சாகுபுரம் டி.சி.டபிள்யு. நிறுவனம், பயிற்சி மற்றும் வளர்ச்சிக்கான இந்திய சமுதாயம் அமைப்பின் சாகுபுரம் கிளை ஆகிய நிறுவனங்கள் சார்பில், “மகிழ்வான குடும்பம்” என்ற தலைப்பில் குடும்ப நல நிகழ்ச்சி காயல்பட்டினம் ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸில் 16.01.2011 ஞாயிற்றுக்கிழமை மாலை 05.00 மணிக்கு நடைபெற்றது.
டி.சி.டபிள்யு. ஸ்ரீநிவாசன் தலைமை தாங்கினார். காயல்பட்டினம் நகர்மன்றத்தின் முன்னாள் தலைவரும், துளிர் மறுவாழ்வு திட்டப்பணிகள் தலைவரும், சிறுபான்மை முஸ்லிம் பெண்கள் அமைப்பின் தலைவருமான அ.வஹீதா முன்னிலை வகித்தார். காயல்பட்டினம் துளிர் அறக்கட்டளை, காயல்பட்டினம் அரிமா சங்கம் ஆகிவயற்றின் செயலர் ஹாஜி எம்.எல்.ஷேக்னா லெப்பை நிகழ்ச்சி அறிமுகவுரையாற்றினார்.
எல்.கே.மேனிலைப்பள்ளியின் ஆட்சிக்குழு உறுப்பினர் எல்.டி.இப்றாஹீம், சென்ட்ரல் மேனிலைப்பள்ளியின் தமிழாசிரியர் அப்துர்ரஸ்ஸாக் ஆகியோர் சிற்றுரையாற்றினர்.
பின்னர், மகிழ்வான குடும்பம் அமையப் பெறுவதற்கான வழிமுறைகள், குடும்ப வாழ்வில் ஏற்படும் பிரச்சினைகள், அப்பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து சாகுபுரம் டி.சி.டபிள்யு. நிறுவன மேலாளர் இரா.கணேஷ், நெல்லை மனோன்மனீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் இளைஞர் நலம் பிரிவின் இயக்குனர் முனைவர் ரோசரி மேரி ஆகியோர் சிறப்புரையாற்றினர். பின்னர் குடும்ப வாழ்வு குறித்த பொதுமக்களின் சந்தேகங்களுக்கு அவர்கள் விளக்கமளித்தனர்.
ஆர்.பி.எஸ்.ஷம்சுத்தீன் நன்றியுரையுடன் இரவு 08.30 மணிக்கு நிகழ்ச்சி நிறைவுற்றது. இந்நிகழ்ச்சியில் நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.
தகவல்:
எல்.டி.இப்றாஹீம்,
காயல்பட்டினம். |