காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கிய பேரவை கீழ்க்காணும் மனுவை தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அனுப்ப வேண்டுகோள் விடுத்துள்ளது.
தருனர்
அனைத்து அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள்,
அனைத்து முஸ்லிம் ஜமாஅத் மற்றும் புறநகர் பகுதி பொதுமக்கள்,
காயல்பட்டினம்.
தூத்துக்குடி மாவட்டம்.
பெறுனர்
மாண்புமிகு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள்,
தமிழ்நாடு துணை முதல் அமைச்சர்,
சென்னை.
மாண்புமிகு அய்யா,
பொருள் : தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் கடற்கரை கோஸ்மரை தர்கா அருகில் மோசடி கிரையம் செய்யப்பட்ட புல எண் : 358/2 இடத்தில் 169 வீடுகள் கட்டப்பட்டு வெளியூர் வாசிகள் குடியேற்றப்படுவதை தடுத்து நிறுத்தி விசாரணைக்கு உத்தரவிட வேண்டுதல் தொடர்பாக.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் நகராட்சி பகுதியில் 44,400 மக்கள் வாழ்கின்றனர்.
முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையிலும், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட அனைத்து மக்களும் ஆண்டாண்டுகாலமாக இந்நகரில் வாழ்ந்து வருகின்றனர். எண்ணற்ற ஏழைகளும் குடிசைவாசிகளும் இதில் அடங்குவர்.
தற்போது இந்நகரின் கடற்கரை கோஸ்மரை தர்காவையொட்டி 169 வீடுகள் ராஜீவ்காந்தி சுனாமி புனரமைப்பு திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்டு வருகிறது.
காயல்பட்டினத்தின் ஒட்டுமொத்த மக்களும் புறக்கணிக்கப்பட்டு, தடையில்லா சான்று கூட பெறப்படாமல், நகராட்சியின் ஒப்புதல் இல்லாமல் இந்த குடியிருப்புகள் இரவு பகலாக கட்டப்பட்டு வெளியூர் வாசிகள் குடியேற்றப்பட உள்ளனர். நில ஆர்ஜிதம் பற்றியோ, பயனாளிகள் தேர்வு பற்றி எந்த காலத்திலும் எந்த ஒரு அறிவிக்கையும் செய்யப்படாமல் மக்கள் கவனமின்றியே பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
தகுதியான ஏழைகள் இந்நகரில் இருக்க வெளியூர் செல்வந்தர்கள் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளதும், அப்படி தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அவரவர் வசிக்கும் ஊர்களில் வீடுவாசல்கள் இருப்பதும் இந்நகர மக்களை அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் ஆளாக்கியுள்ளது.
2001ல் 31,640 ஆக இருந்த காயல்பட்டினம் மக்கள் தொகை, 2011ல் 44,400 ஆக அதிகரித்துள்ளது. ஆனால் இதில் 2 சதவீதம் மட்டுமே உள்ளுர்வாசிகள். 11 சதவீதத்திற்கும் அதிகமானோர் வெளியூர்களிலிருந்து குடியேறி உள்ளனர்.
இந்திய ஜனநாயக நாட்டில் யார்வேண்டுமானாலும் எங்கும் வசிக்கலாம், தொழில் செய்யலாம் என்றாலும், இங்கு கடற்கரை குடியேற்றங்களால் எண்ணற்ற பிரச்சினைகள் உருவாகின்றன. 20-04-2007ல் காயல்பட்டினம் கொம்புத்துறையில் பயங்கர வெடிமருந்து பொருட்கள் பதுக்கல் சம்பவமே இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
மேலும் பன்னிரண்டு நூற்றாண்டு வரலாற்று பெருமைமிக்க காயல்படினத்தின் பெயரே இருட்டடிப்பு செய்யப்பட்டு கொம்புத்துறை, சிங்கித்துறை என துறைமுகங்கள் மீன்வளத்துறையால் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடயக்குடி, கற்புடையார் பள்ளி வட்டம் என்ற பாரம்பரிய பெயர்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.
ஒரே பகுதியில் ஆயிரக்கணக்கான ஒரே சமூகத்தவர் குடியேற்றப்படுவதை சாதகமாகக் கொண்டு தனி ஊராட்சி கோரிக்கையும் எழுந்துள்ளது. காயல்பட்டினத்தின் 1வது வார்டு கொம்புத்துறை, 7வது வார்டு சிங்கித்துறை, 14வது வார்டு சுனாமி காலணிகளை காயல்பட்டினத்தில் இருந்து பிரித்து தனி ஊராட்சி அமைத்துதர வேண்டும் என்ற கோரிக்கை 27-06-2008 முதல் அவர்களால் அரசுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
இப்படிப்பட்ட நிலையில் மேலும் 169 வீடுகள் என்பது இந்நகரின் பொது அமைதியை முற்றிலுமாக சீர்குலைத்துவிடும் என அஞ்சுகிறோம். இதுபற்றி மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். காயல்பட்டினம் நகராட்சியும் சுனாமி வீடுகள் தேவையில்லை என மூன்று முறை தீர்மானங்கள் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பியும் வீடுகட்டும் பணி தொடங்கப்பட்டது.
