சமூக ஆர்வலரும், காயல்பட்டணம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்மா பள்ளியின் செயற்குழு உறுப்பினரும், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் கவுரவ ஆலோசகருமான கொச்சியார் தெருவை சார்ந்த எம்.எல்.ஷாஹுல் ஹமீத் (எஸ்.கே.) அவர்கள் 12.01.2011 அன்று காலை 11.20 மணியளவில் காலமானார்கள். அவருக்கு வயது 69.
அவரது ஜனாஸா நல்லடக்கம், மறுநாள் 13.01.2011 அன்று காலை 10.30 மணிக்கு காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டிருந்தது. நல்லடக்கம் நிறைவுற்றதும், நண்பகல் 11.30 மணிக்கு கொச்சியார் தெருவிலுள்ள அவரது இல்லம் முன்பு, நகரப் பிரமுகர்களின் சார்பில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
காயல்பட்டினம் முஸ்லிம் அய்க்கியப் பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ் தலைமை தாங்கினார். அதன் செயலர் ஹாஜி பிரபு சுல்தான், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரும், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவனர் தலைவருமான ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மான், இத்திஹாதுல் இக்வானில் முஸ்லிமீன் (ஐ.ஐ.எம்.) குழும நிறுவனங்களின் தலைவர் ஹாஜி எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ, புதுப்பள்ளி தலைவரும், ஐக்கிய விளையாட்டு சங்க துணைத்தலைவருமான ஹாஜி எஸ்.எம்.உஸைர், எஸ்.கே. அவர்களின் பெரிய தந்தை வழி சகோதரரும், அவரது தங்கையின் கணவருமான ஹாஜி எம்.எச்.எம்.சுலைமான், எஸ்.கே. அவர்களின் மூத்த மருமகன் எம்.எல்.அப்துர்ரஷீத் என்ற அவ்லியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட துணைத் தலைவர் ஹாஜி மன்னர் பாதுல் அஸ்ஹப் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார். எஸ்.கே. அவர்களின் பேரன் ஹாஃபிழ் ஏ.முஹம்மத் கிராஅத் ஓதி நிகழ்வைத் துவக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, நகரப் பிரமுகர்கள் மற்றும் பொது நல அமைப்புகளின் பிரநிதிகள் இரங்கல் உரையாற்றினர்.
ஆஸாத் - தூத்துக்குடி மாவட்டத் தலைவர், த.மு.மு.க.:
துவக்கமாக, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஆஸாத் உரையாற்றினார். த.மு.மு.க. இயக்கத்தில் அவர் தன்னை அங்கப்படுத்திக் கொண்டிருந்த காலங்களில் ஆற்றிய சமூகச் சேவைகள் குறித்து அவர் தெரிவித்தார்.
அத்துடன், எஸ்.கே. அவர்களின் மறைவு குறித்து இலங்கை வானொலியில் அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர் உருக்கமாக இரங்கல் தெரிவித்த விபரங்களையும் எடுத்துரைத்தார்.
ஹாஜி வாவு நாஸர் – தலைவர், நகர இ.யூ.முஸ்லிம் லீக்:
தொடர்ந்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நகர தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் உரையாற்றினார்.
தனதிளமைப் பருவத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் நகர இளைஞரணி நிர்வாகியாக அவர் செயலாற்றிய சரித்திரங்களை அவர் தனதுரையில் நினைவுகூர்ந்தார்.
கே.எம்.முஹம்மத் தம்பி - ஐ.ஐ.எம்., அல்ஜாமிஉல் அஸ்ஹர், ஆயிஷா சித்தீக்கா சார்பாக...
அடுத்து, காயல்பட்டினம் இத்திஹாதுல் இக்வானில் முஸ்லிமீன் - இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் (ஐ.ஐ.எம்.), அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித், ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரி ஆகியவற்றின் சார்பாக, கே.எம்.முஹம்மத் தம்பி உரையாற்றினார்.
