தில் சம பங்கு, கல்வி அறிவு கொடுக்க வேண்டும். அதன்மூலம் பெண்கள் முன்னேற்ற அடைய முடியும் என்றார்.
முன்னதாக துளிர் அறக்கட்டளை தலைவர் வழக்குறைஞர் அஹ்மத் வரவேற்றார். துளிர் மறுவாழ்வு மைய திட்டத் தலைவர் அ.வஹீதா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஆயிஷா சாஹிப் தம்பி, காயல்பட்டினம் அரிமா சங்க தலைவர் தலைவர் சதக்கதுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் திருச்செந்தூர் வருவாய் வட்டாட்சியர் பாக்கியம் தேவகிருபை, வட்டாட்சியர் சந்திரன், வருவாய் ஆய்வாளர் சுகுமார், காயல்பட்டினம் கிராம நிர்வாக அதிகாரி செல்வலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு சமூக நல வாரிய திட்ட அலுவலர் பழனியப்பன் நன்றி கூறினார்.
நன்றி:
தினமணி |