எனவே காயல்பட்டினத்தின் ஒட்டுமொத்த ஊர்மக்களின் உணர்வுகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல 04-01-2011 அன்று முழுஅடைப்பும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தினோம்.
இந்த உணர்வு பூர்வமான பிரச்சினைகள் ஒருபுறமிருக்க, இந்த 169 வீடுகள் கட்டப்படும் இடம் மோசடி கிரையம் செய்யப்பட்ட இடம் என்பதும், மத்திய, மாநில அரசுகள் சில நபர்களால் திட்டமிட்டு ஏமாற்றப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இது தொடர்பாக 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
காயல்பட்டினம் புல எண் 358/2, ஏக்கர் 4 செண்டு 66 நிலம் ஆதியில் ம.கு.முகைதீன் மீராசாகிப் மனைவி மகுது பாத்தும்மாள் என்பவருக்கு சொந்தமாக இருந்து, 10-10-1968ல் மு.மதார்சாகிப் குமாரர் மு.ம.முகம்மது இபுராகிம் என்பவருக்கு கிரையமாகி, அதன்பின் 21-08-1969ல் ஹாஜி முகம்மது பாசுல் அஷ்ஹபு புதல்விகள் மு.பா.அ.ஹஸீனா பேகம், மு.பா.அ.முஹ்ஸினா பேகம் ஆகியோருக்கு கிரையமாகி அவர்கள் அனுபவத்தில் இருந்து வந்தது. இதற்கான ஆவணங்களும் வில்லங்கம் இல்லை என்ற சான்றும், அவார்டு புத்தக நகலும் உள்ளன. இதுபற்றி மாவட்ட நிர்வாகத்திற்கும் முறைப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலத்தில் 169 வீடுகளும் கட்டப்படுவதை எதிர்த்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் உள்ளிட்ட நால்வர் மீது திருச்செந்தூர் உரிமையியல் நீதிமன்றத்தில் ஓ.எஸ்.174/2010 வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
இதுதவிர எம்.ஏ.ஜின்னா என்பவரும், வேறு சிலரும் சேர்ந்து தங்களின் அனுமதி இல்லாமல் தங்கள் பங்கை கிரையம் செய்து கொடுத்துள்ளதாக எம்.எச்.முஹ்யித்தீன் லாபிர் என்பவர் திருச்செந்தூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் அ.வ.எண் 45/2009 வழக்கு தொடர்ந்துள்ளார்.
காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை தலைவர் எம்.எம்.உவைஸ் ஹாஜியார், சுனாமி மாவட்ட செயலாக்க திட்ட ஒருங்கிணைப்பாளர், திருச்செந்தூர் வருவாய் வட்டாட்சியர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் மீது திருச்செந்தூர் உரிமையில் நீதிமன்றத்தில் அ.வ.எண் 59/2010 வழக்கு தொடர்ந்துள்ளார்.
சம்பந்தப்பட்ட ஆவணங்களின்படி இது மோசடி கிரையம் என்பதும், எம்.ஏ.ஜின்னா மற்றும் பிச்சையா உள்ளிட்ட நபர்களால் தெரிந்தே மத்திய, மாநில அரசுகள் மோசடிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன என்பதும் தெரியவருகிறது.
எனவே 169 வீடுகள் காயல்பட்டினத்தில் கட்டுவதை நிறுத்திவிட்டு, சட்ட ரீதியான பிரச்சனை தொடர்பாக முழுவிசாரணைக்கு உத்தரவிடவும். முன் குறிப்பிட்டுள்ள காயல்பட்டினம் மக்களின் உணர்வுப் பூர்வமான பிரச்சனைகளுக்கு வருவாய், காவல்துறை, மீன்வளத்துறை மற்றும் மக்கள் பிரதிநிதிகள், நகராட்சி மற்றும் மீனவ பிரதிநிதிகள் அடங்கிய சமாதான குழுவை கூட்டி சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் உருவாகாமல் அமைதியை காப்பாற்றவும் தங்களை பணிவுடன் வேண்டுகிறோம்.
நன்றி! தங்கள் உண்மையுள்ள
குறிப்பு : மேற்கண்ட மனுவை வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் உள்ள காயல் வாசிகள் தமிழ்நாடு துணை முதல் அமைச்சர் அவர்களுக்கு பேக்ஸ் (+91 44 25676022) அல்லது இமெயில் (cmcell@tn.gov.in) மூலம் அனுப்ப அன்புடன் வேண்டுகிறோம்.
தகவல்:
காயல் அமானுல்லா, காயல் மெஹபூப் மற்றும் எம்.எல்.அப்துர் ரஷீத் அவ்லியா மூலமாக,
காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை. |