எஸ்.கே. அவர்களின் ஆங்கிலப் புலமை, மேற்படி நிர்வாகங்களில் அங்கம் வகித்த நிலையில் அவராற்றிய சமூகச் சேவைகள் குறித்து அவர் தனதுரையில் நினைவுகூர்ந்தார்.
டாக்டர் ஜாகிர் நாயக்கின் படைப்புகள் தமிழாக்கம் செய்யப்பட்டு வருவதாகவும், தமிழாக்கப் பணியை மறைந்த எஸ்.கே. அவர்கள் முழு ஈடுபாட்டுடன் செய்து தந்ததாகவும், இதுவரை 6 தலைப்புகளில் தமிழாக்கம் செய்யப்பட்ட குறுந்தகடுகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், ஏழாவது தலைப்பு தயாராகிக் கொண்டிருந்த நிலையில் அவர்கள் மறைந்துள்ளது, நீச்சல் தெரியாத ஒருவன் நடுக்கடலில் தத்தளிக்கும் நிலைக்கொப்ப தான் தற்போது உள்ளதாகவும் அவர் தனதுரையில் தெரிவித்தார்.
ராம் குமார் - அருணாச்சலபுரம், காயல்பட்டினம்:
பின்னர், காயல்பட்டினம் அருணாச்சலபுரம் மக்கள் சார்பாக நகரின் பல்வேறு பொதுப்பணிகளில் தன்னையும் அய்க்கியப்படுத்திக் கொண்டுள்ள ராம்குமார் உரையாற்றினார்.
தனது திருமணத்தை எஸ்.கே. அவர்கள் தலைமையேற்று நடத்தித் தந்தார் என பெருமிதத்துடன் தெரிவித்த அவர், அவருடன் சேர்ந்த தானும் பல நகர்நலப் பணிகளில் இணைந்து செயல்பட்டுள்ளதாகவும், காயல்பட்டினத்தில் இதுவரை நடைபெற்றுள்ள பல பெருமக்களின் மறைவுக்கான இரங்கல் கூட்டங்களில் தான் பங்கேற்றுள்ளதாகவும், ஆனால், இந்த இரங்கலில் மட்டுமே தனக்கும் பேச வாய்ப்பளித்துள்ளதை தான் மிகவும் பாக்கியமாகக் கருதுவதாகவும் தெரிவித்தார்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அவரது பாவப் பிழைகளைப் பொருத்தருளி, அவருக்கு ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவர்க்கத்தைத் தர வேண்டும் என்று தான் பிரார்த்திப்பதாக அப்போது அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேச முனைந்த அவர், கட்டுப்படுத்தவியலாத அழுகை காரணமாக தன் பேச்சை குறைத்து முடித்துக் கொண்டார்.
எம்.எச்.எம்.ஸதக்கத்துல்லாஹ் - நகரச் செயலாளர், தே.மு.தி.க.:
தொடர்ந்து, தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் கட்சியின் நகரச் செயலாளர் எம்.எச்.எம்.ஸதக்கத்துல்லாஹ் உரையாற்றினார்.
எந்த அரசியலமைப்பிலும் அங்கம் வகிப்பது தவறில்லை... அவ்வாறு அங்கம் வகிப்பதால் அவ்வமைப்பின் பணிகளுக்கு உறுதுணையாக இருப்பதோடு மட்டுமல்லாமல், தான் சார்ந்துள்ள சமுதயாத்திற்கு அதனைக் கொண்டு என்ன நற்பணியாற்றினார் என்பதே முக்கியமாகக் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும் என எஸ்.கே. அவர்கள் தன்னிடம் அடிக்கடி கூறியதாக அவர் தெரிவித்தார்.
அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகளிலிருக்கையில், நகரின் அய்க்கியம், சமய நல்லிணக்கம் ஆகிய அம்சங்கள் குறித்து மிகுந்த கவனத்துடன் செயலாற்ற வேண்டும் என அடிக்கடி அவர் தந்து வந்த ஆலோசனைகளைச் சிரமேற்று, இனி வருங்காலங்களில் தான் செயல்படப் போவதாக அப்போது அவர் மேலும் தெரிவித்தார்.
ஹாஜி என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன் - நகர பொதுநல அமைப்புகள் சார்பாக...
அடுத்து, காயல்பட்டினம் நகரின் அனைத்து பொதுநல அமைப்புகள் சார்பாக, அல்-அமீன் இளைஞர் நற்பணி மன்றத்தைச் சார்ந்த ஹாஜி என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன் உரையாற்றினார்.
நகர மக்களை அய்க்கியப் படுத்துவதிலும், நகரின் இளைஞர்கள் முதல் பெரியோர் வரை அனைவரையும் நகர்நலப் பணிகளாற்ற அவர் உற்சாகப்படுத்துவதிலும் தனக்கென தனி பாணியை எஸ்.கே. அவர்கள் அமைத்துக் கொண்டதாக அவர் தனதுரையில் தெரிவித்தார்.
அத்துடன், அவர் மறைவுக்கு முன் இறுதியாக, காயல்பட்டினம் முஸ்லிம் அய்க்கியப் பேரவையின் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆற்றிய உரையை யாரும் மறக்கவியலாது என்றார்.
ஹாஜி பி.எஸ்.ஏ.பல்லாக் லெப்பை - ஐக்கிய விளையாட்டு சங்கம்:
காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கம் (USC) சார்பாக, அதன் தலைவர் ஹாஜி பி.எஸ்.ஏ.பல்லாக் லெப்பை உரையாற்றினார்.
தனது இளம்பிராயம் தொட்டு இன்று வரை சுமார் 60 வருடங்கள் எஸ்.கே. அவர்களுடன் தான் நெருங்கிய நட்பு கொண்டிருந்ததாக உருக்கத்துடன் தெரிவித்தார்.
அவ்வப்போது தமக்குள் பல்வேறு அம்சங்கள் குறித்து தீவிரமாக விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்ததாகவும், தாங்கள் இருவரும் உரக்க சப்தமிட்டு விவாதிப்பதைக் கேள்வியுற்று அவ்விடம் வந்த பலர், ஆங்கிலத்தில் நாங்கள் சண்டையிடுவதைப் பார்த்துவிட்டு, “இவங்க ஏதோ இங்கிலீஷ்ல சண்டை பிடிக்கிறாங்க... நமக்கு என்ன எளவு விளங்கப்போகுது...? பேசாம போவோம்...” என்று கூறியவாறு சென்று விடுவர் என்றும் நா தழுதழுக்க தெரிவித்தார்.
“ஒரு கட்சி கூட பாக்கியில்லாமல் எல்லா கட்சியிலும் இருந்திருக்கிறாயே...?” என்று நான் கேட்டேன்... “எந்தக் கட்சியில் இருந்தாலும் நான் என்ன செய்தேன் என்பதே எனக்கு முக்கியம்“ என்றான். “அப்படியானால் பி.ஜே.பி.யிலும் சேர மாட்டாயா...?” என்று கேட்டேன். “அவங்க என்னை அழைத்திருந்தால் அங்கும் சென்று என்னால் என் வழியில் செயல்பட இயலும் என்ற நிலையிருக்கும் வரை அதிலிருந்திருப்பேன்“ என்று நகைச்சுவையுடன் கூறுவார்... இப்படியாக எங்களுக்கிடையில் சூடான விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்.
