இஸ்லாமிய தமிழ் இலக்கிய கழகத்தின் 15ஆவது மாநாடு தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் வரும் மே மாதம் 27,28,29 (வெள்ளி, சனி, ஞாயிறு) தேதிகளில் நடைபெறுகிறது.
இதுகுறித்து, இஸ்லாமிய தமிழ் இலக்கிய கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு பின்வருமாறு:-
இஸ்லாமிய தமிழ் இலக்கிய கழகத்தின் ஆலோசனைக் கூட்டம், அதன் உலக ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமையில், சென்னை காயிதெமில்லத் மன்ஸிலில் நேற்று (16.1.2011) நடைபெற்றது.
இலக்கிய கழக துணைத்தலைவர் அதிரை அருட்கவி முஹம்மத் தாஹா மதனீ கிராஅத் ஓதி கூட்ட்த்தைத் துவக்கி வைத்தார். பொதுச்செயலாளர் கலைமாமணி பேராசிரியர் சாயபு மரைக்காயர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
பொருளாளர் பேராசிரியர் முனைவர் அ.மு.நத்தர்சா, இலங்கை டாக்டர் ஜின்னா சர்புதீன், அமைப்புச் செயலாளர் பேராசிரியர் முனைவர் அஹ்மது மரைக்காயர், மகளிர் பிரிவு தலைவர் பேராசிரியை நஸீமா பானு, துணைத்தலைவர் காஜி ஜெய்னுல் ஆபிதீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், மாநில செயலாளர்கள் காயல் மகபூப், கமுதி பஷீர், மாநில இளைஞர் அணி அமைப்பாளர் கே.எம்.நிஜாமுதீன், ஆப்பனூர் பீர் முஹம்மத், கே.டி.கிஸர் முஹம்மது, ம.தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர் காயல் எஸ்.இ.அமானுல்லாஹ், காயல்பட்டினம் நகர பிரமுகர் எஸ்.எஸ்.சதகத்துல்லாஹ் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
காயல்பட்டினத்தில் 15ஆவது மாநாடு:
1993இல் தொடங்கப்பட்ட இஸ்லாமிய தமிழ் இலக்கிய கழகம் இதுவரை நாகூர், நீடுர், காரைக்கால், சென்னை புதுக்கல்லூரி, திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி, கோட்டக்குப்பம், முத்துப்பேட்டை, ராஜகிரி, புதுச்சேரி, மைலாடுதுறை, பள்ளப்பட்டி, பரமக்குடி, தஞ்சாவூர், அதிராம்பட்டினம் ஆகிய 14 இடங்களில் இலக்கிய மாநாடுகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
15ஆவது மாநாட்டை தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் எதிர்வரும் மே 27,28,29 தேதிகளில் மிகச்சிறப்பாக நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
27ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலையில் மாநாட்டின் துவக்கவிழா மற்றும் நூல்கள் வெளியீடுகள் வள்ளல் சீதக்காதி திடலிலும், 28ஆம் தேதி சனிக்கிழமை காலை ஜலாலியா திருமண மண்டபத்தில் மகளிர் கருத்தரங்கமும் நடைபெறுகிறது.
28ஆம் தேதி பிற்பகல் ஜலாலியா திருமண மண்டபத்திலும், சென்ட்ரல் மேனிலைப் பள்ளியிலும் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கும் ஆய்வரங்கங்கள் நடைபெறுகின்றன. அன்றிரவு சீதக்காதி திடலில் பட்டிமன்றம் நடைபெறுகிறது.
29ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை காலை ஜலாலியா திருமண மண்டபத்தில் கவியரங்கமும், மாலை வள்ளல் சீதக்காதி திடலில் மாநாட்டு நிறைவு விழாவும் நடைபெறுகிறது.
ஆய்வுக் கட்டுரைகள் முகவரி பட்டியல்கள்:
இம்மாநாட்டிற்காக ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கக் கோருவது என்றும், மாணவர்களிடையே கட்டுரைப் போட்டி நடத்தி பரிசுகள் வழங்குவது என்றும், இஸ்லாமுக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் காயல்பட்டினத்தின் பங்களிப்பு பற்றி தனித் தலைப்புக்களில் கட்டுரைகள் வரவேற்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
புதைந்து கிடக்கும் இலக்கியக் கருவூலங்களை வெளிக்கொணர இம்மாநாட்டில் முயற்சிப்பது என்றும், மறைந்து போன இலக்கியங்களைப் புதுப்பித்து வெளியிடுவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தமிழ் இலக்கிய எழுத்தாளர்கள், பேச்சாளர்களின் முகவரி பட்டியல்கள், இலக்கியச் சேவை புரிந்த நினைவில் வாழ்வோரைப் பற்றிய குறிப்புகளை நூலாக வெளியிடுவது என்றும், அதற்கான தகவல்களைத் திரட்டுவது என்றும் கூட்டத்தில் மேலும் முடிவு செய்யப்பட்டது.
இம்மாநாடு சம்பந்தமாக பொதுச் செயலாளர் பேராசிரியர் சாயபு மரைக்காயர் - காரைக்கால் அவர்களை 9842488047 என்ற எண்ணிலும்,
சென்னையில் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் அவர்களை 9500035786 என்ற எண்ணிலும்,
காயல்பட்டினத்தில் எஸ்.இ.அமானுல்லாஹ் அவர்களை 9443342222 என்ற எண்ணிலும்
தொடர்புகொள்ளலாம்.
இவ்வாறு இஸ்லாமிய தமிழ் இலக்கிய கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
உஸ்மான்,
அச்சுக்கோர்வையாளர்,
மணிச்சுடர் நாளிதழ், சென்னை. |