“ஐக்கிய விளையாட்டு சங்கத்தில் நடைபெறும் கால்பந்தாட்டங்களில் எஸ்.கே.யின் நேர்முக வர்ணனையைக் கேட்பதற்கென்றே ஒரு கூட்டமிருக்கும். அதில் நானும் ஒருவன். அனைவரையும் ஆர்வப்படுத்தும் விதத்திலும், சமயோசித புத்தியுடன் கூடிய நகைச்சுவையோடும் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் அவனது நேர்முக வர்ணனையை என்னால் மறக்க இயலவில்லை...” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
தனதிறுதிக் காலத்தில், காயல்பட்டினம் முஸ்லிம் அய்க்கியப் பேரவையுடன் இணைந்து சிறந்த முறையில் செயலாற்றியதாக அவர் புகழ்ந்துரைத்தார்.
ஹாஜி ஏ.ஆர்.தாஹா - தம்மாம் காயல் நற்பணி மன்றம்:
தொடர்ந்து, சஊதி அரபிய்யா - தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதி கவிஞர் ஹாஜி ஏ.ஆர்.தாஹா இரங்கல் கவிதை வாசித்தார். (விபரம் தனிச்செய்தியாகத் தரப்படும்...)
ஷாஜஹான் - இந்திய தேசிய காங்கிரஸ்:
பின்னர், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பாக ஷாஜஹான் உரையாற்றினார். கோவை சிறைவாசிகளின் விடுதலைக்காக அவர் சிரமேற்கொண்ட பணிகள் குறித்தும், அந்த வகைக்காக வெளிநாடுகளுக்குச் சென்று அவர் நிதி திரட்டிக் கொடுத்த விதம் குறித்தும் தனதுரையில் அவர் விளக்கிப் பேசினார்.
சென்னைக்கு அவர் என்று வந்தாலும், அங்கே சந்திக்கும் முதல் நபராக தான் இருந்ததாகவும், அவரது உடமைகள் அனைத்தையும் தனது பாதுகாப்பிலேயே தந்துவிட்டுச் செல்வார் என்றும் அவர் தெரிவித்தார்.
சென்னையிலுள்ள காயல்பட்டினம் ஐக்கிய சங்கம், சென்னைவாழ் காயலர்கள், தான் சார்ந்துள்ள காங்கிரஸ் கட்சி ஆகியவற்றின் சார்பாக தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் அப்போது தெரிவித்தார்.
ஹாஜி ஏ.எஸ்.ஜமால் முஹம்மத் என்ற ஜமால் மாமா:
தொடர்ந்து, ஹாங்காங் தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் தலைவர் ஹாஜி ஏ.எஸ்.ஜமால் முஹம்மத் என்ற ஜமால் மாமா உரையாற்றினார்.
நடைபெற்று முடிந்த நல்லடக்க நிகழ்ச்சியிலும், அதனைத் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த இரங்கல் கூட்டத்திலும் பெருந்திரளாகக் குழுமியிருக்கும் மக்களே மறைந்த எஸ்.கே. அவர்களின் மக்கள் சேவைக்கான மகத்தான நடமாடும் சான்றுகள் என்று அவர் தனதுரையில் தெரிவித்தார்.
ஆங்கில மொழியில் அவருக்கிருந்த அளப்பரிய ஆற்றல் குறித்து வியந்துரைத்த அவர், இலங்கை அரசுடன் இணைந்து அவராற்றிய சேவைகள், அக்காலங்களில் அவரது கவனிக்கத்தக்க செயல்பாடுகள் மிகுந்த பாராட்டுக்குரியவை என்றும், அவரது திறமையை நன்குணர்ந்துகொண்ட இலங்கை அமைச்சர்கள் பலர் அவரை இலங்கையிலேயே இருந்து விடுமாறு வற்புறுத்திய சம்பவங்களையும் நினைவுகூர்ந்தார்.
ஹாஜி செய்யித் முஹம்மத் அலீ - ஜலாலிய்யா சங்கம்:
அடுத்து, காயல்பட்டினம் ஜலாலிய்யா சங்கம் சார்பாக ஹாஜி செய்யித் முஹம்மத் அலீ உரையாற்றினார்.
கடற்கரையில் புதிதாக கட்டப்பட்டு வரும் தொகுப்பு வீடுகள் குறித்த பிரச்சினை சம்பந்தமாக மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவனங்களை ஆயத்தம் செய்து வைத்திருந்ததாகவும், மறுநாள் அவரும் இணைந்து வருவிருந்ததாகவும், அதற்குள் இறைவன் அவன் பக்கம் அவரை அழைத்துக் கொண்டான் என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.
காயல்பட்டினத்தில் தமது விலாசத்தால் மட்டுமே (இனிஷியல்) அழைக்கப்பட்டு சரித்திரத்தில் இடம்பெற்றோர், எல்.கே., எம்.கே.டி., எஸ்.ஓ., எம்.டி.எஸ்., அ.க. போன்ற வெகு சிலர்தான் எனவும், அந்த வரிசையில் எஸ்.கே. அவர்களும் தனக்கென ஓரிடத்தைப் பெற்றுக் கொண்டவர் என்றும் அவர் மேலும் கூறினார்.
இளந்தளிர் முத்து - இரத்தினபுரி:
தொடர்ந்து, காயல்பட்டினம் இரத்தினபுரி மக்கள் சார்பில் இளந்தளிர் முத்து உரையாற்றினார்.
மத நல்லிணக்கத்திற்காக பெரும் பாடுபட்டவர் எஸ்.கே. என்றும், தலித் மக்களும் முஸ்லிம்களும் இனத்தால் ஒரு குலத்தினரே என்று எஸ்.கே. மாமா அடிக்கடி சொல்வார் என்றும், தலித் - முஸ்லிம் ஒற்றுமையை என்றும் அவர் வலியுறுத்திக் கொண்டே இருப்பார் என்றும், இந்த எஸ்.கே. போன்று இன்னும் பல எஸ்.கே.க்கள் உருவாக வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஹாஜி எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர் - இளைஞர் ஐக்கிய முன்னணி:
அடுத்து, காயல்பட்டினம் இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) சார்பாக அதன் செயலர் ஹாஜி எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர் உரையாற்றினார்.
எஸ்.கே. மாமா எல்லோருக்கும் சொந்தம்... அவர் ஓயாமல் சிறகடித்துப் பறந்த பறவை... அனைத்து சமூக நல அமைப்புகளின் மூலம் மக்கள் நலப் பணியாற்றி, தனக்கென தனி முத்திரை பதித்தவர்... இளைஞர்களை நேரான வழியில் நடத்தியவர்... பரந்த மனப்பான்மை கொண்டவர்... உலகில் பல துறைகள் உள்ளன. நமக்கெல்லாம் பெயர்கள் மட்டுமே தெரிந்த பல துறைகள் குறித்த விரிவான விபரங்களையும் அவர் தெரிந்து வைத்திருந்தார்... என்று அவர் தனதுரையில் தெரிவித்தார்.
மவ்லவீ ஹாமித் பக்ரீ மன்பஈ - காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை:
பின்னர், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை சார்பாக மவ்லவீ ஹாமித் பக்ரீ மன்பஈ உரையாற்றினார்.
“உங்களை நாம்........ உயரிழப்பைக் கொண்டும் சோதிப்போம்” என்ற இறைவசனத்திற்கேற்ப இன்று நமக்கு ஏற்பட்டுள்ள சோதனை இது!
துவக்க காலத்திலிருந்து என்னை செதுக்கியவர்... நான் தவறிழைத்ததாக அவர் கருதியபோதெல்லாம் உரிமையுடன் கடிந்தும், முகம் சுளித்தும் எனக்கு அறிவுரை வழங்கிக் கொண்டே இருந்தவர்... அழைப்புப் பணியின் அவசியம், அதனைச் செய்கையில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகள் குறித்து விரிவான பாடம் நடத்தியவர்...
இன்று தமிழகத்தில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க திறமைகளுடன் உலாவரும் பல தலைவர்களை உருவாக்கிய பட்டறை அவர்... எழுத்தாற்றல், பேச்சாற்றல், மொழியாக்க ஆற்றல் என பல ஆற்றல்களை அல்லாஹ் அவருக்கு வழங்கியிருந்தான்...
இலங்கையில் அவர் கொண்டிருந்த அரசியல் ஈடுபாடு, அரசுத்துறையினர், அமைச்சர்கள் உள்ளிட்டோருடன் தனக்கிருந்த தொடர்புகளைக் கொண்டு சமுதாயப் பணியாற்றியமை... இப்படி அவரது தனிச்சிறப்புகளைக் கூறிக்கொண்டே இருக்கலாம்...
அவர்கள் சொத்துக்களைச் சேர்க்கவில்லை... ஆம், இந்த உலகத்தில் அழியும் சொத்துக்களைத்தான் அவர் சேர்க்கவில்லையே தவிர, என்றும் அழியாத மறுமை வாழ்விற்கான சொத்துக்களை நிறைவாக சேர்த்துச் சென்றுள்ளார்கள்...
இந்த உலகத்தில் அவரது பணியைத் தொடரும் பொருட்டு இரண்டு ஆண் மக்களையும், மூன்று பெண் மக்களையும், அவர்களுக்குத் துணையாக சமூக நலப்பணிகளாற்றும் நல்ல மருமக்களையும், மக்கள் நலனுக்காக - மகளிர் முன்னேற்றத்திற்காக தன்னையே மெழுகாக உருக்கிக் கொண்டிருக்கும் தன் நல்ல மனைவியையும் விட்டுச் சென்றிருக்கிறார்கள்.
அவர்களின் அன்பு மகன் ஷமீமுல் இஸ்லாம்... தஃவா துறையில் தனியார்வமிக்கவர்... சிறந்த நாவாற்றலுக்கும், எழுத்தாற்றலுக்கும் சொந்தக்காரர்... அனைவருடனும் நளினமாகப் பழகக் கூடியவர்...
அதுபோல, அவரது மற்றொரு மகன் ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ்... சிறந்த சமூக சேவகர்... தனது செய்தித்துறை ஈடுபாட்டால், இன்று உலக காயல் நல மன்றங்களை பல்வேறு மக்கள் நலப்பணிகளில் ஒருங்கிணைக்கும் ஒரு முக்கிய கருவியாக செயலாற்றிக் கொண்டிருப்பவர்...
இவர்கள்தான் எஸ்.கே. மாமா அவர்கள் விட்டுச் சென்றுள்ள மாபெரும் சொத்துக்கள்! ஆம், எஸ்.கே. மாமாவின் ஒட்டுமொத்த குடும்பமே சமுதாயத்திற்காக உழைக்கும் குடும்பம் என்பதை நாமறிவோம்.
சமூகத்தில் நிலவி வந்த பல பிரச்சினைகளை தனது சிறந்த பண்புகளால் தீர்த்து வைத்து, அனைத்து தரப்பு மக்களையும் அன்பால் இணைத்து வைத்தவர் எஸ்.கே. மாமா அவர்கள்.
காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவைக்கு தினமும் வந்து சென்று பொதுநலப் பணிகளாற்றியவர். அவ்வாறு பணியாற்றிக் கொண்டிருந்த நிலையிலேயே அவரது இவ்வுலக வாழ்வு முற்றுப் பெற்றுள்ளது.
எஸ்.கே. மாமாவுடைய வாழ்வின் அனைத்து அம்சங்களையும் தொகுத்து ஒரு நூலாக வெளியிட ஆவல் கொண்டுள்ளோம். அதற்கான முயற்சிகளில் விரைவில் இறங்கவிருக்கிறோம். அவ்வாறு அமையப்பெறும் நூல் சமுதாயத்தின் சிந்தனையைத் தூண்டக் கூடியதாக அமையும் இன்ஷாஅல்லாஹ்...
இவ்வாறு தனதுரையில் தெரிவித்த அவர், அதனைத் தொடர்ந்து, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ் அவர்கள் சார்பாக அவர் அளித்த இரங்கல் செய்தியை வாசித்தார்.
ஷமீமுல் இஸ்லாம் (எஸ்.கே.எஸ்.) - எஸ்.கே. அவர்களின் மகன்:
இறுதியாக மறைந்த எஸ்.கே. அவர்களின் மூத்த மகன் ஷமீமுல் இஸ்லாம் உரையாற்றினார்.
“மீன் பிடித்துக் கொடுப்பதை விட, மீன் பிடிக்கக் கற்றுக் கொடுப்பதே சிறந்தது“ என்ற கருத்திற்கேற்ப, எங்களை உருவாக்கியவர்கள் எங்கள் அன்புத் தந்தை...
உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நாங்கள் அறிந்த - அறியாத, எங்கள் தந்தையோடு மிகுந்த நெருக்கம் கொண்டிருந்த பலர் தொலைபேசி அழைப்புகள் மூலம் எங்களிடம் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்து, எங்கள் தந்தை மூலம் தாங்கள் பெற்ற அறிவை, திறமையை, நல்வாய்ப்புகளை அன்பொழுகத் தெரிவித்துக் கொண்டும், துஆ செய்துகொண்டும் உள்ளனர். இதுதான் இன்று எங்களுக்கு பெரிதும் ஆறுதலளிக்கும் ஒரே அம்சமாகும்.
எங்கள் தந்தை தம் வாழ்வில் யாருக்கேனும் தமது சொல்லாலோ, செயலாலோ - அறிந்தோ, அறியாமலோ தீங்கிழைத்திருந்தால் அவர்கள் அனைவரிடமும் நாங்கள் யாவரும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம்...
அவர்கள் யாரிடமாவது கடன் பட்டிருந்தால், அவர்களின் வாரிசுகள் என்ற அடிப்படையில் அக்கடன்களுக்கு நாங்களே பொறுப்பாளர்கள்... எனவே, எங்களை அணுகி அவரவர் கடன்களைப் பெற்றுக் கொள்ள வேண்டுகிறோம்...
என்று கண்ணீர் மல்க தெரிவித்ததோடு, “ஸுப்ஹானகல்லாஹும்ம...” என்ற கஃப்ஃபாரா துஆவுடன் தனதுரையை முடித்துக் கொண்டார்.
ஹாஜி டி.எம்.கே.முத்து செய்யித் அஹ்மத் - இமாம், மரைக்கார் பள்ளி:
இறுதியாக, மறைந்த எஸ்.கே. அவர்களின் சகலையும், காயல்பட்டினம் மரைக்கார் பள்ளியின் இமாமுமான ஹாஜி டி.எம்.கே.முத்து செய்யித் அஹ்மத் உரையாற்றினார்.
எஸ்.கே. எனக்கு 5 வயது இளையவர்... தன்னை மாமா என்று அன்போடு அழைப்பார்... என்றாலும் வாடா, போடா என்றுதான் நாங்கள் பேசிக்கொள்வோம்...
எனக்கு கருத்து வேறுபாடுள்ள இடங்களுக்குக் கூட அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க நான் எனது பைக்கில் அழைத்துச் செல்வேன்... அதை நான் ஒரு கவுரவக் குறைச்சலாக ஒருபோதும் எடுத்துக் கொண்டதில்லை... அந்தளவுக்கு ஆழமானது எங்கள் பழக்கம்... என்று அவர் தனதுரையில் தெரிவித்து, துஆவுடன் கூட்டத்தை நிறைவுபடுத்தினார்.
மதியம் 01.00 மணிக்கு இரங்கல் கூட்டம் நிறைவுற்றது. கூட்டத்தில் நகரின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.
தொகுப்பு மற்றும் படங்கள்:
ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத்,
அப்பாபள்ளித் தெரு, காயல்பட்டினம்.
|